செவ்வாய், 3 டிசம்பர், 2013

அடை தின்ன என்ன தடை?

             
"என்ன ராகவா? என்ன தேடிகிட்டிருக்கே?" என்று கேட்டுகொண்டே உள்ளே வந்தான் ராஜு.
     
"ஒரு மாத்திரை பாட்டில்" என்று சொன்ன ராகவன் தேடுதலில் மும்முரம் ஆனான்.  ராஜு " ஒரு மாத்திரைக்கு ஒரு பாட்டிலா?  அவ்வளவு பெரிய மாத்திரை எதுக்கு ? " என்று விளையாட்டாய் கேட்டான். 
                
மிகவும் கோபமான ராகவன், "உனக்கு என்ன தெரியும் என் கஷ்டம் ?" நேற்று ராத்திரியிலிருந்து நான் படும் அவஸ்தை எனக்கல்லவா தெரியும்? "
                 
"ஏன்? அப்படி என்ன கஷ்டம் உனக்கு ?" என்றான் ராஜு.
                
"வயிற்றில் சங்கடம்" என்று இரண்டு வார்த்தையில் பதிலளித்த ராகவனிடம் மேலும் கேட்டு, அவன் முந்தியநாள் இரவு அடை சாப்பிட்டதையும், அதிலிருந்து வயிறு உப்புசமாகி அவன் கஷ்டப் படுவதையும் தெரிந்து கொண்டான் ராஜு. "சென்ற வாரம் எங்கள் வீட்டுக்கு வந்த பொழுது என் கூட சேர்ந்து அடை சாப்பிட்டாய்தானே?  அன்றிரவோ, மறு நாளோ உனக்கு ஒரு கஷ்டமும் இல்லையே ?" என வினவினான்.  
        
"ஆமாம் ராஜு. விமலா மாதிரி இவளுக்குப் பண்ணத் தெரியவில்லை   கொஞ்சம் சொல்லிக் கொடுக்கச் சொல்லேன்." 

அடுத்த ஞாயிறு ராஜு வீட்டில் அடை செய்வது எப்படி என்று விமலா சொல்லிக் கொடுக்க, ராகவன் மனைவி உமா கற்றுக் கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
                 
ஞாயிறும் வந்தது.  அடை டெமான்ஸ்டிரேஷனுக்கு விமலா ரெடி .  உமாவும் ஒரு சின்ன நோட் புத்தகம் பேனாவுடன் எதற்கும் இருக்கட்டும் என்றொரு பென்சில் இவற்றுடன் தான் எதையாவது மிஸ் செய்து விட்டால் என்ன செய்வது என்று தன் ஸ்மார்ட் போனையும் சார்ஜில் போட்டு எடுத்து வந்திருந்தாள் .
            
தங்கவேலு சொல்லச் சொல்ல, 'அதான் எனக்குத் தெரியுமே' என்று சொல்லும் சரோஜா பூரி செய்த மாதிரி, விமலா சொல்வதை, ரெகார்டரில் பதிவு பண்ணிக் கொண்டே நோட்டுப் புத்தகத்திலும் எழுதிய உமா, அடை சாப்பிட நால்வரும் உட்காரும்வரை, விமலா அடை செய்கின்ற முறை, தான் செய்யும் முறைகளிலிருந்து சற்றும் மாறு படவில்லை என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் சொல்ல மறக்கவில்லை.
    
வழக்கம் போல வெல்லம், வெண்ணெய் இத்யாதி தொட்டுக் கொண்டு அனைவருமே கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டு எழுந்தனர்.  வீட்டுக்கு வந்த பின் இவருக்கு ஏன் இன்னும் வயிறு வலிக்கவில்லை என்ற மாதிரி பார்க்கிறாளோ என்று சந்தேகம் கொண்ட ராகவன்  "எனக்கு இன்று ஒரு சங்கடமும் இல்லை" என்றான்.  கூடவே, "உனக்குத்தான் விமலா மாதிரி அடை செய்யத் தெரியவில்லை" என்றதும் உமா விழுந்து விழுந்து சிரிக்க, ராகவன் இவள் சாப்பிட்ட உணவில் ஏதேனும் கலந்து விட்டதோ என்று யோசிக்க ஆரம்பித்தான்.
    
உமா " எனக்குத் தெரியும். உங்களுக்கு ஒரு சங்கடமும் வராது என்று " என்றாள் .   
              
"ன், மஞ்சத் துணியில் ஒரு ரூபாய் முடிந்து வைத்து விட்டு ராஜு வீட்டுக்கு வந்தாயா என்ன ?"  என்று கேட்டான் ராகவன். 
   
"அதெல்லாம் இல்லை.  இந்த போட்டோ எல்லாம் பாருங்க" என்று சொல்லி, அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது எடுத்த போட்டோக்களைக் காட்டினாள்.   அப்பொழுதும் ராகவனுக்கு என்ன பார்க்க வேண்டும் என்று தெரியாமல் "என்ன? நாம் 3 பேரும் அடை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.  நடுவில் தட்டில் அடை அடுக்கி வச்சிருக்கு.  தட்டில் வெண்ணெய் வெல்லம் இவற்றுடன், கூட்டா அல்லது குருமாவா என்று அடையாளம் தெரியாத சமாச்சாரமும் இருக்கு. அதுனாலெதான் வயிற்று பிரச்சனைகள் எதுவும் வரவில்லை என்கிறாயா?" என்றான்.

"அதெல்லாம் இல்லை. இன்னும் கொஞ்சம் கூர்ந்து பாருங்கள்." 

இன்னும் கொஞ்சம் முயன்று பார்த்த ராகவன் " ஊம் ஹூம் ஐ கிவ் அப் " எனக் கையை விரித்து விட்டு நகர, உமா சப்தமாகச் சிரித்தாள்.  "விமலாக்கா அடைக்கு உபயோகிக்கும் எண்ணெய் சற்றுக் குறைவு....." என்று சொல்ல ஆரம்பித்தவளை "அதுனாலே எனக்கு வயிற்று வலி வரலையாக்கும்? என்று இடைவெட்டின ராகவனைப் பார்த்து "அது இல்லீங்க ...இந்த போட்டோவை சரியாகப் பாருங்க.  ஒரு அடையின் முதலில் ஹீட்  ஆன பக்கத்தையும் இரண்டாம் பக்கத்தையும் பாருங்கள்.  முதல் பக்கம் தீய்ந்த மாதிரி இல்லை ? "
               
"ஆமா அதுக்கு என்ன வந்தது இப்போ?"  என சற்று எரிச்சலுடன் ராகவன் கேட்க, "அதாங்க உங்க மருந்து.  யூனிபார்மா ஒரு பக்கம் முழுக்க தடவி இருக்கு.  உங் யூனிகெம் மாத்திரையில் உள்ளே கரிப்பொடி  இருக்கும்.  விமலாக்கா அடையில் மேல தடவி இருக்கு! அவ்வளவுதான்" என, ராகவனும் புரிந்து கொண்டு சிரித்தான்.
             
என்ன நண்பர்களே சற்றுக் கறுவலாக அடை  தின்று பார்க்க வேண்டும் போலிருக்கா ?
               

12 கருத்துகள்:

  1. பதிவை ரசித்து வாசித்தேன். மேலே உள்ள படத்தை பார்த்தைப்பார்த்தும்தான் சாப்பிட தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  2. வயிற்று பிரச்சனைகள் எதுவும் வரவில்லை என்றால் சரி தான்...

    பதிலளிநீக்கு
  3. ரசித்தேன்....:)) அடை படங்கள் நாவில் நீர் சுரக்க வைக்கின்றன...

    பதிலளிநீக்கு
  4. உங்க யூனிகெம் மாத்திரையில் உள்ளே கரிப்பொடி இருக்கும்.

    சரிதான் ...!

    பதிலளிநீக்கு
  5. என்னோட ஃபேவரிட் அடைதான். ஆனால் வெளியே போனால் அடை சாப்பிட்டு வெறுத்துப் போயிட்டேன். ஆகையால் இப்போல்லாம் வீட்டிலேயே அடை பண்ணிச் சாப்பிட்டுக்கறதுனு முடிவு பண்ணியாச்சு.

    பதிலளிநீக்கு
  6. ஆனால் ஒரு முக்கியமான விஷயம் பாருங்க,

    இந்த ஆண்களுக்கே அவங்க மனைவி செய்யறதை விடப் பக்கத்து, எதிர், நண்பர், உறவினர் வீட்டுப் பெண்கள் எல்லாருமே நல்லாச் சமைக்கிறாப் போல ஒரு பீலிங்க்ஸ் ஆப் இந்தியா இருக்கு. அதுக்கு உங்க ராகவனும்(நீங்க தானோ) விதிவிலக்கில்லை. என்னோட ரங்க்ஸும் விதி விலக்கில்லை. இப்போல்லாம் நான் இதுக்கெல்லாம் அலட்டிக்கறதே இல்லை.

    அந்த மாதிரி அவங்க வீட்டிலே நல்லா இருக்கு; இவங்க வீட்டிலே நல்லா இருக்குனு சொன்னால் போதும்; இனிமே அங்கேயே போய்ச் சாப்பிடுங்கனு சொல்லிடறேன்.

    ஒரு நாளைக்கு மேல் சாப்பிட முடியாதுனு தெரியுமே! அதான், தைரியமாச் சொல்லிடுவேன்.:)))))))

    பதிலளிநீக்கு
  7. அடை பண்ணற விதம் பத்தி நம்ம சாப்பிடலாம் வாங்கவிலே எழுதி இருக்கேன், உங்க ராகவனையும், உமாவையும் அதையும் படிச்சுக்கச் சொல்லுங்க.:)

    பதிலளிநீக்கு
  8. அடை சாப்பிட இப்படியா!
    நல்ல யோசனை.

    பதிலளிநீக்கு
  9. அட! அடையை வச்சு ஒரு அசத்தலான பதிவு! அடை ருசித்தது! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. அட..... அடை!

    இன்னிக்கு அடை மாவு அரைச்சிட வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
  11. @வெங்கட், இன்னிக்கு நானும் அடைக்கு நனைச்சு வைச்சிருக்கேன். :))))

    பதிலளிநீக்கு
  12. யாராவது இப்படி மருந்து பொடி தூவி அடை செய்வார்களா? சும்மா கதைக்காகவா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!