புதன், 18 டிசம்பர், 2013

பிரபல கொலை வழக்குகள்



புத்தகத்தில் ஏராளமான அச்சுப் பிழைகள்.  2012 இல் வெளிவந்த புத்தகம்.

கொஞ்சம் எதிர்பார்ப்புடன்தான் படிக்க ஆரம்பித்தேன். 



பல வழக்கு விவரங்கள் விவரமாக சொல்லப் படாமல், கேட்டதை வைத்துக் கொண்டு எழுதியது போல விவரங்கள். சில வழக்குகளின் முடிவில் 'இதை அடிப்படையாக வைத்து சில பாலிவுட் படங்கள் வந்தன' என்கிறார். என்னென்ன என்று சொல்லவில்லை. (அது முக்கியமில்லை என்று சொல்லலாம். ஆனால் படிக்க முழுமை கிடைக்கவில்லையே)
ஆஷ் கொலை வழக்கு, சிங்கம்பட்டி கொலைவழக்கு, பாவ்லா கொலை வழக்கு, பகூர் கொலைவழக்கு, லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, ஆளவந்தான் கொலைவழக்கு, நானாவதி கொலை வழக்கு, எம் ஜி ஆர் சுடப்பட்ட வழக்கு, விஷ ஊசி கொலை வழக்கு, மர்ம சந்நியாசி...ஆக, பத்து வழக்குகள் பற்றிய புத்தகம்.

விஷ ஊசி கொலைவழக்கு பற்றி மிக முன்பு குமுதத்தில் படித்திருக்கிறேன். 
ஆஷ் கொலை வழக்கு பற்றி எழுதும்போது சுப்ரமணிய சிவா தொழுநோயால் அவதிப்பட்டு சீக்கிரமே காலமானது பற்றி,  நீலகண்ட பிரம்மச்சாரி இந்த வழக்கிலிருந்து வெளிவந்ததும் மறுபடியும் தேச சேவையில் ஈடுபட்டு அப்புறம் கடைசிக் காலத்தில் சுவாமி ஓம்கார் என்ற பெயரில் ஆன்மீகத்தில் ஈடுபட்டது போன்ற விவரங்களையும்,  வ உ சி கப்பலை நஷ்டம் வந்து ஆங்கிலேயரிடமே விற்றபோது பாரதியார் அதை 'வெட்கக்கேடு' என்று விமர்சித்தது என்று சிறு சிறு குறிப்புகள்  வரைந்துள்ளார். விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டில் முதலும் கடைசியுமாக நிகழ்ந்த ஒரே கொலைச் சம்பவம் என்கிறார்.



ஆங்கிலேயர்களின் கல்வி அடிப்படையிலேயே கல்வி பயில ஜாமீன் பரம்பரைகளுக்கு சென்னையில் DMS வளாகம் இருக்கும் இடத்தில் நியூயிங்டன் பள்ளி இருந்ததாம். 


1955இல் அகுஜா கொலை வழக்குக்குப் பிறகுதான் ஜூரிகள்  சிஸ்டத்தை இந்தியாவிலிருந்து எடுத்தார்களாம்.
நுண்ணுயிரியைக் கொண்டு கொலை செய்யும் கலை 1931 லேயே நடந்திருக்கிறது. அந்த வழக்கு பற்றி பகூர் கொலை வழக்கில் சொல்கிறார். 

                   

அப்பாதுரை சமீபத்தில்கூட லட்சுமிகாந்தன் கொலை வழக்கு பற்றி எழுதியிருந்தார். இதிலும் அதே அளவு சுருக்கமாக எழுதியிருக்கிறார்.

எம் ஜி ஆர், எம் ஆர் ராதா சுட்டுக் கொண்ட வழக்கும் அவ்வண்ணமே. 

நாவரசு கொலை வழக்கு போலவே துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட ஆளவந்தான் பற்றி விவரம்அடுத்தக்  கட்டுரையில்.
ஆளவந்தான், நானாவதிக் கதையின் சம்பவங்கள் இன்றளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மற்ற கட்டுரைகள் சீக்கிரம் சீக்கிரமாக முடிக்கப் பட்டு வந்து பத்தாவதாக மர்ம சந்நியாசிக்குள் நுழைகிறார் ஆசிரியர். அநேகமாக அந்த ஒரு வழக்கைப் புத்தகமாகப் போட நினைத்து அதனுடன்தான் மற்றவைகளையும் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

விஷ ஊசி கொலை வழக்கையே ஐந்தரைப் பக்கங்களில் முடித்து விடுகிறார். அப்புறம் இந்த 'மர்ம சந்நியாசி' வழக்கு விவரம்தான். ஆனால் சும்மா சொல்லக் கூடாது. படிக்க ரொம்ப சுவாரஸ்யமாய் இருப்பதும் இதுதான். விளக்கமாய் எழுதப் பட்டிருப்பதும் இதுதான்.

1909 லிருந்து சம்பவம் தொடங்கி இறுதித் தீர்ப்பு லண்டன் பிரிவி நீதிமன்றத்திலிருந்து வந்த நாள் 1946. உச்ச நீதிமன்றம் இந்தியாவில் இல்லாததால் அந்நாட்களில் இறுதி கட்ட உச்ச வழக்குகள் இங்குதான் முடிவு செய்யப் பட்டன. எம் கே டி பாகவதர்- என் எஸ் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு'க் கூட இங்கிருந்துதான் இறுதித் தீர்ப்பைப் பெற்றது. 

கிழக்கு வங்காளத்தில் இருக்கும் பாவல் ஜாமீன் இளைய சகோதரர் 25 வயது மேஜோ குமார் விடுமுறைக்காக மலை வாசஸ்தலம் சென்ற இடத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டு உறவினர் நட்புகள் பெருமளவில் கூடுமுன் அவர் மைத்துனர் குழாமால் அவசர அவசரமாக எரியூட்ட எடுத்துச் செல்லப்படும் வழியில் பெருமழை தாங்காது 'சடலத்'தை ஓரமாக வைத்து ஒதுங்கி நின்று திரும்பிவந்து பார்க்கும் நேரம் சடலம் காணோம். தேடித் பார்த்தும் தோல்வி.  தங்கியிருக்குமிடம் திரும்புபவர்கள் மறுநாள் காலை வெள்ளைத் துணியால் மூடப்பட்ட ஒரு உருவத்தைக் கொண்டு போய் எரிக்கிறார்கள். செய்யவேண்டிய சாஸ்திரங்கள் எதுவும் செய்யாமலேயே.  மைத்துனர் 30,000 ரூபாய்க்கு செத்தவர் பெயரில் ஒரு பாலிசி எடுத்திருக்கிறார். அதையும் மற்ற பணங்களையும் சகோதரிக்குத் தராமலே அவர் அடைகிறார். ஜமீனிலிருந்து வரும் பென்ஷன் மட்டும் மேஜோ குமார் மனைவிக்கு. 

மேஜோ குமார் உறவினர்களுக்குச் சந்தேகம் இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. மேஜோ குமாரின் மனைவி ஒன்றும் அறியாதவராக இருக்கிறார். சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு அந்த ஊருக்கு வரும் ஒரு சந்நியாசி மேஜோ குமார் போல இருக்கிறார். பின்னர் பல கட்ட விசாரணைக்குப்பின் அவர்தான் என்று முடிவெடுக்கப்பட்டாலும், ஊர் மக்களும், மேஜோ குமாரின் சகோதரிகள் ஒத்துக் கொண்டாலும், அவர் மனைவி ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. 

வழக்கு, விசாரணை, தீர்ப்பு. அவர்தான் மேஜோ குமார் என்று கடைசியில் தீர்ப்பானாலும், அந்நாட்களில் டி என் ஏ சோதனை இல்லாததால் நிரூபணங்களுக்கு நிறைய கஷ்டப்படுகிறார்கள். இந்த விவரங்கள் மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கின்றன. இறுதித் தீர்ப்பு வரும்போது மேஜோ குமாருக்கு 63 வயது. 
பத்திரிகைகளிலும், நாட்டு மக்கள் மத்தியிலும், ஏன், லண்டனிலும் கூட மிகவும் பரபரப்பாக பேசப் பட்ட வழக்கு. 



இதைத் தழுவி நிறைய படங்கள் வந்திருக்கலாம். 'திகம்பர சாமியார்' கிட்டத்தட்ட இதன் அடிப்படையில் எடுக்கப் பட்டது என்று தெரிகிறது.

பொதுவாகவே அந்நாட்களிலேயே ஊடகங்களின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்று சொல்லி வழக்கை வேறு மாநிலங்களுக்கு மாற்றியிருக்கிறார்கள். வழக்கைப் பாதிக்குமளவு ஊடகங்களின் (ஊடகங்கள் என்ன, செய்தித்தாள்கள்தான்) கருத்துத் தாக்கம் இருந்திருக்கிறது. உள்ளூர் மக்கள் அபிப்ராயமும் அப்படியே.
 


பிரபல கொலை வழக்குகள்
SP சொக்கலிங்கம்
கிழக்குப் பதிப்பகம்
196 பக்கம் 140 ரூபாய்

24 கருத்துகள்:

  1. விறுவிறுப்பான புத்தக விமர்சனம்..!

    பதிலளிநீக்கு
  2. கடந்த புத்தக சந்தையின் போது தலைப்பின் சுவாரசியம் கருதி வாங்கி, பின்பு படிக்கத் தொடங்கி, படிக்க சுவாரசியம் இல்லாமல் ஏண்டா வாங்கினோம் என்று பாதியிலேயே மூடச் செய்த புத்தகம் சார்... பரவாயில்ல உங்க பொறுமைக்கு அளவே இல்ல... படிச்சி முடிச்சிடீங்களே

    பதிலளிநீக்கு
  3. இது என்ன சொக்க லிங்கம் இப்படி பண்ணீட்டரு..

    இதென்னா யாரொ ஒரு நாதியத்த ஜமீன் செத்த வழக்கு ....

    இந்திரா காந்தி கொலை...
    ராஜிவ் காந்தி கொலை..
    .
    .
    .
    .
    .
    திருச்சி ராம ஜெயம்(முன்னாள் அமைச்சர் நேரு தம்பி) கொலைன்னு எழுதினா...

    10 லட்சம் காப்பி கூட விற்கும்.

    இந்திரா கொலையை ஒட்டி டெல்லி வன்முறை அதன் தொடராக அமரிக்க வாழ் சீக்கியர் வழக்கு.. சோனிய அம்மையாருக்கு கொடுக்கபட்ட சம்மன்..ன்னு போனா...

    ராஜிவ் காந்தி கொலையில் பொய் குற்றம் சாட்டப்பட பேரறிவாள்ன்.. வேண்டுமேன்றே சரியாக விசாரிக்காத கார்த்திகேயன்... 100 கோடி மக்கள் பணம் வீணான கதை..
    இதற்கு காரன்மான முன் பின்னான அமைதிபடை அமைதி சொறியான கதை.. பிராபகரன் மரணம் ?? கொலை ...
    இவற்றில் ரா, மொசாட், கேபிஜி யின் பங்கு..

    இப்படி நூல் இழை எடுத்தால் உலக வரலாறே எழுதலாம்.

    பல வால்யூம் எழுதலாம்.

    இதை எல்லாம் விட்டுடு... என்ன புக் எழுதுறாங்க.?

    எதை எழுதுனா யாரும் எதுவும் கேட்க மாட்டங்களொ.. டெஸ்க் ஒர்காகவே என்ன கதையும் எழுதிக்கலாமோ... உழைப்பு தேவைபாடதோ.. அதை செய்திருக்கார் சொத்தை லிங்கம்...

    பதிலளிநீக்கு
  4. அடுத்த 'கடந்த 30 நாட்களில்...' இதுவாகத் தான் இருக்கப் போகிறது.

    பதிலளிநீக்கு

  5. யாருக்கு எதுதெரியுமோ அதைத்தானே எழுதமுடியும். கொலை வழக்குகளில் சங்கர ராமன் கொலை வழக்கு அண்மையில் தீர்ப்பு கூறப் பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை. குற்றவாளி யாரோ.?

    பதிலளிநீக்கு
  6. கொலை வழக்குகள் , கொலை மர்மங்கள், ஊகங்கள், கண்டு பிடிப்புகள் எல்லாம் படிக்க நல்ல விறு விறுதான்.
    உங்கள் விமர்சனமும் நல்ல விறு விறுப்பு.

    பதிலளிநீக்கு
  7. புத்தகத்தில் இவ்வளவுக் கொலைகளா?
    இவ்வளவுகப்பிரபலமான கொலை வழக்குகளா!

    பதிலளிநீக்கு
  8. "திகம்பர சாமியார்" வடுவூர் எழுதி வந்த கதை. சின்ன வயசிலேயே படிச்சிருக்கேன். சினிமாவா வந்ததுனு தெரியாது. ஆனால் வடுவூரோட இன்னொரு கதை, அதிலேயும் திகம்பர சாமியார் வருவார்! :))) ஷெர்லக் ஹோம்ஸ் மாதிரி திகம்பர சாமியார். நிறைய மர்மக் கதைகளில் வருவார். அந்த இன்னொரு கதை தான் "அறிவாளி" சினிமாவா வந்ததாய்ச் சொல்வாங்க. படம் பார்க்கலை, அதனால் அது குறித்து நிச்சயமாய்த் தெரியாது. :))))

    பதிலளிநீக்கு
  9. பல சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கும் போலிருக்கே!!
    திகம்பர சாமியார் விவரங்கள் எனக்குப் புதிது!

    பதிலளிநீக்கு
  10. அருமையாக விமர்சனம் செய்து இருக்கின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
  11. கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் என்கிற வடுவூராரின் நாவல் தான் 'திகம்பர சாமியார்' திரைப்படம் ஆயிற்று.
    அவரது 'மேனகா'வும் திரைப்படமாக வந்திருக்கிறது.

    'திரிபுரசுந்தரி அல்லது திகம்பர சாமியார் திடும் பிரவேசம்' என்று அவரது இன்னொரு நாவலும் உண்டு.

    இன்னொருவர் கும்பகோணத்து டி.எஸ். துரைராஜ். இவர் எழுதிய 'கருங்குயில் குன்றத்துக் கொலை'
    நாவல் தான் சிவாஜி நடித்த 'மரகதம்' திரைப்படம். (சந்திரபாபு வின் குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே' பாடல் இதில் தான்.)

    பதிலளிநீக்கு
  12. சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. பில்லூர் செல்லத்ம்மா வழக்கு பற்றி ஏதேனும் தெரியுமா? திருக்கட்டுப்பள்ளி கூத்தூர் சுப்‌பாராயர் வழக்கு என்று பல ஆண்டுகள் முன் கேட்ட நினைவுண்டு

    பதிலளிநீக்கு
  14. "திகம்பர சாமியார்" படம் நம்பியார் நடித்து இருக்கிறார். பல வேஷங்களில் வருவார். கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
    நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. சென்னை வரும்பொழுது வாங்கிவிட வேண்டியது தான் கிழக்கு காரர்களுக்கு வாடிக்கையாக வேண்டுமே என்று தோன்றினாலும்.

    பதிலளிநீக்கு
  16. 'கடந்த 30 நாட்களில்' ஆரூடம் பலித்து விட்ட மாதிரி இருக்கே! :))

    பதிலளிநீக்கு
  17. நல்ல விமர்சனம்.

    படிக்க முயற்சி செய்கிறேன்.....

    பதிலளிநீக்கு

  18. 22/12/13 தேதியிட்ட தினமலர் வாரமலரில் பிரசுரமாகியுள்ள ஒரு துணுக்குச் செய்தி. (இது வேறு புத்தகம்)


    "பத்திரிகையாளர், 'இந்து நேசன்' லட்சுமிகாந்தன், கொலை வழக்கில் கைதான ஜெயானந்தன், உடனே, 'அப்ரூவர்' ஆனான். சென்னை ஒற்றை வாடைத் தியேட்டரில், பாகவதரையும், என்.எஸ்.கிருஷ்ணனையும் சந்தித்ததாகவும், நச்சுப் பாம்பை ஒழித்துக் கட்ட, என்ன செலவானாலும் ஏற்பதாகக் கூறி, அவர்கள், சதித்திட்டம் தீட்டியதாக வாக்குமூலம் கொடுத்தான்.

    'எங்கள் கவுரவத்திற்கும், புகழுக்கும் கேடு விளைவிக்கும் வகையில், துரோகம் செய்ய மாட்டோம் என்று, சத்தியம் செய்ய வேண்டும்...' என்று, பாகவதர் கேட்டார். அதன்படியே, உப்பு, வெற்றிலை வைத்து, சத்தியம் செய்து கொடுத்தானாம்.

    பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், பட்சிராஜா ஸ்டுடியோ அதிபர் ராமுலு நாயுடு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
    பம்பாயிலிருந்து வந்த, வழக்கறிஞர் கே.எம்.முன்ஷியின் வாதத்தின் பேரில், சதி ஆலோசனை நடந்ததாக சொல்லப்படும் நாளில், ஸ்ரீராமுலு நாயுடு, பம்பாய் தாஜ் ஓட்டலில், ஆர்.கே.சண்முகம் செட்டியாருடன் இருந்தார் என்று நிரூபித்து, ஸ்ரீராமுலு விடுதலை பெற்றார்.

    முன்ஷியின் ஒரு நாள் பீஸ், அக்காலத்திலேயே, எழுபது ஆயிரம் ரூபாய்.
    முன்ஷியின் வாதத்தால், ஸ்ரீராமுலு விடுதலையானதைக் கண்ட என் எஸ்.கே., தானும், முன்ஷியை வழக்கறிஞராகக் வைத்துக் கொண்டார்.

    முன்ஷியின் வாதத்தைக் கேட்டவுடன், கோர்ட்டு, தன்னையும் விடுவிக்கும் என்று, நம்பிக்கையோடு இருந்தார்.

    சதி நடந்ததாகச் சொல்லப்படுகிற நாளில், கிருஷ்ணன், மாடர்ன் தியேட்டர்சின் படப்பிடிப்பில் இருந்தார் என்று, நிரூபிக்க முயன்றார் முன்ஷி.
    அப்போது, மாடர்ன் தியேட்டர்சின் படம் டைரக்ட் செய்து வந்தவர் எம்.வி.ராமன் என்பதால், அவர் சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டார். 'நவ., 7ம் தேதி,
    என்.எஸ் கிருஷ்ணன், 3மாடர்ன் தியேட்டர்சில் இருந்தார்...' என்று, சாட்சி அளித்தார் ராமன்.

    'அன்று, பக்த ஹனுமான் படத்துக்காக, ஒரு தந்திரக் காட்சி எடுத்துக் கொண்டிருந்தோம். மாலையில், என்.எஸ்.கிருஷ்ணன் வந்தார்...' என்று, கேமராமேன் பெய்லஸ்சும், 'மாலையில், மாடர்ன் தியேட்டர்சில் டிபன் சாப்பிட்டார்...' என்று, சவுண்டு இன்ஜினியர் பிள்ளையும் சாட்சி கூறினார்.

    ஆனால், இந்த சாட்சிகள் எதுவும் பலிக்கவில்லை. என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், பாகவதருக்கும், ஆயுள் தண்டனை என்று, தீர்ப்பானது.

    — 'புகழ் பெற்ற வழக்குகள்' என்ற நுாலிலிருந்து..."

    பதிலளிநீக்கு
  19. நன்றி DD.

    நன்றி RR மேடம்.

    நன்றி சீனு. வாங்கி, படிக்கவேயில்லையா!

    நன்றி ஆதி வெங்கட்.

    நன்றி வினோத் குமார்.

    நன்றி ஜீவி ஸார்... நீங்கள் ஆரூடம் சொன்ன அன்று மாலையே நீங்கள் சொன்ன மாதிரி வந்து விட்டது!

    நன்றி ராஜி.

    நன்றி ஜி எம் பி ஸார். பின்னாளில் இவையெல்லாமும் புத்தகமாக வரும்!

    நன்றி கோமதி அரசு மேடம்.

    நன்றி ராஜலக்ஷ்மி பரசிவம் மேடம்.

    நன்றி கீதா சாம்பசிவம் மேடம். திகம்பரசாமியார் பார்த்ததில்லை. சொல்லக் கேள்விதான்!

    நன்றி middleclassmadhavi.

    நன்றி ஸாதிகா மேடம்.

    ஜீவி ஸார்... ரெண்டு படமுமே நான் பார்த்ததில்லை. சமீபத்தில் 'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' என்று கூட ஒரு படம் வந்த நினைவு!

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி நாரதமுனி. நீங்கள் சொல்லும் வழக்கு விவரம் கேள்விப்பட்டதில்லை.

    மீள்வருகைக்கும், தகவலுக்கும் நன்றி கோமதி அரசு மேடம்.

    நன்றி அப்பாதுரை. வாங்குமளவு....

    ஜீவி ஸார்... நீங்கள் சொல்லுமுன் நானே சொல்லி விட வேண்டுமென்று நினைத்திருந்தேன்!

    அப்பாதுரை... 'எங்கள் ப்ளாக்' சைட் பாரில் வரும் 'கடந்த முப்பது நாட்களில் அதிகம் பேரால் படிக்கப்பட்ட பதிவு' என்ற செக்ஷனில் இதுவும் வந்து விடும் என்று ஜீவி ஆரூடம் கூறியிருந்தார். அதைத்தான் சொல்கிறார்.


    நன்றி வெங்கட் நாகராஜ்.

    பதிலளிநீக்கு
  20. ஆளவந்தார்,லக்ஷ்மிகாந்தன்,நாவரசு இதெல்லாம் படித்துப் படித்து ,ஏன்,ராஜீவ்,இந்திராகாந்தி எல்லா வழக்குகளுமே பேப்பரில் படித்துப் படித்து
    நமக்கு எல்லாம் தெரியும் என்ற தோற்றத்தை உண்டுசெய்த நாட்கள் ஞாபகம் வருகிறது.சினிமாவெல்லாம் முக்கால் பாகம் பார்க்கத் தடை உத்தரவு
    எங்கள் வீட்டில். சினிமா ஞானம் அவ்வளவாகக் கிடையாது. அன்புடன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!