புதன், 30 செப்டம்பர், 2015

அன்புள்ள ஆறுமுகம் - மூன்று.


அஞ்சு: "உங்களுக்கு என் மீது எவ்வளவு பிரியம்! நல்ல சிவப்புக் கல்லு வெச்ச வளையல்கள் ஒரு ஜோடி வாங்கித் தருகின்றீர்களா?"
  

ஆறு: "சிவப்புக் கல்லு வளையல்கள்? சூப்பர். அதுவும் கரெக்ட்!"

அஞ்சு : " நான் எப்பவும் கரெக்டாத்தான் பேசுவேன். "

(தொடரும்)  
       
       

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

அன்புள்ள ஆறுமுகம் - இரண்டு

                       
அஞ்சு: "போன வருடம் நெக்லஸ் வாங்கித் தருவதாகச் சொன்னீங்க. கடைசி நேரத்தில் உங்க தங்கை சீமந்தத்திற்கு செலவு செஞ்சுட்டீங்க. இந்த வருடமாவது நெக்லஸ் வாங்கித் தருகின்றீர்களா? "
    
   
ஆறு: "நெக்லஸ் ? ஆ! ஆமாம்! சரிதான்!"

அஞ்சலைக்கு புல்லரித்தது. 'அட! இவருக்கு போனஸ் தவிர வேறு ஏதோ சம்திங் கெடச்சிருக்கு போலிருக்கு. விடக்கூடாது இவரை' என்று நினைத்துக்கொண்டாள்.

(தொடரும்)
               
   

திங்கள், 28 செப்டம்பர், 2015

'திங்க'க் கிழமை 150928 கார பூந்தி. +அன்புள்ள ஆறுமுகம் - ஒன்று

   
தேவையான பொருட்கள்: 
கடலை மாவு : இரண்டு கப் 
அரிசிமாவு : ஒரு கப்.
உப்பு, மிளகாய்த்தூள் : தேவையான அளவு. (அரைத் தேக்கரண்டி என்று சொன்னால் கீதா மேடம் சண்டைக்கு வருவார்கள்) 
சிலர் மிளகுத் தூள் சேர்ப்பார்கள். (மிளகாய்த்தூளுக்கு பதிலாக) 
சன்டிராப் ஆயில் : அரை லிட்டர். 
நிலக்கடலை ஐம்பது கிராம். 
கறிவேப்பிலை ஒரு ஈர்க்கு. 
     
செய்முறை: 
கடலை மாவு, அரிசிமாவு இரண்டுக்கும் கலப்புமணம் செய்யவும். சாட்சியாக, எடுத்துக்கொண்ட உப்பில், பாதியைச் சேர்க்கவும். (மீதி உப்பு, காரத்தூள் இவை எல்லாம், காரபூந்தி தயாரானதும், கலக்குவதற்கு தேவைப்படும்) மாவுக்கலவையில், தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைக்கவும்.  

வாணலியில் எண்ணெயை விட்டுக் காயவைக்கவும். வீடியோவில், காரபூந்தி செய் முறையைப் பார்த்துக்கொள்ளுங்கள்.   
     

     

காரபூந்தியை செய்ததும், சுத்தமான டிஸ்யூ பேப்பரில் போட்டு, சிறிது நேரம் வைத்திருந்தால், எண்ணெய் நன்றாக நீங்கிவிடும். 

காசு மிஞ்சி இருந்தால், முந்திரிப்பருப்பை வாங்கி, கால் பருப்புகளாக ஒடித்து, நெய்யில் வறுத்து, காரபூந்தியில் போடலாம். கறிவேப்பிலையைக் கூட, நெய்யில் பொறித்துப் பொடித்துப் போடலாம்!  

இந்த தீபாவளிக்கு காரபூந்தி செய்யுங்கள்! 

==========================================
ஏழு நாள் தொடர்:

அன்புள்ள ஆறுமுகம்  - ஒன்று 
  
ஆறுமுகத்தின் பத்தினி, அஞ்சலை வெளியிலிருந்து, தன வீட்டிற்குள் வருகின்றாள்.

ஆறுமுகம் மும்முரமாக புத்தகம் படித்துக் (பார்த்துக்?) கொண்டிருக்கின்றார்.

அஞ்சு : "என்னங்க தீபாவளி போனஸ் வந்துடுச்சாமே. பங்கஜம் சொன்னா. பங்கஜம் புருஷன் பரந்தாமனும் உங்க ஆபீஸ்தானே? "

ஆறு: (புத்தகத்திலேயே கவனமாக ...)  "உம் ....   உம்."

அஞ்சு : :எனக்கு இந்த தீபாவளிக்கு ஜிமிக்கி வாங்கித் தருவீங்களா?"

ஆறு: "ஜிமிக்கி ?  ஜிமிக்கி!!  ஓ  சரி! அப்புறம்?

அஞ்சலைக்கு ஒரே மகிழ்ச்சி. 'ஆஹா இவர் சந்தோஷ மூடில் இருக்கார். இன்னும் வேண்டியவைகளை நிறைய பட்டியல் போடலாம் போலிருக்கே!'

(தொடரும்)

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

ஞாயிறு 325 :: அணிலே, அணிலே ஓடிவா!

                 
                                 
மத்தியப் பகுதியை உற்றுப் பாருங்கள், அணிலாண்டவர் தரிசனம் தருவார்! 
          
     

சனி, 26 செப்டம்பர், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1)  உலக மக்கள் சேவை மையமும், பி.மணிமாறனும்.
 


 
2) ஒளி அறக்கட்டளையின் மனிதாபிமானம்.
 


 
3)  பாறை நிரம்பிய பகுதி பசுமையானது.  பாறைகளையே அணைகளாக்கிய கேரளத்தை பூர்வீகமாக கொண்டஜோசப் பாப்லே (64).   இவர் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் இன்ஜினியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
 



 
4) ஒருவர் - அதுவும் ஒரு காவல்துறை அதிகாரி - அநியாயம் செய்தால், அங்கே நன்மை செய்ய பலபேர் இருந்தார்கள்!  65 வயது கிஷன்குமாருக்கு நேர்ந்த அனுபவம்.
 



 
5)  வீடு தேடிச் சென்று பசியாற்றும் தன்னார்வலர்கள் சங்கர், மணிகண்டன்.
 



 
6) அவசரத்திற்காக இவரிடம் நம்பிக்கை இல்லாமல் வாகனத்தை கொடுத்தவர்கள் பிறகு இவரைத்தவிர யாரிடமும் தங்களது வாகனத்தை கொடுப்பது இல்லை என்று முடிவு செய்தனர் அவ்வளவு தொழில் சுத்தம். மிக முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேனே, கடையின் உரிமையாளரும் சீப் மெக்கானிக்குமான கண்ணப்பன் என்ற இளைஞருக்கு இரண்டு கண் பார்வையும் கிடையாது.
 


 
7) விஜயலட்சுமி தேஷ்மனேயின் சிலிர்க்க வைக்கும் கதை. 
 



 
8)  இப்படி இருக்க வேண்டும் முன் உதாரணமாய்!   கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரியும் சாம்சன்.
 



9)  திருச்சி பாரதியின் சேவை.


புதன், 23 செப்டம்பர், 2015

சிமெண்ட் தரையில் தானாய்த் தோன்றும் மர்ம முகங்கள்




                                                         

ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வது போல நம்ப வைத்து விட்டு அதற்குப் பதினேழு வருடங்களுக்குப் பின்னர் அர்ஜென்டினாவில் இயற்கை மரணம் அடைந்தான் என்பது பற்றி 

 
அறிவியல் உலகில் டெக்னாலஜியை வைத்து எப்படி எல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள், நம்மைப் பற்றிய அந்தரங்க விவரங்களைக் கூட அறிந்துகொண்டு பணம் பறிக்கிறார்கள் என்பது பற்றி 


2012 லண்டன் ஒலிம்பிக் சின்னத்துக்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள்..
ஆவி, பேய் இருப்பது நிஜம்தானா,


நிலவுக்கு மனிதன் போனது நிஜமா, பொய்யா,


ஹோமோசெக்ஸ் இயற்கையா, ஸ்டிரெய்ட் செக்ஸ், பைசெக்ஸ் என்றால் என்ன,

 
ஸ்லீப் அப்னியா பற்றி பயமுறுத்தும் கட்டுரை ஒன்று.  குறட்டை விடுபவர்களுக்கும் வரும் பிரச்னைகள் பற்றிப் பேசுகிறது. 

 
விமான விபத்து பற்றி மூன்று கட்டுரைகள்.

ஸ்பெயின் நாட்டின் ஒரு கிராமத்தில் தரையில் தானாய்த் தோன்றி மறைந்த  மனித முகங்களின் சித்திரங்கள் பற்றி,

அப்புறம் தலைப்புக்குக் காரணமான நிலவில் தென்பட்ட மனித உருவம் பற்றிய கட்டுரை 

மொத்தம் 13 தலைப்புகளில் கட்டுரைகள். 


மிஸ்டரி, அமானுஷ்யம், மர்மம் என்ற வகைகளில் அத்தியாயங்கள் என்று கொஞ்சம் சுவாரஸ்யமான புத்தகம்.   மனுஷ்யபுத்திரனின் சீடர்.  பல்வேறு சுவைகளிலும் எழுத வேண்டும் என்று ம.பு சொன்னதைக் கேட்டு அவ்வப்போது உயிர்மையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.







நிலவில் ஒருவன்
ராஜ் சிவா
உயிர்மைப் பதிப்பகம்
144 பக்கங்கள் - 125 ரூபாய்.

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

அலுவலக அனுபவங்கள் :: இப்படியும் சில ஊழியர்கள், அதிகாரிகள்!


குடியிருப்பும் அலுவலகமும் கலந்திருக்கும் ஒரு அலுவலகம்.


அலுவலகத்திலிருந்து கொஞ்ச தூரத்தில் குடியிருப்புகள்.  அந்தக் குடியிருப்பின் ஒரு வீட்டில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் தலைமை அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு மேலதிகாரி வசித்தார்.


தினமும் இந்த அலுவலகத்தில் வேலை செய்யும் அடிப்படை ஊழியர்களை அழைத்து ஏதாவது வேலை வாங்கிக் கொண்டே இருப்பது அவர் வழக்கம்.  இது அந்த ஊழியர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்தாலும் வேறு வழியில்லை.


தலைமை அலுவலகத்தின் மேலதிகாரி.   என்ன செய்ய முடியும்?


அலுவலகத்தில் கொஞ்சம் கடபுடா பேர்வழி ஒருவன் இருந்தான்.  அவனை மட்டும் அந்த அதிகாரி வேலை சொல்ல மாட்டார்.  மற்றவர்களுக்குக் காரணம் புரியவில்லை.  அவன் மேல் பொறாமையாகக் கூட இருந்தது.


அதற்குக் காரணமும் ஒரு நாள் அவன் சொல்லித் தெரிந்தது.  இவர்கள் செய்யாத செயலை அவன் செய்திருந்தான்.  அதுவும் ஒருமுறை அல்ல!


ஒருமுறை அந்த அதிகாரி இவனை அழைத்து  100 ரூபாயைக் கையில் கொடுத்து காலை டிஃபன் வாங்கி வரச் சொல்லி இருக்கிறார். ஒரு பொங்கலும், ஒரு வடையும் வாங்கி வரச் சொல்லி இருக்கிறார்.  கூடவே எப்போதும் மற்றவர்களிடம் சொல்வது போல 'உனக்கு ஏதாவது வேணும்னாலும் வாங்கிக்கோ' என்று சொல்லி இருக்கிறார்.  எப்போதுமே, எல்லோரிடமுமே சொல்வதுதான் என்றாலும் மற்றவர்கள்  "பரவாயில்லை ஸார்"  சொல்லி விடுவார்கள்.


இவன் அவருக்குப் பொங்கல் வாங்கிக் கொடுத்து விட்டு ("வடை இல்லையாம் ஸார்"),  மிச்சம் 20 ரூபாய் தந்திருக்கிறான்.   இருபது வருடங்களுக்கு முன் 100 ரூபாயின் மதிப்பும், டிஃபன்களின் விலைகளும் வேறு லெவல்! 

 
அவர் கேள்விக் குறியுடன் பார்த்தபோது தான் வாங்கிக் கொண்ட பொட்டலங்களைக் காட்டியிருக்கிறான்.  மூன்று, நான்கு வகைகள்!  அவருக்குப் பொங்கல் வடை மட்டும்!  தானே சொன்னதால் அவரால் ஒன்றும் பேச முடியவில்லை.  சாப்பாட்டு விஷயத்தில் என்ன சொல்ல முடியும்?


அடுத்த முறை அவனை அழைக்க நேர்ந்தபோது அவன் கையில் சென்ற முறையை விட காசு குறைத்தே கொடுத்திருக்கிறார்.  அதற்கும் அவன் தங்கள் இரண்டு பேருக்கும் சரி சமமாக வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான்.  மிச்ச காசு இல்லை என்று சொல்லி விட்டான்.


அதற்கும் அடுத்த முறை சரியான காசு கொடுத்து அனுப்பி இருக்கிறார்.  ஆனால், அடுத்த 'டர்னி'ல் அவருக்கு டிஃபன் வாங்கப் போன
இன்னொரு ஊழியர் வந்து,  இவர் கணக்கில் 45 ரூபாய் கடன் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.  சென்ற முறை 'இவன்' செய்த கைங்கர்யம்!

 
அதுதான் அவர் அவனை அழைப்பதே இல்லை.  மற்ற ஊழியர்களுக்கு இது போல செய்ய ஏனோ தைரியம் இல்லை!


இன்னொருமுறை குழாய்த் தண்ணீரில் ஏதோ நாற்றம் வருகிறது என்று
மேலே தண்ணீர்த் தொட்டி சுத்தம்செய்யச் சொன்னபோது, மேலே ஏற வழி இல்லாத அந்த வீட்டில், பின்னால் தண்ணீர் ஏறும் பைப் வழியாக ஏறுகிறேன் என்று அந்த பைப்பையும், ஒரு ஜன்னல் கதவையும் உடைத்து வைக்க, அதை அவர் சரி செய்யப் பட்ட பாட்டில்
அவர் இவனை அழைப்பதே இல்லை.  இவனைப் பார்த்தாலும் பார்க்காதது போலத் தாண்டிச் சென்று விடுவார்.


திங்கள், 21 செப்டம்பர், 2015

"திங்க"க்கிழமை 150921 :: டாங்கர் பச்சடி.


ரொம்ப சிம்பிள்ங்க..

உளுத்தம் பருப்பை எடுத்து நல்லா வாசனை வர, சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள்.  அதை ஆறவைத்து, பிறகு மிக்ஸியில் இட்டு, நைஸாக அரைத்துக் கொள்ளவும்.  அளவு உங்கள் இஷ்டம்.  ஏனென்றால் வறுத்த பொடியை எடுத்து பாட்டிலில் வைத்து எப்போது வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம்.
 

                                                                    Image result for dangar pachadi images
 
பிறகு அந்த மாவிலிருந்து தேவைக்குத் தகுந்தபடி இரண்டு மூன்று ஸ்பூன் எடுத்து ஒரு பாத்திரத்திலிட்டு, எடுத்திருக்கும் மாவுக்குத் தகுந்த அளவு உப்புச் சேர்த்து, (உப்பு அளவில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கீதா மேடத்தைக் கேட்கவும்) கெட்டித் தயிர் சேர்த்துக் கலக்கவும்.  உரை(றை?) குத்தி நாலு மணி நேரம் சென்று எடுத்த தயிர் சரியாக இருக்கும்.
 
 
பச்சடிப் பதத்துக்குக் கலக்கிக் கொண்ட பிறகு அதில் கடுகு, பெருங்காயம் (சற்று தாராளமாகவே), காய்ந்த மிளகாய் (உங்கள் காரத் தேவையைப் பொறுத்து) தாளித்துக் கொள்ளவும்.
 

                                                            Image result for dangar pachadi images
 
கரிவேப்பிலை,கொத்துமல்லி சேர்க்கவும்.  சிலர் இதில் தக்காளியைப்  வதக்காமல் பச்சையாகவே நறுக்கிச் சேர்ப்பார்கள்.  (நாங்கள் சேர்ப்பதில்லை)
 
 
அவ்வளவுதான்.  டாங்கர் பச்சடி ரெடி.   துவையல் சாதம் முதல் வத்தக்குழம்பு சாதம் வரை எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.




படங்கள்  :  நன்றி இணையம்.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

ஞாயிறு 324 இது என்ன ஸ்கூட்டர்? + சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 7/7


ஏழுநாள் தொடரின் முடிவை யூகிக்காதவர்கள் எல்லோரும், இங்கே இருக்கின்ற ஸ்கூட்டர் படம், என்ன பிராண்ட், என்ன மாடல் என்று கண்டுபிடியுங்கள். 
       
                     

 சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 7/7 
     
முதன் முதலாக முன்பின் தெரியாத முகநூல் நண்பரிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது, என்ன பேசுவது, என்னைப் பற்றி முழுவதும் என் பதிவுகள்  மூலம் அவருக்குத் தெரிந்திருக்கும்.

அவர் என் நண்பர்கள் கூட்டத்தில் யார் என்று கூட எனக்குத் தெரியவில்லையே!

சற்றுக் குழம்பியவனாக அவரருகே சென்று ......   " நீங்க ......   ஃபேஸ் புக்குல ....  வந்து ...... நீங்க   ...... இங்கே ....எப்படி  .... "  என்று பேச ஆரம்பித்தேன்.

அவர் உடனே, " ஆஹா! ஆமாம் ஃபேஸ்புக் தான்! கரெக்ட்.  முதலில் நீங்க என்னைப் பார்த்துச் சிரித்தவுடனேயே தெரிந்துகொண்டுவிட்டேன், என்னை அடையாளம் கண்டுவிட்டீர்கள் என்று."

"இல்லை, நான் வந்து ..... அதாவது ..... உங்களை ...... "

"ஆமாம், ஆமாம் நீங்க என்னை இங்கே  எதிர்பார்க்கலை இல்லியா! ஒரே ஒரு ரிக்வெஸ்ட். நீங்க என்னை இங்கே பார்த்ததாக யாருக்கும் சொல்லிவிடாதீர்கள். கொஞ்சநாளைக்கு யார் தொந்தரவும் இல்லாம இருக்கலாம் என்று வந்திருக்கேன். ப்ளீஸ் ....... " என்று சொல்லியவாறு வேகமாக பார்க்கை விட்டு வெளியேறினார்!  

      
  


(ஹி ஹி அம்புட்டுதான்)
             

சனி, 19 செப்டம்பர், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம் + சொல்லாதே யாரும் கேட்டால் ... 6/7




1)  மாணவர் சமுதாயம் இன்றைய கால கட்டத்தில் படிப்பு மட்டும் அல்லாமல் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்து அசத்துகின்றனர். மக்களுக்கு பயன்படும் வகையில் பல வித பொருட்களை கண்டுபிடித்து தங்கள் தனி திறமைகளை வெளி காட்டுகின்றனர்....  பிளஸ் 1 மாணவன் அஜய் விஷால்.
 


2)  முன்பு தமிழ்நாட்டுக்குள் வந்த செய்தியாக விஸ்ராந்தி பற்றிப் பார்த்தோம்.  இப்போது மீண்டும் சாவித்திரி வைத்தி பற்றி அகில இந்திய அளவில்.
 


3) T3K.  சென்னையை அழகாக்க முயற்சிப்பவர்கள்.
 



4)  கல்வித்தரம், கட்டமைப்பு வசதி மற்றும் சுகாதார வசதிகளில் தன்னிகரற்ற வகையில் வேகமாக வளர்ந்து வருகிறது மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.  தலைமை ஆசிரியரின் முயற்சியில், தனியார் பங்களிப்புடன்.
 


5)  ஜாலி ஹோம்.
 



6)  திண்டுக்கல் அருகே பஞ்சாயத்து தலைவர் ஒருவர், மக்கள் பங்களிப் புடன் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் அமைத்து ஒரு முறை பெய்யும் 2.5 செ.மீ. மழை யில் 1.70 கோடி லிட்டர் தண்ணீ ரைச் சேமித்து, குடிநீர் பிரச்சினைக் குத் தீர்வுகண்டு சாதனை படைத் துள்ளார்.  சாதனை மனிதர் வாகரை பஞ் சாயத்து தலைவர் கே.சின்னான்,  அனைவராலும் பின்பற்றப் படவேண்டியவர்.
 



7)  ஈக்களும் புழுக்களும் குடியிருக்கும் சூழலில், கால்கள், கைகள், மர்ம உறுப்புகள் அழுகிய நிலையில், குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நிலையில், ஆதரவற்றுக் கிடப்போரை மீட்டு இல்லங்களில் சேர்க்கிறார், 'அகல் பவுண்டேஷன்' வெங்கடேஷ்.
 


8)  விளையும் பயிர்.  ஆனால் இது எந்த அளவு சாத்தியம், தலையை அசைத்தாலே ஆன் ஆகி,  ஆஃப்  ஆகி விடும் என்றால் பயனிருக்குமா என்றெல்லாம் தோன்றினாலும் தெரியாமலா விருதுக்குத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்? முயற்சிக்குப் பாராட்டுகள்.
 


9)  குறை சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, செயலில் நாமே இறங்கி விடுதல் நல்லது!  ரிசர்வ் வங்கியிலிருந்து ஒய்வு பெற்ற 65 வயது அஜித் லக்ஷ்மிரத்தன்.
 



10)  பேராசை இல்லை.  வாழ்க்கையை நடத்தத் தேவையான அளவு பணம், இல்லை, இல்லை, காசு போதும்!  அதற்குமேல் வேண்டாம்.  வரதராஜன், 75 - ஆதிலெட்சுமி,72 தம்பதியர்.
 



11)  தமிழகத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான டிரைவர்கள் லோடு ஏற்றி வந்தாலும், அதில் நான் மட்டும் தான் பெண் என்பது, ரொம்ப பெருமையாக இருக்கும். இப்போது, டிரைவராக மட்டுமே, மாதம், 30 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன். சொந்த லாரி என்பதால், கிடைக்கும் கூடுதல் லாபம் தனி. கஷ்டம்னு நினைத்தால், வீட்டை விட்டு வெளியே வர முடியாது; முடியும்னு நினைத்தால் எந்தச் சுமையும் சுகமாக மாறிவிடும்.  'கல்பனா சாவ்லா' விருது பெற்ற, லாரி ஓட்டுனர் ஜோதிமணி
 


12)  எத்தனை தடைகள்!  அத்தனைத் தடைகளையும் உடைத்தது தன்னம்பிக்கை மற்றும் முயற்சி என்னும் நேர்மறை எண்ணங்கள்தானே...  பாவன் கௌர்.
 



13)  இந்த 'பைக்கிற்கு' தேசிய அளவில் முதல் பரிசு கிடைத்துள்ளது.  ஒருமுறை 'சார்ஜ்' செய்தால் 60 கி.மீ., செல்லும். மின்சாரமின்றி இடையில் நின்றாலும் 5 நிமிடங்கள் கழித்து இயங்கினால் கூடுதலாக 5 கி.மீ., வரை செல்லும்.   
 
 
மாற்றுத் திறனாளிகளால் தங்கள் பைக்கை 'ரிவர்சில்' இயக்க முடியாது. இதற்கு பிறர் உதவியை நாட வேண்டியுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'இ பைக்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி ஆட்டோ மொபைல் பேராசிரியர் ராஜவேல் தலைமையில் மாணவர்கள் முகமது ஷகில், சப்தகிரி, நவீன்குமார், சரண்பாண்டியன், அஸ்வின்பாபு, நிஷாந்த் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர்.  


 


================================================================


சொல்லாதே யாரும் கேட்டால் ... 6/7  
    
எனக்கு அவரைத் தெரியவில்லை. அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது.

எப்படி ?

என் முகம்?......   முகம் ........!    

அட! இப்போ தெரிஞ்சிடுச்சு. முகநூல்.

நான்தான் என்னுடைய முகத்தை முகநூலில் ஆதிகாலம் முதல்  மாற்றாமல் அப்படியே போட்டு வைத்திருக்கின்றேனே!
      
(யாருங்க இந்த இளிச்சவாயன்?)  
      

ஃபேஸ்புக்கில் இருக்கின்ற என்னுடைய மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு என் முகம் நன்கு பரிச்சயம் ஆகி இருக்குமே!

இவர் என் படத்தை facebook ல பார்த்திருப்பார். அதனால்தான் என்னைத் தெரிந்திருக்கின்றது!

இதோ இந்த ரவுண்டில் அவரை நெருங்கினேன்.

அவர் பெஞ்சிலிருந்து எழுந்து, என்னிடம் பேசத் தயாராக நின்றுகொண்டிருந்தார்.

(தொடரும்)

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150918 & சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 5/7

           


                  
சொல்லாதே யாரும் கேட்டால் ... ... 5/7  


இந்த ஊரில் தமிழ் பேசுபவர்கள், தமிழ் தெரிந்தவர்கள் அதிகம். அதனால இதுல விசேஷமா எதுவும் இல்லை.
           
கட்டிடத் தொழிலாளர்கள் தொடங்கி காய்கறிக் கடைக்காரர் வரை எல்லோரும் தமிழ் பேசுகிறார்கள்.
             
ஏதேனும் கல்யாண மண்டபத்தில் உறவினருக்கு நண்பர் அல்லது நண்பருக்கு நண்பர் என்று பார்த்துப் பேசி இருப்பேனோ? ஊஹூம் - உறவினர்களிடமே அதிகம் பேசாதவன் என்று எனக்குப் பெயர்.
       
ஏதாவது ரயில் சிநேகமாக இருக்குமோ? சான்ஸ் இல்லை. 
    
(இது என் படம் இல்லை!) 


ரயிலில் நான் தனியாக வரும்பொழுதெல்லாம்  ஒன்று புத்தகம் படிப்பேன் அல்லது ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பேன். இல்லையேல் கண்ணை மூடிக்கொண்டு ஆத்மவிசாரம் பண்ணிக்கொண்டு வருவேன்! (திருமதியுடன் வரும்பொழுது திருமதியின் பேச்சு மட்டும்தான் கேட்டுக் கொண்டிருக்கும்!)
             
எனக்கு அவரைத் தெரியவில்லை என்று இருக்கும் பொழுது, அவருக்கு மட்டும் எப்படி என்னைத் தெரிந்திருக்கும்?

(தொடரும்)
       

வியாழன், 17 செப்டம்பர், 2015

சொல்லாதே யாரும் கேட்டால் ..... 4/7


சொல்லாதே யாரும் கேட்டால் ..... 4/7  
 
    
இதோ இந்த ரவுண்டில் அவரருகே சென்ற சமயம் .....

அவருடைய அலைபேசியில் அவருக்கு அழைப்பு வந்துவிட்டது.

"ஹலோ ஆமாம் .... தெரியும், தெரியும், சொல்லுங்க. ஓ அப்படியா! ...... " தொடர்ந்து பேசிக்கொண்டே என்னைப் பார்த்துத் தலை அசைத்தார். மீண்டும் புன்னகை.

தமிழ் பேசுகிறார்! தமிழ் தெரிந்தவர். இது எங்காவது என் மூளையில் பெல் அடிக்கிறதா என்று பார்த்தேன்.

ஊஹூம். மண்டை காய்கிறது. யார் அவர்?

(தொடரும்)

       

புதன், 16 செப்டம்பர், 2015

சொல்லாதே யாரும் கேட்டால் .... 3/7



     சொல்லாதே யாரும் கேட்டால் ...  3/7
   
ஒருவேளை ... முன்பே  எங்காவது பார்த்து, பேசி இருப்பேனோ?

சில சமயங்களில், தபால்காரரை அவருடைய யூனிஃபாரம் அல்லாத உடையில் அல்லது சலவைக்கடைக்காரரை சலவைக்கடை அல்லாத பிற இடங்களில் பார்த்தால் எனக்கு சட்டென்று ஞாபகம் வராது.

இவருக்கு விதவிதமாக யூனிஃபாரம் மனதால் போட்டுப் பார்த்தேன். சிரிப்புதான் வந்தது. வேறு ஏதும் ஞாபகம் வரவில்லை.

'அடுத்த ரவுண்டில் அவரையே கேட்டுவிடுவோமா?' என்று எண்ணமிட்டபடி, நடந்தேன்.

(தொடரும்)