புதன், 30 நவம்பர், 2011

அண்ணே....ஒரு நிமிஷம்ண்ணே...


இந்த சினிமாப் பாட்டெல்லாம் இருக்கு பாருங்க.... அது எதனால நமக்குப் பிடிச்சிப் போச்சுன்னு காரணமே சொல்ல முடியாது. பாட்டு இலக்கியத் தரமா இருக்கணும், அப்பத்தான் பிடிக்கும், அதுதான் பிடிக்கும்னும் ஒண்ணும்  வரையறை யாரும் வச்சிக்கவும் முடியாது இல்லீங்களா.... என்ன சொல்றீங்க...?

இப்பக் கூடப் பாருங்க... இந்தக் கொலைவெறிப் பாட்டு படுத்தற பாட்டை... என்னங்க இருக்கு அதுல... தூ... நானும் டெய்லி நாலஞ்சி தரம் கேட்டுப் பார்க்கறேன்... எத்தக் கண்டு அதை ரசிக்கிறாங்கன்னே தெரியல... இருங்க இன்னொரு தரம் அதக் கேட்டுடறேன்...

ஆனா ஒண்ணுங்க... எனக்கும் இந்த 'அண்ணன் என்னடா தம்பி என்னடா, உன்னைச் சொல்லிக் குத்தமில்லை, சட்டி சுட்டதடா' பாட்டெல்லாம் பிடிக்கும்ண்ணே...


நடுல பேசறதுக்கு சம்பந்தமில்லாம பாட்டெல்லாம் வந்தா  கண்டுக்காதீங்கண்ணே...  இந்த மீனாச்சி மேடம் கவனியுங்கன்னு சொல்லி ஞாபகப் படுத்தினாங்களாம் அதனால சில பாட்டுப் போடலாம்னு... எதாவது பாட்டப் போட்டு சும்மா வெட்டி அரட்டை அடிக்கலாம்னுட்டுதான்....


கர்நாடக சங்கீதம்தான் பிடிக்கும், அதுதான் ஒசத்தின்னு சொல்றவங்களுக்குக் கூட ஒண்ணு ரெண்டு கூத்தாடிப் பாட்டாவது பிடிச்சிருக்கும்..! (அவிங்க அப்படித்தான் சொல்வாங்கண்ணே ) சிமினா ச்சே.. ஸ்லிப் ஆஃப் தி டங்.... சினிமா பாட்டு ரசிக்கறவங்களுக்கும் ஒண்ணு ரெண்டு கர்நாடிக் மியூசிக்காவது பிடிச்சிருக்குமண்ணே கொறஞ்ச பட்சமா ஒரு 'குறை ஒன்றும் இல்லை'யாவது ரசிப்பாங்க...... அதுக்குக் கூட இந்த 'என்னன்னு தெரியாமப் பிடிச்சிப் போறது'தான் காரணம்ண்ணே... எல்லா பய புள்ளங்க மனசுக்குள்ளயும் குறை இருக்கும். அதாண்ணே.ஃபீலிங்கு..... குறை இல்லாத - அட மனக் குறையை சொல்றேண்ணே... - மனுசங்க யார் இருக்கா சொல்லுங்க பார்ப்போம்... அதை மறைச்சிகிட்டு தியாகம் பண்றாங்களாம்.... அதுக்கு இந்த மாரிப் பாட்டு உபயோகமா இருக்குமில்லே... பாசக்காரப் பயலுகளா வேசக்காரப் பயலுகளா... என்ன பார்க்கறீங்க... நான் அப்படித்தான்ண்ணே.. அப்பப்போ நம்ம வாய்ல இப்படி வந்துடும்ண்ணே...


இவரப் பாருங்க... மகாராஜபுரம் சந்தானம் பாடின பாட்டு சேர்த்துடுங்கன்னு  சொன்னா அவர் பாடினது கிடைக்கலை, அதே பாட்டுதான்.. இதான் கெடச்சுது' ங்கறாரு  ...

ஏதோ ரசிக்கிறோம் இல்லை.... விடுங்கண்ணே.. கதை எங்கியோப் போகுது பாருங்க... இதுதான் என் வீக்நெஸு..


பாட்டு பாலிடிக்ஸ் நமக்கு வேணாம்ண்ணே.. மனசுக்குப் பிடிச்சா எல்லாம் நல்ல சங்கீதம்தான்... என்னன்றீங்க... பாட்டு பிடிக்க அது நம் மனச ஏதோ ஒரு விதத்துல, ஏதோ ஒரு இடத்துல தொடணும் இல்லை? இல்லீங்க... சில சமயம் சில பாட்டு அது கூட அவசியமில்லாமப் பிடிச்சிப் போகுத்ண்ணே... என்ன சொல்றீங்க... இருங்க... நான் சொல்ல வந்த விஷயம் வேறண்ணே...


முதல்ல பிடிக்காத பாட்டு ஒண்ணு இருக்குன்னு வச்சிக்கோங்க... அது பிடிச்சிப் போக வேறு ஒரு காரணம் இருக்கும். சில சமயங்கள்ல சில பாட்டுகள்ண்ணே... எப்பவும் இல்ல... சண்டைக்கி வராதீக....

உதாரணத்துக்கு 'மேகம் கருக்குது மழை வரப் பார்க்குது'ன்னு ஒரு பாட்டு இருக்கு இல்லா... அது அதுல வர்ற வசனத்துக்காக முதல்ல பிடிக்காம இருந்ததுண்ணே... ஒரு பௌர்ணமி நாளில் குடியிருப்புல சினிமா போட்ட நாள்ல மணலக் குமிச்சி வச்சி சைக்கிளைப் படுக்க வச்சி படம் பார்ப்போம் பாருங்க... அது மாரி ஒரு நாளுங்க... கரண்டு போயிடிச்சி சனியன்... படத்தை நிறுத்திப் போட்டானுக... 'சட்'டுனு அந்த இடமே அமைதியா இருந்துது பாருங்க.. அப்போ ஒரு பயபுள இந்த டிரான்ஸ்சிஸ்டர் இருக்கு பாருங்க அதை ஆன் பண்ணிட்டான் போல... ஆன் பண்ணவும் அந்த பாட்டு வரவும் செரியா இருந்துச்சிப் பார்த்துக்குங்க... யோசிச்சிப் பாருங்க... நைட்டு பதினோரு மணி... பௌர்ணமி நேரம்... குமிச்சி வச்ச மணல்ல மல்லாந்து படுத்துருக்கீங்க... பக்கத்துல தெரிஞ்சவங்க யாருமில்ல...

நிறையப் பேர் இருக்காங்க.. ஆனா யாருமில்ல... இதெப்படிண்ணே... நான்தான் சொன்னேனே அப்பப்போ இப்படி எதாவது சொல்லிப் புடுவேன்ண்ணே ... நம்ம பெருமையை விடுங்க, அப்ப அந்தப் பாட்டு கேக்குது....

பிடிச்சிடுச்சிண்ணே...


ஃபிரெண்டு ஒருத்தர் சொன்னாரு... அவரு ஆபீசுல மேனஜர் பொண்ணு சும்மா டக்கரா இருக்குமாம்... அல்லாரும் பார்வையாலேயே ரசிப்பாங்களாம்.... அபபடி இருக்கச் சொல்ல ஒருநாள் முதுமலை ஃபாரெஸ்டுக்கு டூரு போயிருக்காங்க... அவிங்க இருந்தது ஊட்டிண்ணே... அங்கன தண்ணி அடிச்சி ஜாலியா இருந்துருக்காங்க... எந்த அளவுன்னா... கர்நாடகா மினிஸ்டர் ஒருத்தரு அங்கன வந்து தங்கியிருந்துருக்காரு... அதென்னங்க... என்னமோ சொல்வாங்களே... ஆ, கெஸ்ட் ஹவுசு... அவருக்கு சோறு போட்டுட்டுதான் உங்களுக்கு போடுவேன்னு சொல்லியிருக்காங்க... இவங்க தண்ணி போட்ட ஜோருல மரியாதை இல்லாம எல்லாம் பேசி எங்களுக்கு முதல்ல போடுங்கன்னு சொல்லியிருக்காங்க... பக்கத்துல ஈசிச் சேர்ல உக்காந்திருந்த ஒருத்தரு 'அவங்களுக்குப் போட்டுடுப்பா..' ன்னு சொல்ல, நம்ம ஈரோங்க 'நீ யார்ரா எங்களுக்கு சிபாரிசு செய்ய'ன்னு எகிறியிருக்காங்க...
   
ஆமாங்க.. அதேதாங்க... அவருதான் மினிஸ்டரு....  
    
மன்னிப்பெல்லாம் கேட்டாங்க அப்புறம்னு வைங்க.. தண்ணி தீந்து போய் பக்கம் இருக்கற கடைல போய்க் கேட்டா டபுள் ரேட் சொன்னவனை எதிர்க்கப் போக 'எதிர்த்தாக்க என்னாகும் தெரியுமா'ன்னு திரையைத் திறந்து காமிச்சாங்களாம்... இந்த எம் ஜி ஆர் படத்துல வருவாரே ஜஸ்டின்.... ஜட்டி போட்டுக்கினு.... ஜாம்பவானா... என்ன சொல்வாங்கண்ணே..     அ ஆங்.. பயில்வான்... இந்த ... மதன்மித்ரா விளம்பரத்துல வருவாங்களே... அது மாதிரி ஒருத்தர் நிக்க, எதுக்கு வம்புன்னு கேட்ட காசக் கொடுத்து  வாங்கிட்டு வந்துட்டாங்களாம்... மறுபடி சைட் டிஷுக்கு ச்சே...மறுபடி ஸ்லிப் ஆஃப் தி டங்... சைட் டாபிக்குல டிராக் மாறிட்டேன்ல... !
      
வீக்நெசுங்க  ...
    
ஆக, மறு படி தண்ணியடிச்சி மட்டையான நேரத்துல பக்கத்து ரூம்ல அந்த தேவதைங்க...! எப்படி இருக்கும் பாருங்க.. அது அவங்க அப்பாவோட ஃ பாரெஸ்ட் பாக்க வந்துருக்குது....! இவிங்க போட்டிருந்த டேப் ரெகார்டர்ல அந்த நேரம் 'நான் உன்னை நினைச்சேன்.. நீ என்னை நினைச்சேன்'ன்னு பாட்டுங்க... அட களுத அந்தப் பொண்ணு அந்தப் பக்கம் போயிடிச்சி... வேற ஒண்ணும் எஃபெக்டும் இல்ல, நடக்கவும் இல்ல... ஆனா பாருங்க.. நம்ம பய புள்ளங்களுக்கு அந்த நாள்லேருந்து இந்தப் பாட்டுன்னா ஒரு ஸ்பெஷலுங்க சிரிச்சிப்பாங்க... ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்பாங்க...


இப்போ மேலே நீங்க கேட்ட பாட்டு நண்பர் அப்பாதுரைக்காகங்க....! 

உங்களுக்குக் கூட அப்பிடி சில பாட்டு பிடிச்சிருக்கும்ண்ணே.. ஒத்துக்கோங்க...

இன்னொரு பாட்டுங்க.... இருங்க... இருங்க.. எங்க ஓடறீங்க...!
                                     

செவ்வாய், 29 நவம்பர், 2011

தேர்தலுக்குப் பின் வளர்ச்சி


வாக்களித்து நாளாகி விட்டதே...வளர்ச்சி எப்படி என்று பார்க்கலாம் என்று ஐடியா. எதிர்க் கட்சித் தலைவர் பதில் சொல்ல ஆறு மாதம் டைம் கேட்டார். ஆனால் நம்மால் உடனே சொல்லி விட முடிக்கிறது. 

நிச்சயம் இத்தனை நாளில் வளர்ச்சி தெரிகிறது. பழயன முற்றிலும் போய் விட்ட நிலையில் குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு உள்ள வளர்ச்சியை நிரூபணமாகவே காட்டலாம்.

அன்று இருந்த நிலைமைக்கு இன்றுள்ள நிலை கொஞ்சம் வளர்ச்சியைக் காண்பிக்கிறதுதான் என்றாலும் அன்றிருந்த நிலை இன்னும் கூட இருக்கிறது என்பதையும் நிரூபணத்தில் காட்டலாம்.  

பழைய நிலை தொடர்வதையும் புதிய வளர்ச்சி இருப்பதையும் நீங்களே பாருங்களேன்.



|

|
|

|


|





வளர்ச்சி கோடிட்டுக் காண்பிக்கப் பட்டுள்ளது. 
                       

வியாழன், 24 நவம்பர், 2011

அலுவலக அனுபவங்கள் 1


அப்புறம் என்ன என்று சொல்லவும் வேண்டுமோ...!

ஹெட் ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருந்தான் சங்கரன். இன்றும் நாளையும் கிளை அலுவலகங்கள் ஐந்தையும் ஆடிட்டுக்காக அங்கு வரச் சொல்லியிருந்தார்கள்.  
  
இது, அவ்வப்போது வருகின்ற தவிர்க்கமுடியாத ஒரு தொல்லை.

ஆனால் இங்குள்ள அலுவலகத்துக்கு வந்து வாரக் கணக்கில் தலைவலியைத் தாங்குவதற்கு இது தேவலாம் என்றும் தோன்றும்!

கையில் தேவையான புத்தகங்கள், ஃபைல்களுடன் ரோடில் காத்துக் காத்து நின்றதுதான் மிச்சம். அங்கு நிற்கக் கூடிய பஸ்களைக் காணோம். வந்தாலும் கூட்டம் அலை மோதியது. 

ஷேர் ஆட்டோவில் ஏறலாம் என்றால் அதுவும் நிரம்பி வழிந்தது. ஒரு வழியாய் ஒரு ஷேர் ஆட்டோவில் ஏறி, இறங்கவேண்டிய இடம் வந்து, இறங்கும்போது பத்து ரூபாயை நீட்டினான். 

"இருபது ரூபாக் குடு சார்"

"ஒருத்தர்தான்பா..."

"ஆமாம்பா... இன்னிலேருந்து இருபது ரூபா... குடு.. லேட்டாகுது..."

வெறுப்புடன் கொடுத்து விட்டு நடந்தான். இன்னும் நடக்க வேண்டும். கை கனத்தது. 

வழியில் சக அலுவலக நண்பர்கள் ஒரு டீக்கடையில் கண்ணில் பட்டனர். கையசைத்தனர்.
    
ஆவணங்களுடன் ஹெட் ஆபீஸ் செல்லும் வழியில் சக நண்பர்கள். டீ குடித்து பேசிக் கொண்டிருக்க, அவர்களிடம் சென்று டீ, வடை, புகை, அரட்டை ஜோதியில் கலந்தான். உடன் உரையாடி சக நண்பர்கள் கிள்ள முயற்சிப்பதையும் பொருட்படுத்தாமல் ஏடாகூடமாக ஆடிட் பற்றி கமெண்ட்ஸ் அடித்து சிரித்து விட்டு ... 

"என்ன சார்... ரெண்டு வருஷத்துக்கு இவ்வளவுதான் நோட்டு, ஃபைலா...?" - நடராசன்.

ஷேர் ஆட்டோ வெறுப்பிலிருந்து கலையாமலிருந்தான் சங்கரன். வாயிலிருந்து சரளமாக கெட்ட வார்த்தை வெளிப் பட்டது.

"என்ன பெரிய நோட்டு, ஃபைலு... இதைக் காமிச்சாப் போதாதா..."

"எதாவது வேணும்னா திரும்பிக் கூட ஓடி எடுத்து வர முடியாதே..." சாலமன்.

"விடு.. சமாளிச்சிக்கலாம்..."

"எப்படி சமாளிப்பீங்க.." அவர்களுடன் நின்றிருந்த புதிய நண்பர். 

"இத்தனை பேர்ல நம்ம என்ன சொல்றோம்னு பார்க்கப் போறாங்களா... சமாளிச்சிக்கலாம்... நான் ஸ்டேஷனரி டிபார்ட்மென்ட் வேற போகணும்..." நடு நடுல மானே தேனே எல்லாம் போட்டுக்கோ என்பது போல கெட்ட வார்த்தைகளைத் தூவி பதில் சொன்னான் சங்கரன்.

"மாப்பிள்ளே... என் நோட்ஸ் எல்லாமும் வச்சிக்கிட்டு ஷோ காட்டிகிட்டு இரு... ஆடிட் ஆரம்பிக்கறதுக்குள்ள ஒரு வேலையை முடிச்சிட்டு வந்துடறேன்.."

"லன்ச்சுல போலாம்.. டைமாச்சு பாரு.." பாஸ்கர்.

"லஞ்ச்சுக்கு அப்போ விடுரானுங்களோ... பாவிங்க... அப்போ வேற ஒரு வேலை வேற வச்சிருக்கேன்... தோ வந்துடறேன்..."

"அவர் கிட்டயே ஒரு வார்த்தை சொலிட்டு போப்பா..."

"சொன்னாத்தான் கஷ்டம்.. அலட்டுவாங்க... ஓடி வந்துடறேன்.."

"சங்கரா... சங்கரா..." வெங்கடேசன் முழங்கையைப் பிடித்து இழுத்துக் கிள்ளுவதைப் பொருட்படுத்தாமல், 

"இவங்களைத் தெரியாதா...நாங்கள்ளாம் எவ்வளவு பாத்திருக்கோம்... வந்துடறேன்.." என்றபடி ஒரு பேப்பரை மட்டும் உருவி எடுத்துக் கொண்டு ஓடினான் சங்கரன். 


வேலையை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக ஆடிட் நடக்கும் இடத்துக்கு வந்த போது ஆடிட் ஆரம்பித்திருந்தது; அது அதிர்ச்சியாயில்லை. 
  
இவனுடன் சேர்ந்து டீ குடித்த நண்பர்கள் குழுவில் இருந்த இருவர்தான் ஆடிட்டர்கள் என்பதுதான் அதிர்ச்சியாயிருந்தது. 

தலைப்பை மறுபடியும் படிக்கவும்!
      

செவ்வாய், 22 நவம்பர், 2011

நாக்கு நாலு முழம் ... 02

                      
மதுரையில் கோரிப்பாளையத்தில் இருக்கும் கிங் மெட்ரோ ஹோட்டலில் பரோட்டா குருமா (அப்போது நாங்கள் 'ப்ரோட்டா' என்று உச்சரிப்போம்!), ரெயில் நிலையம் அருகில் இருக்கும் கற்பகம் ஹோட்டலில் அதிகாலையில் இட்லி, சாம்பார், காபி. ஆரியபவனில் ஸ்வீட் சமாச்சாரங்கள், மாடர்ன் ரெஸ்டாரெண்டில் (மத்திய நேரத்தில் இங்கு இடம் கிடைப்பது சிரமம்... வரிசையில் காத்திருக்க வேண்டும்) சாப்பாடு,கங்குவாலாவில் வடக்கத்தி பாணி சாப்பாடு...
         
அப்போது வட நாட்டிலிருந்து மதுரையில் மருத்துவக் கல்லூரியில் படிக்க வந்த ராய் தயாள் சிங் என்ற மாணவர் தெருவில் அறிமுகமாகி அவருக்கு ரூம் ஏற்பாடு செய்வதிலிருந்து இது மாதிரி வடநாட்டுச் சாப்பாடு கிடைக்குமிடங்களைக் காட்டியதும் நினைவுக்கு வருகிறது. நீண்ட நாள் தொடர்பில் இருந்தார். அவ்வப்போது கடிதமும் எழுதிக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் இருந்த ஒரு டிப்ளோமேட்டின் பையன். எங்கிருக்கிறாரோ அந்த நண்பர்... இப்போது என்னை நினைவிருக்குமா... 
    
மதுரை கோரிபபாளையத்தில் மசூதி திரும்பும் ரோடில், பஸ் ஸ்டாப்பை ஒட்டி ஒரு ரோடோரக் கடை. அங்கு இட்லி சாப்பிடுவது ஒரு தனி அனுபவம். இரண்டு இட்லி (அல்லது நாலு) ஆர்டர் செய்தால் அடுப்பிலிருந்து இறக்கும் இட்லிதான் கிடைக்கும். அந்த அளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். ஆவி பறக்கும், பஞ்சு போன்ற இட்லி மட்டும் சுவை, ஸ்பெஷல் இல்லை. அந்த இரண்டு அல்லது நாலு இட்லிகளுக்குத் தரப் படும் பக்க மேளங்கள்...!! தேங்காய் சட்னி, வெங்காய சட்னி, பொதினா சட்னி, மிளகாய்ப் பொடி, சாம்பார்... இந்தச் சுவைக்கு எத்தனை பிரபலங்கள் ரசிகர்களோ... எனக்குத் தெரிந்து புலவர் கீரன் ஒரு ரசிகர்!     மதுரை ரேஸ் கோர்ஸ் குடியிருப்பின் பின்புறம் லக்ஷ்மி தியேட்டர் அருகில் ஒரு ரோடோரக் கடையில் சாப்பிட்ட பரோட்டா குருமா டாப்!
                        
மதுரையில் அது என்னவோ பெரிய ஹோட்டல்களை விட இந்த மாதிரி ரோடோரக் கடைகளில் கிடைக்கும் சுவை தனி. கல் தோசை ஒவ்வொன்றாக சூடாக வார்க்க வார்க்க, தட்டில் வாங்குவது தனிச் சுவை. இந்த மாதிரிச் சுவை சென்னை ரோடோரக் கடைகளில் கிடைப்பதில்லை. தண்ணீர் வாகா, மண்ணின் மணமா... சரியாகத் தெரியவில்லை. சில ரோடோரக் கடைகளில் பருத்தி கொட்டைப் பால் கிடைக்குமாம். அதன் மணம், குணம், நிறம், திடம் யாவையும் மனதை மயக்கும் விஷயங்கள் என்கிறார், ஒரு திருமதி. 
      
மதுரையில் மீனாக்ஷி அம்மன் கோவில் சுற்றியுள்ள பிரதான வீதிகளில் ஒன்றில் பூச்சி ஐயங்கார் கடை என்று ஒன்று உண்டு. அங்கு ஸ்பெஷல் வெள்ளை அப்பம், சீவல் தோசை! சீவல் தோசை ரொம்பவே ஸ்பெஷல். விலை பற்றிக் கவலைப் படவில்லை, காத்திருக்கத் தயார் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் உள்ளே தள்ளலாம்! சிறிய கடைதான். ஆனால் சாம்பாரில் எல்லாம் சுவை அவ்வளவு எதிர்பார்க்க முடியாது. பிடிப்பவர்களுக்குப் பிடிக்கலாம்! சீவல் தோசை என்றால் என்ன தெரியுமோ...(பின்னூட்டத்துக்கு வாய்ப்பு...!)
                     
இந்த வெள்ளை அப்பம், மெதுவடை, போண்டா எல்லாம் பெரிய ஹோட்டல்களில் சாப்பிடக் கூடாது. காசு கூட, அளவு கம்மி... சிறிய கடைகளில் காசு கம்மி, சுவை, ஆப்ஷன் அதிகம். 
                
மதுரையில் தல்லாக்குளம் தலைமைத் தபால் நிலையம் அருகில் ஒரு கடையில் சுடச் சுடக் கிடைக்கும் வடை, போண்டா வகைகளுக்கு அவர்கள் தரும் கடலை மாவு போட்டு செய்யும் ஒரு சைட் டிஷ் பிரபலம். அங்கேயே சாப்பிடுபவர்களும், பார்சல்களும் தூள் பறக்கும்! இப்பவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. சீக்கிரம் கிடைக்கவும், சில சமயம் பஜ்ஜி, வடை போண்டா கைக்குக் கிடைக்கவுமே சிபாரிசு தேவைப் படும்!

    
சென்னை வந்த புதிதில் அதிகம் கவர்ந்தது செட் தோசை! முக்கியக் காரணம் அதனுடன் தரப்படும் வடகறி! அப்போதும் இப்போதும் புரோட்டா அல்லது பரோட்டா எந்தக் கடையில் நன்றாகச் செய்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்யும் வழக்கம் இன்னும் இருக்கிறது!
    
ஒரு ஹோட்டலில் நன்றாகச் செய்கிறார்களா என்று பார்க்க நான் கையாளும் வழி ஸ்பெஷல் ரவா தோசை, மற்றும் ஆனியன் ரவா தோசை சாப்பிடுவது. சாம்பாரின் ருசி மிகவும் முக்கியம். சாம்பார் ருசி அமையாத ஹோட்டல்களுக்கு செல்வதில்லை. சரவண பவனில் சாம்பாரைக் குடிக்கலாம்! இந்த ரவா தோசை செய்வது ஒரு கலை! எல்லா ஹோட்டல்களிலும் இது அமைவதில்லை. முறுகலும் இருக்க வேண்டும், மென்மையும் இருக்க வேண்டும். மெலிதாக அமைய வேண்டும்!   
                   
தனியாக ரூமில் தங்கியிருந்த காலங்களில், குறைந்த செலவில் வயிறு நிரப்ப  நான் கடைப் பிடித்த வழி, ஒரு பரோட்டா, ஓர் ஆனியன் ஊத்தப்பம்! காலை ரோட்டோரக் கடைகளில் நாலு இட்லி! இரவு இரண்டு தோசை மட்டும். தொடர்ந்து வெளியிலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் எப்போதுடா வீட்டுக்குப் போய் பழைய சாதத்தில் மோர் விட்டுப் பிசைந்து பழங்குழம்பு அல்லது நார்த்தங்காய் தொட்டுக் கொண்டு சாப்பிடுவோம் என்று ஆகி விடும். 
                
இப்போதும் ஹோட்டல்களில் சாப்பிட விழைவது ரவா தோசை, இன்னமும் கூட பரோட்டா, ஆனியன் ஊத்தப்பம்.  இதில் ஒரு காரணமும் இருக்கிறது. பரோட்டா என்னதான் வீட்டில் செய்தாலும் கடைகளில் சாப்பிடுவது போல வருவதில்லை. (சென்னையில் எப்போதாவது ராமசந்த்ரா ஹாஸ்பிடல் போனால், அங்குள்ள கேண்டீனில் பரோட்டா சாப்பிட்டுப் பாருங்கள்... மென்மையாகவும், தடிமனாகவும், சுவையாகவும் இருக்கும்!!) ரவா தோசை கூட வீட்டில் செய்யும்போது அந்த பதம் வருவது கடினம். ஹோட்டல்களிலேயே கூட சில ஹோட்டல்களில்தான் ரவா தோசை நன்றாகச் செய்கிறார்கள். 
                    
சரவண பவனின் சாம்பார் ருசி நங்கநல்லூரின் பாலாஜி பவன் என்ற சிறிய ஹோட்டலின் சாம்பாரின் ருசி... இந்த வகை சாம்பாரில் என்ன கலக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்து வீட்டில் முயற்சி செய்து பார்த்திருக்கிறோம். சீரகம் தாளிக்க வேண்டும் என்பார்கள் சிலர். மல்லித் தூள் சேர்க்க வேண்டும் என்பார்கள் சிலர். அப்படியெல்லாம் ட்ரை செய்தால் வேறு மாதிரி நன்றாக இருக்கிறதே தவிர, (வழக்கமாக சாப்பிடும் பாணியிலிருந்து வேறுபட்டு வித்தியாசமாக இருந்தாலே பிடித்துப் போகும்தானே...) அந்த ஹோட்டல்களில் சாப்பிடும் சுவை வராது. அட, இட்லியே மெதுவாக வருவது என்பது எப்போதாவதுதான் அந்தக் கலையே கைவர மாட்டேனென்கிறது!!  

காஃபி...! இது முக்கியமான விஷயம். தஞ்சை, கும்பகோணம் ஊர்களில் காஃபி சந்தேகமில்லாமல் நன்றாக இருக்கும், காவிரி சூழ்பொழில் சோலைகளில் காஃபி...!
           
மதுரையில் விசாலம் காஃபி இரண்டு மூன்று இடங்களில் இருக்கும். அங்கு நல்ல ஃபில்டர் காஃபி கிடைக்கும்தான். ஆனால் சர்க்கரை அளவைக் குறிப்பிட்டுக் குறைக்கச் சொன்னால்தான் சரியாகப் போடுவார்கள். அது என்னவோ நிறையப் பேர் டிகாக்ஷன் அதிகமாக விட்டு, சர்க்கரை தூக்கலாகச் போட்டுச் சாப்பிட்டால்தான் காஃபி என்று நினைக்கிறார்கள்.  சென்னை சரவணபவனில் காஃபி ஓகே. 
                  
நீங்கள் ஹோட்டல்களுக்குப் போனால் உங்கள் விருப்பத் தேர்வு என்னவாக இருக்கும்? சாப்பிடாத ஐட்டம் என்றா, வீட்டில் செய்ய முடியாத ஐட்டம் என்றா, இந்த ஹோட்டலில் இது ஸ்பெஷல் என்றா... எந்த வகையில் உங்கள் தேர்வு இருக்கும்?  
      
இன்றைய ஸ்பெஷல் என்ற அறிவிப்புகளில் டிஃபன் ஐட்டங்களுக்கு அறிவிப்பு இருக்குமே தவிர, சாப்பாட்டு வகைகளில் பெரும்பாலும் இருப்பதில்லை. ஒரே மாதிரி சாம்பார், காரக் குழம்பு, பொரியல் மெனுக்கள்! சாப்பாடு சாப்பிட செட்டிநாட்டுச் சமையல் பக்கம் விரும்பிச் செல்வதுண்டு. மற்றபடி சில புதிய வகைச் சமையல்கள் வீட்டில் முயற்சி செய்தால்தான் உண்டு. வாழைப் பூ உசிலி எத்தனை ஹோட்டல்களில் கிடைக்கிறது? ரவா உப்புமா எத்தனை ஹோட்டல்களில் கிடைக்கிறது?!  
        
வீட்டில் செய்யும் சில ரெசிப்பிகளை இங்கு பகிர நினைக்கிறேன். ஏதோ ஒன்றிரண்டு பேருக்காவது புதிதாக இருக்கலாம். அல்லது எழுதுவதில் எங்களுக்கு சந்தோஷம் கிட்டலாம்... பதிவு தேத்தலாம்... அதைப் படித்து நீங்கள் இடும் பின்னூடங்களில் புதிய ஐடியாக்கள் எங்களுக்குக் கிடைக்கலாம்! பார்ப்போம். இதை முதல் பகுதி, அறிமுகப் பகுதி  என்று யோசித்து வைப்போம்.  
               
(பரோட்டா பற்றி சிறிதளவே எழுதியிருந்தாலும் இந்த நேரத்தில் அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வுப் பதிவைப் படிக்க நேர்ந்தது. முதலில் நண்பர் சூர்யஜீவா பதிவில். அப்புறம் அவர் சுட்டியிருந்த கழுகு பதிவில். (அதையும் இங்கு பகிர்கிறோம்)
  
நாக்கு இன்னும் நீளும்! 
          

திங்கள், 21 நவம்பர், 2011

நாக்கு நாலு முழம் ..1



குறைந்த புத்தகங்களே வந்த காலத்தில் புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படிக்கும் பழக்கம் இருந்தது.பிரசண்ட விகடனோ, ஆனந்த விகடனோ, குமுதமோ.... அப்புறம் குங்குமம், இதயம் பேத்துகிறது, மன்னிக்கவும்(!) இதயம் பேசுகிறது, சாவி என்று வந்த கால கட்டத்தில் கூடப் படிக்கும் பழக்கம் குறையாததற்கு தொலைக் கட்சி, கணினி என்று கவனக் கலைப்புச் சமாச்சாரங்கள் இல்லாததும், (அதனாலேயே) அப்போது அதிக அளவு நூலகங்கள் போகும் பழக்கம் இருந்ததும் காரணமாயிருந்திருக்கலாம்.
   

                   
எம் கே டி - பி யூ சின்னப்பா, அல்லது டி ஆர் எம்,- எம் கே ராதா, அப்புறம் எம் ஜி ஆர்- சிவாஜி இடையிடையே ஜெமினி, ஜெய் படங்கள் என்று மட்டும் குறைந்த படங்கள் வரும்போது அவை நீண்ட நாட்கள் ஓடுவதும், மக்களும் ஓரளவு எல்லா படங்களையும் பார்த்து விடுவதும் வேறு பொழுது போக்கு இல்லாததாலும், குறைந்த திரை அரங்குகளே ஓரொரு ஊரிலும் இருந்ததும் காரணங்களாய் இருந்திருக்கலாம் !  

                      
இப்போதெல்லாம் ஏராள புத்தகங்கள், ஏராளமான திரைப் படங்கள்,...
                
முன்பெல்லாம் ஹோட்டல்கள் கூட அப்படித்தான்...அங்கு கிடைக்கும் வெரைட்டிகளும் குறைவாகவே இருந்தன. 
                      
தஞ்சைக் காலங்களில் ரயிலடி அருகில் இருந்த ஆனந்த் பவன், மற்றும் நியூ பத்மா ஹோட்டல்களில் சாப்பிட்டது நினைவுக்கு வருகிறது. அதை விட்டால் அப்போது புகழ் பெற்ற ஹோட்டல்கள் மங்களாம்பிகாவும், மணிக் கூண்டு தாண்டி இடது பக்கம் ராஜா கலை அரங்கம் திரை அரங்கம் செல்லத் திரும்பும்போது இருக்கும் ஒரு ஹோட்டலும் (சாந்தி ஹோட்டல் என்று நினைவு) கொஞ்சம் பெரிய ஹோட்டல்கள். அப்புறம் பஸ் ஸ்டேண்ட் பின்புறம் வசந்த் பவனோ, சங்கமோ வந்ததாக நினைவு. இருபத்தைந்து காசு பெட்டியில் போட்டு விரும்பிய பாட்டு கேட்டுக் கொண்டே டீ சமோசா சாப்பிடும் கடை அப்போது புதிது, பிரபலம்!
                       
ஆனந்த் பவன், நியூ பத்மாவில்தான் அடிக்கடி சாப்பிடுவோம். அடிக்கடி என்றால் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை! யாகப்பாவில் கிழக்கே போகும் ரெயில் பார்த்து விட்டு வந்து அங்கு சாப்பிட்டது நினைவில் இருக்கிறது. 

அப்புறம் கொஞ்ச காலம் கழித்து ஆனந்த் பவன் வாசலில் சுப்பையாப் பிள்ளைப் பால்கடை என்று ஒன்று உதயமானது. ஹோட்டல்களில் சாப்பிடுவோர் உள்ளே காபியைப் புறக்கணித்து வெளியே வந்து சுப்பையாப் பிள்ளைப் பால் கடையில் நின்று அவர் நுரை பொங்க பித்தளைத் தம்ளர், டபராவில் ஆற்றித் தரும் பாலைச் சுவைப்பது பழக்கமாகி, அந்த ஏரியாவே மாலை வேளைகளில் ஸ்தம்பித்தது! அபபடி என்ன செய்தார் என்று யோசித்துப் பார்க்கும்போது தண்ணீர் அதிகம் ஊற்றாத,   கறந்த பாலில் பனங்கற்கண்டு கலந்து சற்றே (?) சுண்டக் காய்ச்சித் தந்தார் என்று நினைவு. ஆனாலும் இப்போதும் நாவின் அடியில் அந்த சுவை தெரிகிறதுதான். 
                        
ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும் தாத்தா ஆகட்டும், மாமா ஆகட்டும் அவர்கள் பெரும்பாலும் ஆர்டர் செய்வது 'ரெண்டு இட்லி, சாப்பிட்டப்புறம் ஒரு தோசை, அப்புறம் ஒரு காஃபி'.  வேறு வித்தியாசமே இருக்காது. நாங்கள் பூரி, சப்பாத்தி என்று ஆசைப் பட்டாலும் 'மசாலா வாசனையா குருமாவா, வேண்டாம்' என்று நிர்த்தாட்சண்யமாய் மறுத்து விடுவார்கள்! அதையும் மீறி அவ்வப்போது இவையும் சாப்பிடக் கிடைத்ததுண்டு. 

        என்னுடைய பள்ளி நாட்களில் என் ஒரு பிறந்த நாளில் அப்பாவின் சாங்க்ஷனாய் ஒரு ரூபாய் எடுத்துக் கொண்டு போய் மருத்துவக் கல்லூரி போகும் சாலையில் இருந்த கேண்டீனில் இரண்டு இட்லி, ஒரு ஸ்பெஷல் தோசை சாப்பிட்டு, என் இளைய சகோதரிக்கு ஒரு பூரி பார்சல் வாங்கி வந்த நினைவு இருக்கிறது. மிச்ச காசு கூடக் கொண்டு வந்து தந்தேன். அந்தக் கேண்டீனில் ஒரு கண்ணாடி தம்ளரில் பாலாடை போட்டுத் தருவார்கள். அது எனக்கு சாப்பிட விருப்பம் இருந்தாலும் அதற்கு அன்று கையில் மிச்சமிருந்த காசு அதற்கு இடம்தரவில்லை!
                   
ஹோட்டல்களில் பரோட்டா போன்ற சமாச்சாரங்கள் அப்புறம்தான் அறிமுகமாகினவா, இல்லை எங்களுக்கு எங்கள் தஞ்சைக் காலங்களில் தெரியவில்லையா நினைவில்லை. ஆனாலும் ஹோட்டல்களில் சாப்பிடுவது ஒரு தணியாத ஆசையாகவே இருக்கும். அதுவும் குறைந்த ஐட்டங்களே சாப்பிடக் கிடைக்கும் காலத்திலும். 
                   
அப்புறம் வேலைக்கு சென்ற காலங்களில் வேறு வழியின்றி காலை ஆறே முக்காலுக்கெல்லாம் பொங்கல் தோசை என்று சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது ஹோட்டல் மயக்கம் மறைந்தாலும் சில ஹோட்டல்களின் சில ஸ்பெஷல்கள் என்றும் மனதில் நிற்கும் வண்ணம் இருந்தன. 
                   
அதே நியூ பத்மா வில் சாம்பார், குருமா ருசி, மங்களாம்பிகாவில் காபி, (எங்கள் பள்ளி ஹாக்கி ப்ளேயர் மங்களாம்பிகா உரிமையாளர் பையன் என்பதில் எங்களுக்கு ஒரு பெருமை. ஏதோ ஹோட்டலே எங்களுடையது போல!)
                 
தஞ்சையில் ரோட்டோரக் கடைகள் பார்த்த நினைவு இல்லை. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் தஞ்சைப் பக்கம் காஃபி, சாம்பார் போன்றவை சுவைதான். காவிரி உபயம் என்றுதான் தோன்றும். அதே போல தஞ்சாவூரில் கிடைத்த மாதிரி கத்தரிக்காய் (கம்மாக் கத்தரிக்காய்) கீரைத் தண்டுகள் மற்ற ஊர்களில் பார்க்கவில்லை. அது தனி ருசி. கத்தரிக்காயின் அந்த நிறமும், பளபளப்பும் பார்க்கும்போதே ரெசிப்பிகள் மனதில் ஓடும்! 
              
தஞ்சையில் அப்போது அதிகம் டீக் கடைகள் பார்த்த நினைவு இல்லை. ரெயிலடியிலிருந்து மேரிஸ் கார்னர் வரும் வழியில் இருந்த (இப்போது இருக்காது என்று நம்புகிறேன்) 'மேனகா காபி பார்' எங்களுக்குப் பரிச்சயம். அங்கு வருக்கியும் டீ காபியும் சாப்பிடுவது உண்டு. அந்த டீக் கடையை மறக்க முடியாததற்கு என் நண்பன் சம்பந்தப் பட்ட ஒருமறக்க முடியாத சம்பவமும் காரணம். (நாங்கள் அங்கு உட்கார்ந்து "யாருடா மேனகா.. அவளை ஏன் கூப்பிட்டு காபியைப் பாக்கச் சொல்கிறார்கள்" என்று கிண்டலடிப்போம்)
            
என்னுடைய நாக்கு ரொம்ப நீளம் .... ஆனால் பதிவு நீளமாகி விட்ட காரணத்தினால் அடுத்த பதிவில் அது மதுரையைத் தீண்டும்!
          

வெள்ளி, 18 நவம்பர், 2011

ரயில் பயணங்களில்... (வெட்டி அரட்டை)

                               
எலெக்ட்ரிக் ட்ரெயின் பயணம் எப்போதும் போல பல சுவாரஸ்யங்களைக்  கொண்டது. கூட்டத்தைக் கண்டால்தான் கொஞ்சம் அலர்ஜி. வேறு வழியில்லாமல் ஒரு கூட்ட நாளில் பயணம் செய்த போது இரண்டு அனுபவங்கள்! 
   
முதலில் ஏறும்போது கூட்டம் கம்மியாகத்தான் இருந்தது. அப்புறம் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கூட்டம் நெரிக்கத் தொடங்கியது. வியர்வை நாற்றங்கள், தெரிந்த தெரியாத பௌடர் வாசனைகள், ஓவராக அடிக்கப் பட்ட, எரிக்கும் சென்ட் வாசனைகளுக்கு நடுவில் பயணம். 
     
"தளளி வந்துடு"
   
"உள்ள போய் நின்னுக்கோ.. அங்க கூட்டம் கம்மியா இருக்கு பாரு.."  
    
"நம்ம பசங்கதான.. இங்கேயே நில்லுடி.. கொஞ்சம் பட்டா குறைஞ்சு போய்ட மாட்டே.."   
     
"மச்சி... ஏழாம் அறிவு சொதப்பிட்டாண்டா..."
"ஹலோ... ஹலோ...கேட்குதா...சைதாப்பேட்டை தாண்டிட்டேன்மா... வந்துடுவேன்..."

இப்படி பல குரல்களுக்கு நடுவில் கணீரென ஒரு குரல் கேட்டது.   
    
"தீபாவளிக்கு டப்பாஸ் வாங்கிட்டு வாப்பான்னு பசங்க சொன்னாங்க... நான் பாண்டிச்சேரில இருக்கேன்...எங்கே போறது.. லீவு கொடுக்கலை 'பாடு'ங்க... இப்பதான் போறேன்.. பாண்டிச்சேரி ஏன் போனேன்னு கேட்கணும் நீங்க... இங்க குவார்ட்டர் விலை 72 ரூபாய். பாண்டிச்சேரில 22 ரூபாயப்பா.."
     
யாரோ ஒருவர் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார். இவ்வளவு சத்தமாக, அதுவும் பொது இடத்தில் ஃபோன் பேசுபவர்களைக் கண்டாலே எனக்கு அலர்ஜி. எனக்குக் கூச்சமாக இருக்கும்! நின்று விட்ட குரல் இடைவெளிக்குப் பின் தொடர்ந்தது.
      
"நம்ம ஊர்ல சரக்காப்பா குடுக்கறாங்க...தண்ணி...தண்ணியை ஊத்தி குடுக்கறாங்க... பாண்டிச்சேரி போய்ப் பாருங்கப்பா... சரக்கு அவ்வளவு சுத்தம். அங்கன்னு இல்லை... தமிழ் நாட்டைத் தவிர ஆந்திரா, கர்நாடகான்னு எல்லா இடத்துலயும் நல்லாத்தான் இருக்கு..."
               
'பாருங்கப்பா' என்ற வார்த்தையால் ஏற்பட்ட சந்தேகத்தில் அவரைத் தேடிப் பார்த்தேன். சரிதான்! அவர் ஃபோனில் எல்லாம் பேசவில்லை! அவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருந்தார்! நல்ல விலை உயர்ந்த ஷர்ட் தெரிந்தது.
              
"ஆகவே மக்களே... நான் குவார்டருக்காகத்தான் பாண்டிச்சேரி மாத்திக்கிட்டுப் போனேன்... நீங்களும் இதை யோசிச்சுப் பாருங்க..."
             
நானும் இன்னும் ஓரிருவரும் திரும்பிப் பார்ப்பதை உணர்ந்தவர் (அவர் யாரையும் குறிப்பாகப் பார்க்காமல் பேசிக் கொண்டிருந்தார்) "கவலைப் படாதீங்க மக்களே... இதோ கிண்டியில் இறங்கி விடுவேன்... அப்புறம் நான் பாட்டுக்கு அங்க பேசிகிட்டு இருப்பேன்.." என்றபடி நகர்ந்து வந்தார். ஷர்ட்டுக்குப் பொருத்தமில்லாமல் ஒரு கசங்கிய லுங்கி!
   
சுவாரஸ்யம் இரண்டு :
                    
பாடிக் கொண்டும் பேசிக் கொண்டும் செல்பவர்கள் ஒருவகை என்றால் கல்லூரி மாணவ, மாணவியரும் இன்னும் சில இளசுகளும் அடிக்கும் லூட்டி தனி வகை. (சமீபத்தில் கூட படியில் தொங்கிக் கொண்டே வந்த மாணவர்களை 'ஏறி உள்ளே வந்தால்தான் வண்டி எடுப்பேன்' என்று சொன்ன ஒரு பஸ் டிரைவரை உதைத்த சம்பவம் படித்தேன்) இவர்கள் அவ்வப்போது ஃபீல் செய்து ரெயில் பெட்டிகளின் உள் பக்க சுவரில் 'கல்வெட்டு' பொறித்து வைப்பார்கள்! அதில் ஒன்று கண்ணில் பட்டது.
        
"கடலில் விழுந்தவன் நீச்சலடிப்பான் . காதலில் விழுந்தவன்  தத்தளிப்பான்"
             
அது ஆணியால் அடிப்பது போலக் கீறப் பட்டு, கீழே திருத்தப் பட்டிருந்தது.
         
"கடலில் விழுந்தவன் தத்தளிப்பான். காதலில் விழுந்தவன் பிச்சை எடுப்பான்"
               
பக்கத்திலேயே பதிலும் இருந்தது.
                 
"புலி பின்னால் போன மானும், ஆணின் பின்னால் போன பெண்ணும் பிழைத்ததாய் சரித்திரமே இல்லை"
                        
அனுபவசாலிகள் யாரோ அனுபவத்தை எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள் போலும். மின்வண்டிப் பயணம் பல சுவாரஸ்யங்களைக் கொண்டதுதான். சந்தேகமில்லை. ஒருமுறை ரெயில் பேட்டியிலேயே தாளம் தட்டி 'சட் சட்' டென வரிகளைப் போட்டு 'கானா'ப் பாடல்களை இயற்றிப் பாடிக் கொண்டு வந்த கல்லூரி மாணவர்களை, பெட்டியிலேயே இருந்த பெண் போலீஸ் கூட ஒன்றும் சொல்ல முடியவில்லை. நடுவில் போலீஸ் அக்கா என்று அவரை சம்பந்தப் படுத்தியும் வரியமைத்துப் பாடினர்! என்னைப் போலவே பலராலும் எரிச்சலை வெளியே காட்டிக் கொள்ள முடியாமல் போனது நினைவுக்கு வருகிறது.  
                     

புதன், 16 நவம்பர், 2011

உள் பெட்டியிலிருந்து 11 11

                   
புத்தி(யி)சம்
   
எது விஷம்?

வாழ்வில் அளவை மீறும் அத்தனையும் விஷம்...!  

----------------------------------------------------
ஒழுக்கமான பொண்ணு...

கவனமின்றி நெரிசல் மிகுந்த போக்குவரத்து நிறைந்த சாலையைக் கடந்தாள் ஒரு எல் கே ஜி சிறுமி.. 

டிராஃபிக் போலீஸ், " நான் கை காமிச்சும் விசிலடிச்சியும் ஏன் பாப்பா கண்டுக்கவே இல்லை?"  

"நான் அந்த மாதிரிப் பொண்ணு இல்லை.."   
           
---------------------------------------------
இஸ் இட்?

உன் இளவயது உழைப்பின் ஒவ்வொரு வியர்வைத் துளியும் உன் பத்து துளி முதுமைக் கண்ணீரைத் தடுக்கும்.
   
-------------------------------------------
வார்த்தைகள்...

மனதுக்கு நெருங்கியவர்களிடமிருந்து விஷ வார்த்தைகள்.."யார் நீ?"

பகையாய் நினைப்பவர்களிடமிருந்து எதிர்பாரா இன்பச் சாரல்..."எப்படி இருக்கீங்க..?"
               
------------------------------------------------
மாத்தி யோசி...
              
பொய் வழக்கில் ஜெயிலில் இருக்கும் மகனுக்குக் கடிதம் எழுதினார் ஏழை விவசாயி. "இந்த வருடம் நீ இங்கு இல்லாத குறையினால் என்னால் மண்ணை உழ முடியவில்லை. ஆதலால் நான் பயிர் செய்யவில்லை."
           
மகனின் பதில்..."முட்டாள் தந்தையே... அங்கு தோண்ட வேண்டாம்... அங்குதான் நான் புதையலை ஒளித்து வைத்திருக்கிறேன்"
             
அடுத்த நாளே போலீஸ் அங்கு நுழைந்து தோண்டித் துருவி மண்ணைப் புரட்டிப் போட்டது. ஒன்றும் கிடைக்கவில்லை.
                 
மகன் மறுபடியும் தந்தைக்கு கடிதம் எழுதினான். "இப்போது பயிரிடுங்கள் அப்பா.... என்னால் இங்கிருந்து இதைத்தான் செய்ய முடிந்தது..."
                       
----------------------------------------------------  
அன்னை தெரசாவின் கேள்வி...

"எதுவுமே நிரந்தரம் இல்லாத இந்த உலகத்தில் உங்கள் கஷ்டம் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்?"

-------------------------------------------------     
யார் சொன்னது..
                 
இந்தியா பெண்களை மதிப்பதில்லை என்று யார் சொன்னது? 
                    
தெற்கில் அம்மாவும், அக்கா (தீதி) மேற்கு வங்கத்திலும், சகோதரி (பெஹன்ஜி) யு பியிலும், அத்தை தலைநகரிலும், மொத்தமாக சர்வசக்தியாக மேடம் இந்தியாவையும், ஒவ்வொரு வீட்டிலும் மனைவியும் ஆட்சி செய்யும்போது...?!!
                    
-------------------------------------------  
என்னைச் சுற்றி...
                    
எப்போதும் என்னைப் பற்றி தவறாக நான் எதுவும் பேசுவதில்லை. நான் சுத்தம் யோக்கியன் என்பதாலல்ல ... அதைப் பற்றிப் பேச என்னைச் சுற்றி போதுமான ஆட்கள் இருப்பதால்...!
                  
----------------------------------------
ஒப்புமை
              
பாகிஸ்தானில் யாருக்குமே பாதுகாப்பில்லை... ஒசாமா பின் லேடன் உட்பட...
                 
இந்தியாவில் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கின்றார்கள்... அஜ்மல் கசாப் உட்பட...
                      
----------------------------------------------
அன்பில் மலர்ந்த நல் ரோஜா...

தினமும் வழக்கமாக அந்த பஸ்ஸில் வரும் அந்த வயதான பெண்மணி அந்த பஸ்சின் கண்டக்டருக்கு பாதாம், முந்திரி போன்றவைகளைத் தருவாள். நெகிழ்ந்து போன கண்டக்டர் "தினமும் எனக்கு இவைகளைத் தருகிறீர்களே நன்றி அம்மா...ஏன் நீங்களே இவற்றைச் சாப்பிடக் கூடாது?"

"இல்லை மகனே...எனக்குப் பற்கள் இல்லாததால் அவற்றைக் கடிக்க முடிவதில்லை..."

"அப்புறம் ஏன் இவற்றை வாங்குகிறீர்கள் பாட்டி?"

"ஏன் என்றால் இவற்றைச் சுற்றியுள்ள சாக்லேட் எனக்கு ரொம்பப் பிடிக்கிறது மகனே..."
   
--------------------------------------------------
மொழிகளிலே .. 


பல மொழிகள் தெரிந்தவராம் வினோபாஜி. ஒருமுறை நிருபர்கள் கூட்டத்த்தில் அவர், நிருபர்களை நோக்கி, 'எந்த மொழியில் நேர்காணல் நடத்த விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார். நிருபர்கள், 'நீங்கள் எந்த மொழியில் சொல்கிறீர்களோ அந்த மொழியில்' என்றார்கள். வினோபாஜி மௌன மொழியில் என்று கூறி விட்டு ரூமுக்குள் சென்று விட்டாராம்!

-------------------------------------------------
கற்க, கற்க !


குழந்தைகளிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பல விஷயங்களில் இரண்டு:  

1) எப்போதும் பிசியாக இருப்பது

2) எந்தக் காரணமும் இல்லாமல் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பது.
  
-----------------------------------------------

புதிர்

செய்பவன் விரும்புவதில்லை. வாங்குபவன் உபயோகிப்பதில்லை. உபயோகிப்பவன் அதை பார்ப்பதில்லை. என்ன அது?

-----------------------------------------------