புதன், 29 பிப்ரவரி, 2012

பார்த்ததும் படித்ததும் நினைத்ததும்- வெட்டி அரட்டை.



புத்தகத் திருவிழாவில் வாங்க விடுபட்டு போனவையாகச் சில புத்தகங்கள் தோன்றின. கபிலன் வைரமுத்து எழுதிய ஒரு புத்தகம். 'உயிர்ச்சொல்' என்ற புத்தகம் தாய்மை பற்றியது என்று விமர்சனத்தில் படித்தேன். அதாவது குழந்தை பிறந்தபின் தாய் மனதில் வரும் மனக்குழப்பங்களை அலசும் புத்தகம். இதில் ஒரு புதுமை. கதைக் கருவை ஒட்டி ஒரு பாடல் எழுதி இசையமைத்துப் பாடி குறுந்தகடாக்கி புத்தகத்துடன் தருவதாகப் படித்தேன். புதுமையாக இருந்தது. 


File:Kabilan Vairamuthu.jpg

இன்னொரு விஷயம் சென்ற முறையே பார்த்ததுதான் இந்த முறையும் வாங்காதது சுப்ரமணிய ராஜு சிறுகதைகள், புதுமைப் பித்தன் சிறுகதைகள் ஆகியவை உட்பட சில புகழ்பெற்ற படைப்புகள் குறுந்தகடாக -ஒலி வடிவில்- வந்திருப்பதை வாங்கிப் பார்க்க (கேட்க) வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஜீவனுடன் வாசிப்பார்களா வேறு மாதிரி இருக்குமா என்று பார்த்திருக்கலாம். வாசிப்பதில் இருக்கும் சௌகர்யம் கேட்பதில் இருக்குமா என்று தெரியவில்லை! குரல் பிடிக்க வேண்டும். Bhaaவம் இருக்க வேண்டும்! கேட்டுப் பார்த்தால்தான் தெரியும். விலை என்னமோ நூறுக்குள் அல்லது சற்று மேல்தான்! 



சில புத்தகங்களைப் படிக்கும்போது இரண்டாவது பதிப்பிலேயே சில மாற்றங்கள் - சில புகைப்படங்களைப் புதிதாகச் சேர்த்து, சில ஓவியங்களைப் புதிதாகச் சேர்த்து - என்று மாறுதலுடன் வெளியிட்டுள்ளார்கள். அப்போது தோன்றியது, "முதல் பதிப்பு வாங்கியவர்கள் இளிச்சவாயர்களா...!" 


இது என்ன நியாயம்?!

அதுபோல நான் முந்தய வருடம் வாங்கிய புத்தகம் ஒன்று பைண்டிங் இல்லாமல் நூறு ரூபாய். அதே புத்தகம் பைண்டிங் செய்யப் பட்டு கிழியும் வாய்ப்புக் குறைக்கப்பட்டு இந்த வருடம் நூற்றுப் பத்து ரூபாய்! 

அடுத்ததாக புத்தகங்களின் விலை பற்றி...

ஒரு புத்தகம் 279 பக்கங்கள். 180 ரூபாய்.
இன்னொன்று 272 பக்கங்கள் 110 ரூபாய்.
பிறிதொன்று 352 பக்கங்கள் 100 ரூபாய்.

முதல் இரண்டு புத்தகங்களின்  விலையைப் பாருங்கள். சும்மா உதாரணத்துக்குச் சொல்பவைதான் இவை. பேப்பர் தரம் என்பார்கள். லே அவுட் என்பார்கள்.கட்டமைப்பு,  பைண்டிங் என்னென்னவோ காரணங்கள்!. ஆனாலும் நான் குறிப்பிட்டிருப்பவை பேப்பர் தரமோ, வடிவமைப்போ ஒரே மாதிரிதான் இருக்கின்றன.

எழுத்தாளர்களை வைத்து விலையா அல்லது புத்தகம் சொல்லும் கருத்து குறித்த விலையா....அதையும் சொல்ல முடியாதபடி புதிய எழுத்தாளரின் புத்தக விலையும் இப்படிதான் இருக்கிறது. பிரித்துப் படித்தால் மேலும் கீழும் நிறைய இடம் விட்டு நடுவில் சிறு கட்டம் கட்டியது போல சிறிய பாகத்தில் எழுத்துகள்.புத்தகங்களை எல்லோரும் வாங்க வேண்டும் என்றால் விலை கொஞ்சம் கண்ணை உறுத்தாமல் இருக்க வேண்டாமோ...


சில ஜெயகாந்தன் தொகுப்புகள் ரூபாய் ஆயிரத்தைத் தாண்டுகின்றன. பழைய பைண்டிங் செய்யப் பட்ட புத்தகங்களைக் கணக்கெடுத்தபின் விடுபடுபவை பார்த்து வாங்கத்தான் வேண்டும்! 

சமீபத்தில் மறைந்த ஆன்மீக எழுத்தாளர் ரா கணபதியின் புத்தகம் - பக்த மீரா  பற்றியது - 370 பக்கங்கள் 45 ரூபாய்க்குக் கிடைத்தது. 



சில பதிப்பகங்களில் பழைய விலையில் புத்தகங்கள் வாங்க முடிகிறது. விசா, பாரதி பதிப்பகங்கள் உதாரணம். சில புதிய புகழ் பெற்ற பதிப்பகங்கள் சொல்லும் விலை தலை சுற்றுவது நிஜம். தொகுப்பாகக் கிடைக்கின்றன. வடிவமைப்பு பார்க்க அழகாக இருக்கிறது. உண்மை. ஆனால் விலை...! இன்னொன்றும் சொல்ல வேண்டும். 'காவல் கோட்ட'மே எடுத்துக் கொள்வோம். அதை வாங்கிக் கையில் வைத்துப் படிக்க முடியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு பெரிய சைஸ். இது மாதிரிப் புத்தகங்கள் வாங்கினால் மற்ற ஸ்டால்கள் அலைய தெம்பு வேண்டும். அல்லது கூடவே தூக்கி வர ஒரு ஆள் வேண்டும்! மேலும் இது மாதிரிப் புத்தகங்களோடு அவர்கள் இலவசமாக ஒரு ஸ்டேண்டும் தரவேண்டும்! ராமாயணம், மகாபாதம் போன்றவற்றை வைத்துப் படிப்போமே...அது போல...பொன்னியின் செல்வன் கடைக்குக் கடை வித வித அளவுகளில் கிடைக்கிறது. ஒரே தொகுதியாக ஐந்து பாகங்களும் என்றும் கிடைக்கிறது. வாங்கினால் கையில் வைத்துப் படிக்கச் சிரமமாக இருக்கும் என்று தோன்றியது.



நர்மதாவில் ஒரு புத்தகம் வாங்கினேன். 852 பக்கங்கள். சைஸ் சொல்ல வேண்டுமென்றால் இப்போது வரும் விகடன் சைஸை விட சற்று பெரியது. நல்ல பேப்பர்கள்தான். வழு வழு அட்டை. எழுநூற்று ஐம்பது ரூபாய் போட்டிருக்கிறது. அறுநூற்றைம்பதுக்கு வாங்கினேன். மேலே சொன்ன புத்தகங்கள் விலையோடு இதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். 


புத்தகக் கண்காட்சியில் பத்து சதவிகிதம் தள்ளுபடி என்கிறார்கள். அதை இன்னும் கொஞ்சம் கூட்டலாம்! தாராளமாகவே தள்ளுபடியை அதிகரிக்கலாம். அவர்களுக்கு நஷ்டமாகாது என்றுதான் நம்புகிறேன். என் கண்முன்னால் வேறொருவருக்கு இருபது சதவிகிதம் தள்ளுபடி செய்த கடை உரிமையாளர் ஒருவர் எனக்கு பத்து சதவிகிதம்தான் செய்தார். தெரிந்தவர்கள், வேறு பதிப்பகத்தார், பொதுவில் படிக்க வாங்குகிறேன்.........ஆயிரம் காரணங்கள்.

நான் அப்போது கவனிக்காத அப்புறம் கவனித்த இன்னொரு கொடுமை ஒரு பதிப்பகம் பத்து சதவிகிதம் தள்ளுபடிகூட இல்லாமலேயே என் தலையில் புத்தகத்தைக் கட்டியிருக்கிறது. என் தவறுதான். ஆனால் கேட்டுதான் அவர்கள் கொடுக்க வேண்டுமா...இரண்டாம் முறை செல்லும்போது கேட்கவேண்டும் என்று நினைத்து பில்லைத் தொலைத்து விட்டதால் கேட்கவில்லை.

திருவாசகம் என்றொரு புத்தகம். இரண்டுபேர் அருகருகே வாங்குகிறார்கள் ஒரே புத்தகம்தான். ஒரே பதிப்பகம்தான். ஆனால் இருவேறு விலையில். அறுபத்தைந்து ரூபாய் வித்தியாசத்தில்! எப்படி?

விலை குறைத்து புத்தகங்களை வாங்க வேண்டுமென்றால் சம்பந்தப் பட்ட பதிப்பகங்கள் அவர்களின் சொந்த வெளியீடுகளின் விலையைக் குறைப்பதை விட வேறு பதிப்பக ஸ்டால்களில் அதே புத்தகத்தை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இது புத்தகங்கள் மட்டுமின்றி அனைத்துப் பொருட்களுக்கும் பொருந்தும். சமீபத்தில் தெரிந்த ஒருவருக்கு எல் இ டி டிவி வாங்க அலைந்தபோது இதே அனுபவம் கைகொடுத்தது! அவர்கள் லாபத்தில் குறைத்துக் கொள்ள அவர்கள் தயாராய் இருக்கிறார்கள். அபபடி வாங்கியும் இருக்கிறேன். 



சில புத்தகங்களை வாங்கி படித்து முடித்தபின் மறுபடி விலையைப் பார்ப்பேன். இந்த விலை கொடுத்திருக்கலாம், வேண்டாம் என்று இரண்டு வகைகளிலும் விலையைப் பார்க்க வைக்கும் புத்தகங்கள் இருக்கின்றன!

வேறு சில மதசம்பந்தப் பட்ட புத்தகங்கள் பிரச்சாரத்துக்காக வேண்டி குறைந்த விலையில் புத்தகங்கள் தருகின்றன. அவற்றை கணக்கில் சேர்க்கவில்லை!

இந்த விலை அநியாயங்களைப் பார்க்கும்போது பேசாமல் வெளியில் செகண்ட் ஹாண்டில் வாங்கி விடலாமா என்றும் தோன்றுகிறது. 


அல்பமாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்!!


சொந்தப் படங்கள் தவிர்த்த இரு படங்கள் உதவி : நன்றி விக்கி, தினமணி.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

கனாக் கண்டேனடி....



வீட்டிலிருந்து கிளம்பி சாலைக்கு வந்தபோது காட்சிகள் எதிர்பார்த்த மாதிரியேதான் இருந்தது. 




சாலையெங்கும் ஜன வெள்ளம்.  ஏதோ திருவிழாவுக்குப் போவது போல...இவ்வளவு பேரும் எந்நேரமும் சாலைகளில் அலைந்து கொண்டேதான் இருக்கிறார்கள். 



அஜீரண பஸ்கள் மக்களை வாந்தி எடுத்தபடி சென்றன.பார்க்கும்போதே ஏற மனமில்லை. கால்டேக்சிகள் போகும் இடத்தைக் கேட்டுதான் வண்டி இருக்கிறதா என்றே சொல்கிறார்கள். நெரிசல் பயம்! குறைந்தது நான்கு நபர்கள் வேறு சேர வேண்டும்.



மெல்ல நடக்க ஆரம்பித்தேன். அரசாங்கம் வாழ்க!



தாண்டிச் சென்ற அத்தனை வண்டிகளிலும் பில்லியன் ரைடர் இருந்ததைக் கவனித்தேன்.  எனக்கு நம் மக்கள் மீது நம்பிக்கை இருந்தது! யாராவது தனியாக வருவார்கள்!

தாண்டிச் சென்ற வண்டியிலிருந்து ஒருவர் இறங்க காலியான பைக் காரர் ஏக்கக் கண்களால் சுற்றுமுற்றும்பார்த்தார். 

என்னைப் பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது. 

"வாங்க...எங்கே போகணும்..."

சொன்னேன். இதற்காகத்தானே அந்த திசையில்தானே நடக்கிறேன்...

"ஏறிக்குங்க..." பின் சீட்டைத் தட்டினார். "எனக்கும் டைம் ஆகுது...என் வைஃப் ஸடனா இன்னிக்கி லீவ் போட்டுட்டா..."

நான் ஏறவில்லை. "எவ்வளவு" என்றேன்.

"இருபது ரூபாய்"

மேலே நடக்கத் தலைப் பட்டேன்.

"சரி...இருபத்தைந்து"

மெளனமாக நடந்தேன்.

"சார்...நியாயமா நடந்துக்குங்க...முன்னால இறங்கினாரே பத்தே ரூபாய்தான்..."



"நாற்பதுன்னா ஓகே.." என்றேன்.

"ஓகே..உங்களுக்கும் இல்லை எனக்கும் இல்லை...முப்பது ரூபாய்... வாங்க" என்றார்.

சற்று தூரத்தில் இன்னொரு நடைவாசி வருவதைக் கண்டதும் இதற்குமேல் பேரம் பேசாமல் முப்பது ரூபாயை வாங்கிக் கொண்டு (முதலிலேயே கொடுத்து விட வேண்டும்) வண்டியில் ஏறினேன். நான் செல்ல வேண்டிய தூரம் இன்று பக்கம்தான் என்பதால் எனக்குக் கொஞ்சம் நஷ்டம்தான்!




அரசாங்கம் வாழ்க... போக்குவரத்து கன்னாபின்னா நெரிசலைச் சமாளிக்க ஒரு புதிய முயற்சியாக "எந்த டூ வீலரிலும் ஓட்டுனர் மட்டும் என்று தனியாகச் செல்லக் கூடாது. அப்படிச் சென்றால் போகுமிடம் பொறுத்து அபராதமோ கட்டத் தவறினால் சிறைத் தண்டனையோ கிடைக்கும் " என்று புதிய சட்டம் போட்டுள்ள அரசாங்கம் வாழ்க...!



வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

டிஜிட்டல் கர்ணன், மணிரத்ன பொம்மன்.

          
பி ஆர் பந்துலு நூற்றாண்டு விழாவை ஒட்டி அவர் இயக்கிய மிகப் புகழ் பெற்ற படமான 'கர்ணன்' திரைப் படத்தை டிஜிட்டலில் வெளியிடுகிறார்கள்.
              
டிஜிட்டல் என்பதால் என்ன வசதி, என்ன மாற்றம் இருக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. 
            
நிச்சயம் சிவாஜி கொஞ்சம் ஒல்லியாகத் தெரிய மாட்டார்! 
  
மிக அருமையான, இனிமையான  பாடல்களைக் கொண்ட படம். சிவாஜி, அசோகன், என் டி ராமாராவ் முத்துராமன் என்று பெரிய ஆட்கள் எல்லாரும் நடித்த மறக்க முடியாத படம். 
    
சிவாஜி கொடுத்த காசுக்கு மேலேயே நடிப்பார் என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்தப் படத்தில் அப்படிச் சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். குந்தி கர்ணனைச் சந்திக்கும் இடம், தேவிகா சிவாஜியை, கர்ணனை சமாதானப் படுத்தும் 'கண்ணுக்குக் குலமேது' பாடல் காட்சி, சபையில் பிறப்பைக் குறித்து அவமானப்படும்போது அசோகன் உதவியதும் காட்டும் நடிப்பு என்று குறிப்பிட்டுச் சொல்ல நிறையவே காட்சிகள் உண்டு. 

                
இதை டிஜிட்டலில் புதுப்பிக்கிறார்கள் சரி, படத்தை இந்தக் கால நடிகர்களை வைத்து மறுபடி எடுத்தால் எந்தெந்த வேடத்துக்கு யார் யார் பொருத்தமாக இருப்பார்கள்? முதலில் கர்ணனாக யார் நடிப்பார்கள்? பிரகாஷ்ராஜ்? ரெண்டு மூணு ரீமிக்ஸ் குத்துப் பாட்டு நிச்சயம். உள்ளத்தில் நல்ல உள்ளம் போன்ற பாடல்களை K to the A to the R to the N to the  என்ற கூச்சல்களுக்கு நடுவே இரண்டு வரி சீர்காழியின் குரலில் தொடங்கி மெல்ல அமுங்க விட்டு உதித் நாராயணனோ வேறு யாரோ அலறுவது போல் கற்பனை செய்யவே நடுக்கமாக இருக்கிறது. அதுவும் ஏகப்பட்ட ஹிட்ஸ் வாங்கும்! இப்படி ஏன் கற்பனை செய்ய வேண்டும் என்கிறீர்களா.... ஒரு பயம்தான்!
  
வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜி பேசும் "மஞ்சள் அரைத்தாயா நாற்று நட்டாயா" வசனம் ரொம்ப ரொம்ப பிரபலமாகி எல்லா நடிகர்களும் பேசிப் பார்த்து சின்னி ஜெயந்த் போன்றோர் மிமிக்ரி கிண்டல் எல்லாம் கூடச் செய்து விட்டார்கள். 
             
அந்தப் படத்தை இப்போது எடுத்தால், அதுவும் மணிரத்னம் ஸ்டைலில் எடுத்து இந்த வசனத்தை அவர் பாணியில் சிக்கனமாக வழங்கினால் எப்படி இருக்கும்?

கட்டபொம்மன் : "என்ன கேட்டாய்.."

ஜாக்சன் : "கிஸ்தி கிஸ்தி..." (சத்யராஜ் ஸ்டைல்!)
   
கட்டபொம்மன் சிறிது நேரம் மேலே நோக்குகிறார். அப்புறம் மெல்ல ஜாக்சன் துரை முகத்தைப் பார்க்கிறார். மெல்லத் திரும்பி நடக்கிறார். 

ஜாக்சன் : சற்று உரத்த குரலில், "கட்டபொம்மா..." 

கட்டபொம்மன் சரேலெனத் திரும்பி "ஏ....ய்" என்ற அலறலோடு கட்டை விரலை நீட்டி விரலை நடுக்கிக் காண்பித்து ஆத்திரத்தை அடக்கி உணர்ச்சி காட்டுகிறார். 

"கட்டபொம்மு.... கட்டபொம்மு என்று சொல்லு" எச்சரிக்கிறார்... சொல்லும்போதே உடைந்துவிடுவது போல 'கட்ட'வில் அப்போடி ஒரு அழுத்தம்!

தாழ்குரலில் (அதுதான் ஹஸ்கி வாய்சில்) ஜாக்ஸனிடம் கேட்கிறார்.

"ஏன், ஏன் தரணும் கிஸ்தி.... ஆங் ....  எங்க கூட வயலுக்கு வந்தியா... ஆங் ... நாற்று நாட்டியா... ஆங்... களை பறிச்சியா ஆங்... "
     
".................................................."
               
'கண்ணுக்குக் குலமேது' ராகத்தில் "கற்பனைக்கு அளவேது....!" 
                        

புதன், 22 பிப்ரவரி, 2012

மூன்று பதில்கள் 01


1)  எந்தவகைப் புத்தகங்களைப் படிப்பதில் அதிக ஆர்வம் உங்களுக்கு? நிறைய அடுக்காமல் பிடித்த முதல் இரண்டு எழுத்தாளர்கள் யார்? ஏன்?(எந்த மொழியாயினும்) அவர்களின் எந்த படைப்பு உங்களுக்கு மாஸ்டர்பீஸ்?
                     
நகைச்சுவை உள்ள புத்தகங்கள். சுய முன்னேற்றப் புத்தகங்கள். 
பி ஜி வோட்ஹவுஸ். (சரியாகச் சொல்லியிருக்கின்றேனா - பெயரை?) மாஸ்டர் பீஸ் என்று தனியாக / குறிப்பாக எதுவும் சொல்ல இயலவில்லை. 
   
2)  சமீபத்தில் 'ரொம்ப நாளைக்கப்புறம் ரொம்ப நேரத்துக்கு மனம் விட்டுச் சிரித்தேன்' என்று சொல்லவைத்த நிகழ்ச்சி என்ன?   
       
இதனுடைய ஒரிஜினல் பதிவான 'வாசகர்களுக்கு 3 கேள்விகள்'  பதிவில், முதல் கேள்விக்கான படத்தை, உருவாக்கி விட்டு, அதைப் பார்த்து ரொம்ப நேரம் சிரித்துக் கொண்டிருந்தேன். ("ஹி ஹி - பொடிமட்டையே தும்மக்கூடாது!" மைன்ட் வாய்ஸ்!)
     
3)  இந்தியாவில் உடனடியாக இது மாற வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் ஒரு விஷயம்....  
    
மற்றவர்களிடம் குறை காண்கின்ற மனப்பான்மை. (ஏதிலார் குற்றம் போல் தன குற்றம் காண்கின் ....)
(டிஸ்கி : யார் பெயரில் பதிவிடப் படுகின்றதோ, அவருடைய பதில்கள் அல்ல!)
     

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

எனக்குத் தோன்றியவை....பாஹே


"உடம்பைப் பார்த்துக்குங்க"

"உடம்பைப் பார்த்துக்குங்க"
"உடம்பைப் பார்த்துக்குங்க"
    
வீட்டுக்குப் பார்க்கவரும் ஒவ்வொருவரும் திரும்பிப் போகும்போது என்னிடம் சொல்லிச் செல்லும் வார்த்தை இது.
    
"ஏன் இப்படி?"  
    
என் மீது தனக்குள்ள அக்கறையைக் காட்டிக் கொள்ளும் முயற்சியா அல்லது வெறும் உபச்சார மொழி மட்டுமா?
    
என்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. ஒரு கட்டத்திற்குமேல் இதைக் கேட்கும்போதெல்லாம் எனக்கே அலுப்பாக இருக்கும். ஓரிரண்டு தடவை நான் இப்படி குறுக்கு வெட்டுவதும் உண்டு. 
   
"பார்த்துட்டேங்க...! அடிவயிறு, தோள்பட்டை, கைகள், கால்கள், முழங்கால், பாதங்கள், விரல்கள் எல்லாமே கரெக்டா இருக்குங்க - ஆனா..."
    
வந்தவர் முகத்தில் வியப்பு கலந்த கேள்விக்குறி - ஏதோ பயங்கர வியாதி பற்றிச் சொல்லப் போகிறேனோ என்ற எதிர்பார்ப்பு -
   
"தலையை மட்டும் காணோங்க... எங்கே போயிருக்கும்?"
      
முறைக்க முடிவதே அவர் காட்ட முடிகிற அதிகபட்ச எரிச்சல்.
            
'எனக்கு மட்டும் சொல்லப்படும் வார்த்தை இது' என நான் நினைத்தது தவறு என்று பிறகு புரிந்தது.
   
யாரோ, யாரிடமெல்லாமோ, பேசிவிட்டுப் பிரியும்போது தவறாமல் இந்தத் தாரக மந்திரத்தை உதிர்த்துக் கொண்டே செல்கிறார்கள்.
            
யுனிவர்சல் ஹிப்பாகரசி.
                
பிறகு நானும் ஆரம்பித்தேன், முந்திக் கொண்டு -
            
"உடம்பைப் பார்த்துக்குங்க...."
               
ஒரு நேச உணர்வுடன் அவர்கள் "நன்றி" சொல்லி விட்டுப் புறப்படும்போது எனக்குத் தோன்றியது - "நான் இதிலும் பின்தங்கி இருக்கிறேனோ?"  
=================================================

ரொம்ப நாளா சில சந்தேகங்கள்....
    
காகங்கள் என் கூட்டமாகவே பறந்து செல்கின்றன? ஒன்றுமட்டும் தனியாகப் பறப்பது ரொம்ப அபூர்வமாக எப்போதாவது என் பலகணிக் காட்சி.   பழைய படப் பாட்டு வரிகள் நினைவுக்கு வருகிறது...
     
"காக்காக் கூட்டத்தைப் பாருங்க - அதுக்குக்
கத்துக் கொடுத்தது யாருங்க..."
        
"பட்சமா இருங்க, பகிர்ந்துண்டு வாழுங்க, பழக்கத்தை மாத்தாதீங்க..."
***********************
(முன்பே ஒரு பதிவில் கேட்டிருந்தோம்) 
நாய்கள் தெருவில் நடந்து செல்வதே இல்லை. அவை எப்போதும் ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன இலக்கின்றி. ஏன்?
                 
என் மனைவி அவ்வப்போது சொல்லும் பழமொழி இது -
                        
"நாய்க்கு வேலை இல்லே, நிக்க நேரம் இல்லே.."
                          
நாமும் இப்படிதான் இருக்கிறோமோ நமக்கே தெரியாமல்? எதிலும் ஒரு அவசரம், விரைவு காட்டிக் கொண்டு, ஏதோ வெட்டி முறிக்கிறாற்போல...!    
************************
   
சிங்கம் புலி போன்றவை மான் முயல் ஆகியவற்றைப் பிடித்துக் குதற, நாலுகால் பாய்ச்சலில் விரட்டுவதும், அவை தப்பிக்க வளைந்து வளைந்து ஓடுவதும் டிஸ்கவரி சேனலில் பார்த்துப் பார்த்துப் பதறி இருக்கிறோம். ஒரு நண்பர் சொல்கிறார், "பசி இருந்தால்தான் சிங்கம், புலி எல்லாம் அவற்றைப் பாய்ந்து கவ்வும். பசி தீர்ந்துபோன சமயங்களில் அவை அவற்றிற்கு வெகு அருகில் வந்து விளையாடினாலும் தீண்டவே தீண்டாது"
     
தினமணி பாஷையில் 'மெய்யாலுமா'? யாராவது டெஸ்ட் பண்ணிப் பார்த்துச் சொல்லுங்களேன்.    
**********************
                      
நம் தமிழ் சினிமாக்களில் இருவர் காரசாரமாய்ப் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒருவர் மற்றவரை ஓங்கி அறைந்து விடுவார். அடிபட்டவர் கன்னத்தைத் தடவிக் கொண்டு பரிதாபமாக பதில் சொல்வார்.
                   
இன்னொரு விதம். பேசிக் கொண்டே இருக்கும்போது ஒருவர் மற்றவரைத் துப்பாக்கியை எடுத்துச் சுட்டு விடுவார், அல்லது கத்தியால் குத்தி விடுவார். பாக்கெட்டில் தயாராக வைத்துள்ள சிவப்பு மையில் நனைந்த பச்சைச் சட்டையில் அழுத்தியபடி அவர் கீழே விழுந்து சாவார்.  
       
நம்பவே முடியாத அருவருப்பான காட்சிகளும் நிறைய.
       
நாயக, நாயகியர் ஆர்கெஸ்டிராவுடன் பாடிக் கொண்டே ஓடிப் பிடிப்பார்கள். நாயகன் முழு பேண்ட், முழுக்கைச் சட்டை, பூட்ஸ், தலையில் தொப்பி இத்தியாதி போர்த்தியிருக்க, நாயகிக்கு ரெண்டு கைக்குட்டைதான் கிடைத்திருக்கும். பெரும்பாலும் மேல்பக்கம் மூட வேண்டிய பகுதி பாதிக்கு மேல் திறந்தும், பாக்கிப் பிரதேசம் அநாவசியமாகக் கவராகியும் இருக்கும். நிஜத்தில் எந்தக் குடும்பத்தில் கணவன்-மனைவியர் இப்படி நடந்து கொள்கிறார்கள்?
               
வில்லன் கூட்டம் பத்துப் பேர் வந்து நாயகியை டீஸ் செய்ய நாயகன் தனி ஒருவனாக அந்தப் பத்துப் பேரையும் அடித்து வீழ்த்துவான்.  நாயகி அவன் அணைப்பில் பயந்த மாதிரி நடிக்க வேண்டும். சில படங்களில் நாயகி வெட்கப் படுவது போல முகத்தை மூடிக் கொள்வாள். இதுதான் அசல் நடிப்பு - உண்மைக்கு நேர் எதிராக.
                           
பி யு. சின்னப்பா காலம் முதல் இன்றுவரை இந்த அலங்கோலங்கள்..... கேட்க நாதியின்றி, நம் இளைய சமுதாயம் ஓட்டு மொத்தமும் இந்த சினிமா மாயையில் விழுந்து கிடக்கிறது. சுதந்திரப் போராட்டம் பற்றியோ அதில் சர்வபரித் தியாகம் செய்தவர்கள் பற்றியோ விஞ்ஞானிகள், இலக்கிய ஆசிரியர்கள், கவிஞர்கள் பற்றியோ இவர்கள் ஏதும் அறியார்கள். 
                  
இதில் கொடுமை. சில வீடுகளில் பெற்றோரும் இதே மாதிரி கூத்தடித்து தம் மக்களைத் தவறான பாதையில் திசை திருப்பி விடுவதுதான்.
             
நம் செய்தி ஊடகங்களும் இதில் மிகமிக மோசமாகவே நடந்து கொள்கின்றன. பேட்டிகள் என்ற பெயரில் பக்கம் பக்கமாகவும், நடிகையின் முக்கால் நிர்வாணப் படங்களுடனும் நம் பத்திரிக்கைகள் பிரசுரிப்பதைக் காணும்போது 'ஆஹா வென்பதோ யுகபோ புரட்சி' என்றே வயிற்றெரிச்சல் பட வேண்டியிருக்கிறது. நம்மால் முடிந்தது அவ்வளவுதானே!
                          

திங்கள், 20 பிப்ரவரி, 2012

உள் பெட்டியிலிருந்து ... 02 2012

                 
நட் பூ
   
உன் சோகம், உன் வருத்தம்  என்னிடம் சொல்லாதது வருத்தம்தான். இதில் என் வெட்கம்,  என் நட்பு உன் சோகத்தை அறிந்தும் காரணத்தை  என்னால் தானாகவே அறிய முடியாமல் போனதே என்பதே...  
================== 
இ.கா....எ.கா...
இறந்த காலம் யாருமே முழுவதும் சரி இல்லை என்கிறது. எதிர்காலம் எல்லாமே மாறக் கூடியதுதான் என்கிறது. 
==================== 

சம்பிரதாய உண்மை!
  
முகத்தில் தெரியும் பாவனைகளை விட இதயத்தில் இருக்கும் உணர்வுகளை மதிப்போம். ஏனென்றால் பாவனைகள் சம்ப்ரதாயம். உணர்வுகள் உண்மை. 
=====================
கேட்கிறதா....
   
மற்றவர்கள் ஆர்வமாகக் கேட்கும் வண்ணம் பேசுங்கள்; மற்றவர்கள் மனம் விட்டுப் பேசும் வண்ணம் கேளுங்கள்.  
=============================
சொல்லியிருக்காங்க...

முடியும் என்றால் முயற்சி எடு; முடியாது என்றால் பயிற்சி எடு! (கலாம்)

என்னுடைய 99% பிரச்னைகள் என்னுடைய 1% கவனமின்மையாலேயே வருகிறது! (ஹிட்லர்)
   
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை. (கார்ல் மார்க்ஸ்)

என்னை நேசிப்பவர்களை நான் நேசித்துக் கொண்டிருப்பதால் என்னை வெறுப்பவர்களை வெறுக்க எனக்கு நேரமில்லை. (டேல் கார்னகி.)
    
ஒரு மனிதன் தன்னையே தன் எதிரியாக உணர்வதுதான் அல்டிமேட் ஆச்சர்யம். - (வெர்னன் ஹோவார்ட்).

இன்றைய பிரச்னைகளைத் தவிர்ப்பதன் மூலம் நாளைய பொறுப்புகளிடமிருந்து  நீங்கள் தப்பிக்க முடியாது. (ஆ.லிங்கன்.)

கற்றல் படைப்பாற்றலைப் பெருக்குகிறது.
படைப்பாற்றல் எண்ணங்களை ஊக்குவிக்கிறது.
எண்ணங்கள் அறிவை வளர்க்கிறது.
அறிவு மனிதனை முழுமையாகுகிறது. (கலாம்)
===================================
தொற்று நோய்
    
எல்லாப் புன்னகைகளும் இன்னொரு புன்னகையால் தொடரப் படுகின்றன. எதிராளி புன்னகைக்க ஏன் காத்திருக்க வேண்டும்? நம்மிடமிருந்து தொடங்கட்டுமே..
  
புன்னகை எப்போதும் சந்தோஷத்தை மட்டும் குறிப்பதில்லை. சில சமயம் நம் மன உறுதியையும் காட்டுகிறது.
===============================
அப்படியா!
     
இரண்டு முகங்களை மனிதனால் மறக்க முடிவதில்லை. ஒன்று கஷ்ட நேரத்தில் கை கொடுத்தவன். இன்னொன்று கஷ்ட நேரத்தில் கை விட்டவன்.
உங்களோடு பேசுவதை நிறுத்துபவர்கள், உங்களைப் பற்றிப் பேசத் தொடங்குவார்கள்.
                       
நீங்கள் அனுசரித்துப் போகும் சிலர் உங்கள் நண்பர்கள். அப்படிப் போகாத பலர் உங்களின் சிறந்த நண்பர்கள்.
============================= 
                         

புதன், 15 பிப்ரவரி, 2012

இலக்கியப் பீட ஹைக்கூ பகிர்வுகள் - பாஹே

     
("இலக்கியப் பீடம் ('ப்' வருமோ?!!) '2/2012 இதழில் படித்ததை, நடுவில் ஓரிரு இடைச்செருகல்களுடன் பகிர்கிறேன் - பாஹே.) 


 @@@@@@@@@@@@

கவிதையை மொழி பெயர்க்கும்போது நம் மொழி பெயர்ப்பில் வந்திருப்பவை எல்லாம் உரை..
எவை விடுபட்டனவோ அவைதான் கவிதை. (ராபர்ட் ஃப்ராஸ்ட்)
  
   
அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்? -  (அமுதபாரதி).  
   
    
என்ன செய்து கிழித்தாய்?
 நாள் தோறும் கேட்கும்
 நாட்காட்டி - (பல்லவன்.)  
     
வரிகளுக்கிடையில்
ஒளிந்துகொண்டிருக்கிறது
வாழ்க்கைக்கவிதை. (பாஹே)  
    
கைகுலுக்கியபின்
எண்ணிப்பார்த்து விடுங்கள்
விரல்களை. - (யாரோ)  

       
இஸ்திரிப் போடுபவனின் வயிற்றில்
ஏன் இத்தனைச் சுருக்கங்கள்?
கஞ்சி போடாததால். (லிங்குசாமி).  
      
ஊரெல்லாம் 'பவர்கட்'
என்றாலும் இயந்திரங்கள் இயங்குகின்றன.
பெண்கள்! - (பேராசிரியர் இராம.சௌந்தரவல்லி). 
    
       
இரண்டு அடி கொடுத்தால்தான்
நீ திருந்துவாய்!
வாங்கிக் கொள்ளுங்கள் வள்ளுவனிடம்!-(அறிவுமதி).  
   
      
உடைந்த வளையல் துண்டைக்
குளத்தில் எறிந்தேன் -
அடடா, எத்தனை வளையல்கள்!-(அறிவுமதி).   
  
                
பேருந்துகள் மட்டுமே
இங்கே நிற்கும் -
நேரம் அல்ல.- (ஜப்பானியப் பழமொழி).   
      
வீட்டின் பெயர்
'அன்னை இல்லம்!'
அன்னை இருப்பது
அநாதை இல்லம்!- (யாரோ).  
       
வயலை விற்ற இரவு
உறக்கமே இல்லை
தவளைகள் இரைச்சல்.- (ஹொ கூஷி)   
      
எச்சரிக்கை!
எரிவது எண்ணெயல்ல
எதிர்காலம்.- (சீ. ஆனந்தக்ருஷ்ணன்) .  
      
முதியோர் விடுதி மரக்கிளையில்
தாய் பார்த்தாள்
இரையூட்டும் குருவி!- (கருமலைப்பழம்நீ).  
      
குப்பைத்தொட்டிக்குள் குழந்தை
எட்டிப் பார்த்தது நாய்
தன குட்டிகளுடன்.- (கருமலைப்பழம்நீ).   
        
வெறுங்கை நானென்ன செய்ய?
கையைப் பிசைந்தவனைப் பார்த்து
நகைத்தன விரல்கள்.- (கருமலைப்பழம்நீ).  
      
வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்.- (தாராபாரதி?)  
      
காடு விளைஞ்சென்ன மச்சான்
நமக்குக்
கையும் காலும்தானே மிச்சம்? -(இதனுடன் நினைவுக்கு வந்த வரிகள்.)  
     
கதவைச் சாத்தி விளக்கை அணைத்து
அப்படி என்ன தண்டனை -
திரையில் படம்.- (ஏர்வாடி எஸ். ராதாக்ருஷ்ணன்).  
       
உருகிக் கொண்டிருந்த மெழுகுவர்த்திதான்
ஊதி அணைத்ததில் பெரிதும் மகிழ்ந்தது
பிறந்தநாள் விழாவில். -( ஏர்வாடி எஸ். ராதாக்ருஷ்ணன்).   
      
ஒவ்வொரு வெற்றி பெற்ற
மனிதனுக்குப் பின்னாலும்
'பல' பெண்கள்! -( ஏர்வாடி எஸ். ராதாக்ருஷ்ணன்).   
       
எவருடைய நினைவுதினமோ
பிரியமாய்ச் சாப்பிடுகிறார்கள்
அநாதை இல்லக் குழந்தைகள்!- (சென்னிமலை தண்டபாணி).  
       
தள்ளு வண்டியில் ரோஜாச் செடிகள்
வாங்கியதும் பூத்தது
விற்றவன் முகம்! - (சென்னிமலை தண்டபாணி.)  
       
ஒரு இலை உதிரும்
வேதனை அறிய
மரமாக வேண்டும்.- (சென்னிமலை தண்டபாணி).
       
கணினிக்குள் தேடுகிறான்
தொலைந்துபோன
வாழ்க்கை எங்கென்று! - (சென்னிமலை தண்டபாணி.)  
       
பூனை வயிற்றில் எது பிறந்தாலும் -
அது எலிபிடிக்கும்.-( சீனப் பழமொழி).   
              
ஏசுவாக எல்லோருக்குமே ஆசை!
சிலுவை தூக்க மட்டும்
யாரும் இல்லை.- (யாரோ).  
                
ஓநாயின் உயிரைக் காக்க
ஆடுகளே
அர்ச்சனை செய்கின்றன-( யாரோ).  
                     
வேகத் தடைகள் எதற்கு
நத்தைகளுக்கு? -( யாரோ).  
       
கரும்பலகை கதறியது
நீ கற்றுக் கொள்ள
என்னைத் தேய்க்கிறாயே......! - (ஆலந்தூர் மோகனரங்கன்).  
                  
மரம் நடுவிழா
மேடை அமைக்கணுமே -
பத்துமரம் வெட்டினோம்.- (ஆலந்தூர் மோகனரங்கன்). 
              
கலப்பை -
குடியானவன் சிலுவை. - (கவிஞர் மீரா.) 
                    
"படுபாவிப் பசங்களா!
எங்கே தொலைஞ்சீங்க?"
சாந்தமூர்த்தி அலறினார்.-( பாஹே).