வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சைக்கிள் வண்டி மேலே!

               
முக நூலில் சுவையான பதிவு போடுபவர்கள் பலர், சைக்கிள் புராணம் எழுதி வருகின்றார்கள்.
             
மயிலாடக் கண்டிருந்த வான் கோழியாக நான் .....
           
அதுவாகப் பாவி(?) த் தூ .....
                 
என் சைக்கிள் சிறகை விரித்தாடுகின்றேன்!
               
நான் சைக்கிள் விடக் கற்றுக் கொண்டது, ஸ்ரீமான் சபாபதிப் பிள்ளை அவர்களின் சைக்கிள்.
  
அவர் யார்?
கல்யாணமஹாதேவி மாரியம்மன் கோவில் பூசாரி.

அவருடைய சைக்கிள் எப்படி உங்கள் கைக்கு வந்தது?
அப்பா வாங்கிக் கொடுத்தார்.

ஒரு மணி நேரத்திற்கு என்ன வாடகை?
வாடகையாக இல்லை சார்! விலைக்கே வாங்கி விட்டார்!

என்ன விலை?
எல்லோரும் கொடுப்பதை விட ஒரு அஞ்சு பத்து பேரிச்சம் பழங்கள் அதிகமாகவே கொடுத்திருப்பார் என்று அம்மா அடிக்கடி சொல்லுவார்!

அந்த சைக்கிளில் என்ன விசேஷம்?
அதுவா? அந்த சைக்கிளில் ஹாண்டில்பாரில் கோவில் கொண்டிருந்த பெல் ஒன்று உண்டு. அதிலிருந்து மட்டும் எவ்வளவு அழுத்தினாலும் மணி சத்தமே வராது. ஆனால் மற்ற எல்லா உறுப்புகளிலிருந்தும் சகலவிதமான சப்த ஜாலங்களும் கேட்கலாம். பெடலை சுழற்றினால், கிருஷ்ணம்மா மாவு மில் சத்தம், கிராங்க் சுற்றினால், ஆந்தை அலறும் சத்தம், டைனமோவை பின் சக்கரத்தில் உராயவிட்டால், மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் கிளிகள் 'கிக்கிரிக்கீ... கிக்கிரிக்கீ' என்று கத்துவது போல சப்தம்.
    

இவ்வளவு ஏன்? இந்த சைக்கிளை, தெருவில் ஓட்டாமல் தள்ளிக் கொண்டே போனால் கூட நடுத்தெருவில் நடப்பதற்கே தட்டுத் தடுமாறி 'தக்கத்திமித்தா' போடுகின்ற ஒரு காது கேளாத பாட்டி, 'இந்த சைக்கிள் கடங்காரன் வேற வந்துட்டான் .... ' என்று சொல்லி, ஓரமாக ஒதுங்கி. சைக்கிளோடு செல்கின்ற எனக்கு வழி விடுவாங்க .... பாத்துக்குங்க!
     
அப்பா ஏன் வாங்கினார் சைக்கிளை?
அப்படி கேளுங்க. எங்கள் அப்பா நாகை - நாகூர் ஹை ரோடில், நாகூருக்கு மிக அருகே தோட்டம் ஒன்று (பணி ஓய்வு பெற்றபொழுது கிடைத்த பிராவிடண்ட் ஃபண்ட் பணத்தில்) வாங்கியிருந்தார். காய்கறித் தோட்டம். தினமும் காலை & மாலை ஆபீசுக்கு போவது போல இந்தத் தோட்டத்திற்கு சைக்கிளில் சென்று வருவார். இந்த சைக்கிளுக்கு மெயின்டனன்ஸ் இன் சார்ஜ் - என்னுடைய மூன்றாவது அண்ணன். அவர் எல் எம் இ படித்து பாஸ் செய்வதற்கு முன்பாகவே சி எம் இ (CME = Cycle Maintenance Engineering) துறையில் டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு  இந்த சைக்கிளில் கற்றுக் கொண்டார்.
    

அவருக்கு அந்த அளவுக்கு சைக்கிள் ஞானம் வருவதற்கு உதவியவர்கள் மூன்று பேர். முறையே எனது நான்காவது அண்ணன், நான், என்னுடைய தம்பி.
     
எப்படி உதவினோம்?
             
என் அண்ணனும், நானும், என் தம்பியும் அந்த ஓட்டை சைக்கிளை எவருடைய கற்பனையையும் விஞ்சும் வண்ணம் ஏதாவது பழுது அடையும்படி ஒரு நிலைக்கு தினமும் கொண்டுவந்து விடுவோம். அல்லது எங்கள் கைகள் பட்ட உடனேயே அது அந்தக் கதிக்கு வந்துவிடும். சைக்கிளில் மொத்தம் நூறு பார்ட் உண்டு என்றால், நாங்க அதில் பெர்முடேஷன் காம்பினேஷன் ஃபார்முலாவில் ஆயிரம் பழுதுகள் ஏற்படுத்தி அந்த சைக்கிளை பெரிய பழுவேட்டரையர் ரேஞ்சுக்குக் கொண்டு சென்றிருக்கின்றோம்!  
    

அந்தப் பழுவேட்டரைய சைக்கிளுக்கு மருத்துவம் பார்த்து, கட்டுப் போட்டு, அதனை சொஸ்தப் படுத்திய மூன்றாவது அண்ணன் டாக்டர் கே ஜி.
   
நான்காவது அண்ணன் ஏற்கெனவே நாகை பஸ் ஸ்டாண்ட், பெருமாள் கோவில், மிஷன் ஹை ஸ்கூல், மாரியம்மன் கோவில் பக்கம் வருகின்ற பயணிகளையும், பக்தர்களையும், ஹவர் (Hour) சைக்கிளால் மோதி, அவர்களுக்குக் கடவுள் பயம் ஏற்படுத்தி, அவர்களிடம் அர்ச்சனை வாங்கி, அதை எல்லாம் ஒரு குலுக்கலில் மறந்து / மறைத்து, ஓரளவுக்கு  பாலன்ஸ் செய்யக் கற்றுக் கொண்டான். அவன் பிராக்டிஸ் செய்யும் பொழுதெல்லாம் கூடவே சைக்கிளைப் பிடித்துக் கொண்டு ஓடிய அனுபவம் எனக்கு நிறைய உண்டு. ஒருநாள் நாங்கள் இருவரும் இப்படிப் பயிற்சியில் (ஓட்டும் பயிற்சி, ஓடும் பயிற்சி) ரோலிங் மில் வேலைக்கு அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஐம்பது வயது தொழிலாளி (ரோலிங் மில் தொழிலாளி) ஒருவரின் கால்களுக்கு நடுவே அவரறியாவண்ணம் பின்புறமாக சைக்கிளை விட்டு, சைக்கிளை அவரிடமிருந்து பிரித்தெடுக்கத் தெரியாமல், அதிலிருந்து குதித்து ஓடி வந்தான் அண்ணன்.
                
அந்த விடாக்கண்டர், வேலைக்கு அவசரமாகச் சென்று கொண்டிருந்த போதிலும், எங்களுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்காமல்,  விடுவதில்லை என்ற தீர்மானத்தோடு இருப்பவர் போன்று, சைக்கிளை தன இரண்டு கைகளாலும் கெட்டியாகப் பிடித்து வைத்துக் கொண்டு, அதைத் தள்ளிக்கொண்டு ரோலிங் மில் இருக்கின்ற திக்கை நோக்கி
           
வேகமாக நடந்தார்.
             
நாங்கள் இருவரும் முதலில் செய்வதறியாது திகைத்தோம்.
  
** (தொடரும்)

** என்னது தொடருமா? அடக்கடவுளே! இது ஒரு தொடர் பதிவா? தொடர்வதற்கு யாரையாவது அழைப்பீர்களா! (என்று கேட்கின்ற முதல் இரு பதிவர்களை தொடர அழைப்பேன். ஜா ஆ ஆ ஆ ஆ க் கிரதை!)
      

17 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நான் கேட்கலைப்பா. அதனால் நோ தொடர் பதிவு. :))) சி.சி.மா.

    பதிலளிநீக்கு
  3. நானும் கேட்க்கப் போவதில்லை... ஏற்கெனவே விடுத்த அழைப்புகளுக்கு எழுத இயலவில்லை... நல்லாருக்குன்னா பதிவு... என் இளமைப் பருவ சைக்கிள் விட்ட ஞாபகங்களும் வந்து செல்கிறது...

    பதிலளிநீக்கு
  4. நானும் கேட்க்கப் போவதில்லை... ஏற்கெனவே விடுத்த அழைப்புகளுக்கு எழுத இயலவில்லை... நல்லாருக்குன்னா பதிவு... என் இளமைப் பருவ சைக்கிள் விட்ட ஞாபகங்களும் வந்து செல்கிறது...

    பதிலளிநீக்கு
  5. பழுவேட்டரையர் ரேஞ்சுக்கு ஆனா சைக்கிள்... ஹ ஹா...

    பதிலளிநீக்கு
  6. சைக்கிளில் மொத்தம் நூறு பார்ட் உண்டு என்றால், நாங்க அதில் பெர்முடேஷன் காம்பினேஷன் ஃபார்முலாவில் ஆயிரம் பழுதுகள் ஏற்படுத்தி அந்த சைக்கிளை பெரிய பழுவேட்டரையர் ரேஞ்சுக்குக் கொண்டு சென்றிருக்கின்றோம்!


    அருமையான அனுபவங்கள்..!

    பதிலளிநீக்கு
  7. பதிவு கலக்கலா இருக்கு.

    என்னது தொடருமா? அடக்கடவுளே! இதுவும் ஒரு தொடர் பதிவா? தொடர்வதற்கு யாரையாவது அழைப்பீர்களா!

    நான் கேட்டுட்டேனே!! ஆனா என்னை நீங்க தொடர அழைக்க முடியாது. ஏன்னா எனக்குத்தான் சைக்கிள் ஓட்டவே தெரியாதே.... ஹா..ஹா..

    (ம்க்கும்... தெரிஞ்ச கம்ப்யூட்டர் தொடர்பதிவே இன்னும் எழுதக் காணோம்.. இதில இப்படி ஒரு அலப்பரை...ன்னு நீங்க முகரக்கட்டைய... ஐ மீன்... மோவாய்க்கட்டையில் இடித்துக்கொள்வது தெரிகிறது... வாட் டு டூ... என் அனுபவத்தைத்தான் எல்லாரும் எழுதிட்டாங்களே, அப்புறம் நான் எழுதினா அது plagiarism ஆகிடுமோன்னுதான்...) :-(((

    பதிலளிநீக்கு
  8. இதென்ன தொடர் காலமா.:)
    சிரிச்சு முடியலை சாமி. அதுவும் அந்தப் பாட்டியின் சாபம்!!ஹைய்யோ:)
    ஒரே நாள் சைக்கிள் கத்துக் கொடுத்துவிட்டு எங்க மாமா கைகால்ல அடிபட்டுக் கொண்டு(!!!)சைக்கிளையும் நான் பிடித்துக் கொண்டிருக்கும் தந்திக் கம்பத்தையும் பிரித்தெடுத்து,பாட்டியிடம் போட்டும் கொடுத்தார்.:)

    பதிலளிநீக்கு
  9. ஆஹா.... அடுத்து ஒரு தொடரும்.... தொடர் பதிவு....

    நான் வரலை இந்த விளையாட்டுக்கு.....

    பதிலளிநீக்கு
  10. ஹா... ஹா... சைக்கிள் புராணம் நல்லா இருக்கே....

    பதிலளிநீக்கு
  11. அருமையான சைக்கிள் அனுபவம்.
    ஹைதர் காலத்து பழசா சைக்கிள்! பழுவேட்டரையர் போரில் நிறைய விழுபுண்கள் பெற்றது போல சைக்கிள் பல விழுபுண்களை பெற்றதா?
    அதில் அப்பா காலை, மாலை தோட்டத்துக்கு போய் வருவாரென்றால் பாவம். நீங்கள் எல்லாம் இப்படி பழுது அடைய செய்தால் அப்பா என்ன செய்வார்கள்?
    தொடருங்கள் தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. நாங்கலாம் இதை, அப்பவே இங்கிட்டு சொல்லிட்டோமே.

    பதிலளிநீக்கு
  13. // அந்த சைக்கிளை பெரிய பழுவேட்டரையர் ரேஞ்சுக்குக் கொண்டு சென்றிருக்கின்றோம்! // ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!