திங்கள், 20 நவம்பர், 2017

"திங்க"க்கிழமை - ஜீரக ரசம் (ஜீராமிளகு சாத்துமது) - நெல்லைத்தமிழன் ரெசிப்பி



ரொம்ப சுலபமா, அதே சமயம் குளிர் காலத்துக்கு ஏற்ற ரசம், ஜீரா மிளகு ரசம்.

பொதுவா இந்த ரசம் பண்ணினா, அப்பளாம் காய்ச்சிப் போடுவாங்க. ஏன்னா பெரும்பாலும் கொஞ்சம் உடம்பு சரியில்லைனா இந்த ரசம் வைப்பாங்க. எங்க அப்பா என்னோட சின்ன வயசுல நிறைய தடவை இதைப் பண்ணிப்போடுவார். என் ஹஸ்பண்டு வெண்டைக்காய் வதக்கல் பண்ணுவா.  அவளோட ரெசிப்பியை நான் கொஞ்சம் மாறுதலோட செய்திருக்கிறது நல்லா வந்தது.

ஒரு தக்காளியை மிக்சில அரைச்சுக்குங்க. நான் தோலெடுக்கறதுக்கெல்லாம் மெனக்கெடறதில்லை.



1 ஸ்பூன் ஜீரகம், 15 மிளகு, 1 ஸ்பூன் துவரம்பருப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை.  இதை நல்லா மிக்சில அரைத்துக்கொள்ளுங்கள்.  [ கறிவேப்பிலையை மிக்சியில் அரைத்து விட்டால் லேசாக மருதாணி வாசம் வரும் என்று நான் அப்படிச் செய்வதில்லை! ]



புளி ஜலம் 1 டம்ளர், 1 ஸ்பூன் சாம்பார் பொடி (இது இல்லைனா, ¼ ஸ்பூன் தனியா பொடி, ½ ஸ்பூன் மிளகாய்ப்பொடி, கொஞ்சம் மஞ்சப்பொடி சேர்த்துக்கோங்க. மேல மிக்சில அரைக்கற ஐட்டத்துல ¼ ஸ்பூன் துவரம்பருப்பு கூடுதலாகச் சேர்த்துக்கோங்க), தேவையான உப்பு, தக்காளி பேஸ்ட் போட்டு கொதிக்கவைங்க. புளி வாசனை போகணும். இப்போ இதோட ஜீரகம்/மிளகு போட்டு அரைத்த பேஸ்டைச் சேர்த்துக்கோங்க. இப்போவே 5 கருவேப்பிலையையும் போட்டுக்கோங்க. ரசத்துக்குத் தேவையான தண்ணீரையும் சேர்த்துக்கோங்க. கொஞ்சம் பொங்கி வரும்போது அடுப்பை அணைத்துவிடவும்.



எப்பவும்போல் நான் கடுகு, கறிவேப்பிலை தாளித்தேன்.

வேலை ரொம்ப சுலபம். ரசம் சாதம் வேண்டாம்னு நினைக்கறவங்க, இதையே சூப் மாதிரி சூடா சாப்பிட்டீங்கன்னா, குளிர் பிரதேசத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும். நான், ரெசிப்பில இல்லாத பெருங்காயத்தை ரசப் பொடி போடும்போது கொஞ்சம் சேர்ப்பேன். புளி கொஞ்சம் ஜாஸ்தியானால் பரவாயில்லை. மிளகு காரம் ஈடுகொடுக்கும்.

நான் இதைச் செய்த அன்று, புடலங்காய் பருப்புசிலி செய்தேன். (உண்மையா பருப்புசிலி இல்லை. உப்பு மோதகக் கொழுக்கட்டைக்கு உள்ளே வைக்கும் பூரணம் நிறைய இருந்தது. அதைத்தான் சேர்த்து பருப்புசிலி மாதிரிச் செய்தேன். புடலை பருப்புசிலி ரொம்ப நல்லா இருக்கும்.).



பெரும்பாலும் நான் சமையல் செய்வது வார இறுதி நாளில்தான். நான் ஒரு இனிப்புப் பிரியன். உடம்பு எடை பற்றிய கவனம் வந்தபிறகு, சாப்பிடுவது குறைந்தாலும், வாங்குவதோ, செய்வதோ குறைந்ததில்லை. இப்போவும், இனிப்பு கடைகளில் இருக்கின்ற ஐட்டங்களை கண்ணால் பார்ப்பதற்காகவே கிடைத்த சந்தர்ப்பங்களில் கடைக்குச் செல்வேன். அன்றைக்கு கடலைப்பருப்பு/அரிசி போட்டு வெல்லப் பாயசம் செய்திருந்தேன்.



நீங்களும் ஜீரா மிளகு ரசத்தைச் செய்துபார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

அன்புடன்,

நெல்லைத்தமிழன்.


86 கருத்துகள்:

  1. எத்திக்கும் தித்திக்க
    தீஞ்சுவைத் திங்கள்..

    பதிலளிநீக்கு
  2. இப்போது இங்கே குளிர் ஆரம்பமாகி விட்டது.. கண்டிப்பாக இந்தப் பக்குவத்தை செய்து விடவேண்டியது தான்..

    பதிலளிநீக்கு
  3. வருக துரை செல்வராஜூ ஸார்...

    இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஸ்ரீராம்...
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  5. இன்னிக்கு நானும் ஜிரக ரசம் தான் வைக்கப் போறேன். ஆனால் பொங்கி வரும்போது மேலே வரும் நுரையை நான் எடுத்துடுவேன் :) ரசம் தெளிவாகக் கடைசி வரை ஒரே மாதிரி இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. காரம் வேணும்ங்கறவங்களுக்கு எடுத்தாப் பிடிக்காது. நெ.த. புடலையைப் பாதியாக வெட்டி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துச் சிறிது நேரம் வைத்துவிட்டு அந்த உளுந்துப் பூரணத்தை உள்ளே வைத்து இட்லித் தட்டில் ஓர் நிமிடம் வேக வைத்து எடுத்துப் பின்னர் எடுத்து எண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டுப் பாருங்கள்.. ஹிஹிஹி சரஃபோஜி காலத்து ஸ்டைலாக்கும்.

    பதிலளிநீக்கு
  7. எங்க்வீட்டும்மாவும் இந்த ரசம் செய்வார்கள் அடிக்கடி அதற்கு சைடிஸ்சாக வெண்டைக்காய் பொறியல் உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வோம்...... குளிர் காலத்திற்கு மிகவும் ஏற்றது

    பதிலளிநீக்கு
  8. நெ த..சேம்...அரைத்து தான் செய்வேன்...ஆனால் சாம்பார் பொடியோ, தனியா பொடியோ சேர்க்காமல்..செய்வதுண்டு..இதிலேயே ரசப்பொடி.சேர்த்து செய்ததுண்டு.....இது ஜீரா மிளகு ரசம் இல்லையா அதனால்.பொடி சேர்க்காமல் தான் செய்வேன்...இனி அதையும்
    சாம்பார் பொடி சேர்த்து செய்து பார்க்கிறேன்... சேர்த்து செய்து பார்க்கிறேன்...மொபைல் வழி கமெண்ட்....தப்பு இருக்கலாம்...ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இன்னைக்கு ரசம் தான் போடுவாங்க.... அப்படின்னு முன்னமே தெரிஞ்சிருக்குமோ?. மக்களை இன்னமும் காணோமே,!!...

    பதிலளிநீக்கு
  10. நானும் மகளிடம் சொல்லி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  11. ஹப்பா கணினி கொஞ்சம் மூடில் இருப்பது போல் இருக்கு...

    நெல்லைத் தமிழன்...இப்படி அரைப்பதில் பூண்டு சேர்த்தும் செய்வேன். நல்லாருக்கும். பிடிப்பவர்களுக்கு!

    அப்புறம் எங்கள் (பிறந்த ) வீட்டிலும் சுட்ட அப்பளம் தான். மழைக்காலம் என்றால் வாவ்!! விறு விறுவென்று சுடச் சுடச் சாப்பிட அமிர்தம்!! இப்போது கூட இங்கு மழை பெய்து நல்லா சில்லுனு இருந்தப்ப செய்தேன்.. நான் உருளைக் கிழங்கு பொடிமாஸ் அல்லது பருப்பு உசிலி செய்வதுண்டு.

    இதில் தக்காளி சேர்க்காமல் ஜஸ்ட் இதே பொருட்களை நெய்யில் வறுத்துப் பொடி செய்து புளித்தண்ணீரில் போட்டு செய்வது மாமியாரின் வழக்கம். அதுவும் செய்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. புடலங்காய் உசிலி புதுசு

    பதிலளிநீக்கு
  13. ஜீராமிளகு ரஸம் என்றால் நீங்கள் குறிப்பிட்டவகைகளுடன்,தனியாவும் சேர்த்து,நெய்யில் வறுத்து அரைத்து,கொதித்த தக்காளி,புளிச்சாற்றுடன் கலந்து ஒரு கொதிவிட்டு நுரைத்து வரும்போது இறக்கி தாளித்துக் கொட்டுவதுதான்.கடுகு,பெருங்காயம். கறிவேப்பிலை. சீரக ரஸம் என்றால் புளிஜலம்,தக்காளி,ரஸப்பொடி,அல்லது ஸாம்பார்பொடி,உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து,ஊறின துவரம்பருப்பும்,சீரகமும் அரைத்துக்,கரைத்து விட்டு இறக்குவதும் ஒரு முறை. பச்சையாகவே வறுக்காமல் மிளகு,சீரகம், தனியாமற்றும் துவரம்பருப்பை ஊறவைத்து,அரைத்துகொதித்த புளிஜலத்துடன் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்குவதும் உண்டு. இப்போது தக்காளி இல்லாமல் எதுவும் இல்லை. எங்கள் ஊர் கத்தரிக்காய் பெயர்போனது. அதன் வதக்கலும்,சுட்ட அப்பளாம்,மணத்தக்காளி வற்றல் வருத்து அதுவும் இருக்கும். பூண்டும் பிடித்தவர்கள் சேர்க்கலாம். உங்கள் ரஸமும் ஜோரா இருக்கு. ஒரு குறிப்பில் நான்கு ஐட்டம் பார்க்கக் கொடுத்து விட்டீர்கள். தித்திப்பு இல்லாமல் எதுவும் இல்லை. ரஸித்துச் சாப்பிட முடிந்தது. மும்பை வந்திருக்கிறேன். மூன்று இடம் மாறி நான்காவதாக உங்கள் கைச்சாப்பாடு. நல்ல காரஸாரமா ரஸம் வைக்கும்போது துளி வெல்லம் கூட போடுபவர்கள் உண்டு. புடலை பருப்புசிலி நானும் செய்வதுண்டு. நன்றி நெ.தமிழன். அன்புடன். ரஸம்,ரஸமாக ரஸிக்கும்படி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. ஆஹா மிளகு ரசமோ? ஆவ்வ்வ்வ்வ் இந்த ரெசிப்பிபற்றித்தான் போனகிழமை தேடினேன், எனக்கொருவர் சொன்னார், சாதாரண ரசம் போலத்தான்... கொஞ்சம் மிளகைக் கூட்டிப் போடுங்கோ என.. நான் சாதாரண ரசத்துக்கே மிளகு கூடத்தான் போடுவேன்..:)

    இதில் 15 மிளகு போதும் எனச் சொல்லியிருக்கிறீங்க.. எனக்கு 4 கப் தண்ணிக்கு 20 மிளகுபோட்டும் காரம் வரவில்லை..... இங்கு மிளகும் இஞ்சியும் எப்பவும் காரம் குறைவாகவே இருக்கு. ஊரில் இருந்தபொது, மிளகைக்கூட்டி அம்மா ரசம் வைப்பா.. அது.. ஏக்க்க்க் ஏக் எக்.. என விக்கல் வரும்:)

    ஆனா உங்க ரெசிப்பி வித்தியாசமாக இருக்கு, பொருட்கள் குறைவாகவே சேர்த்திருக்கிறீங்க.. அடுத்து இந்த முறையிலும் செய்து பார்த்திடுறேன்.

    இதுவரை ரசத்துக்கு எந்தப் பருப்புவகையும் சேர்த்ததில்லை, இம்முறை சேர்க்கிறேன். இங்கு வீட்டில் ரசம் எனில் கப் இல்தான் குடிச்சுப் பழக்கம், உணவோடு யாரும் சாப்பிடுவதில்லை.

    பதிலளிநீக்கு
  15. நோஓஓஓஓ இன்று ஒரே பிங்கி மயமாவே இருக்கு இங்கின:) இதை நான் ஒத்துக்கவே மாய்ட்டேன்ன்:).. நேக்கு ரோயல்டி.. ராயல்ட்டி வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்:).

    அது என்ன பாயாசம் நெ.தமிழன்? அரிசிப் பாயாசமோ?... வார இறுதியில் சமைச்சாலும் கடவுளுக்குப் போதும் போதும் என அவர் சொல்லுமளவுக்குப் படைச்சிருக்கிறீங்க போல:)...

    பிளேட்டில ரைஸ் அதிகமா இருக்கு.. ரைஸ் ஐக் குறைச்சு பருப்புசிலியைக் கூட்டுங்கோ.. இப்பூடி எனில் என்ன ஆவுறது?:).. என் கண்ணுக்கு அந்த ரைஸ் வேகாததுபோலவே இருக்கே... அவசரப்பட்டு வடிச்சிட்டீங்களோ?.. அஞ்சூஊஊஊஊஊ கொஞ்சம் செக்:) குப் பண்ணிச் சொல்லுங்கோ.. ஸ்லீப் பண்ணியது போதும் அதிராவைப்போல எழுமுங்கோ ஏழியாஅ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  16. துரை அண்ணன் நோட் திஸ் பொயிண்ட்டூஊஊஊஊ:).. அதிரா 6 மணிக்கே எழும்பிட்டேன்ன்ன்:).. அஞ்சு இன்னமும் எழும்பல்லே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரியுதூஊஊஊஊ?:).. அதிரா குட் கேள்:).. அஞ்சு பாட் லேடி:))... ஹா ஹா ஹா ஹையோ மீ ரன்னிங்:))

    பதிலளிநீக்கு
  17. >> அதிரா 6 மணிக்கே எழும்பிட்டேன்ன்ன்:).. அஞ்சு இன்னமும் எழும்பல்லே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரியுதூஊஊஊஊ?:)..<<<

    இதிலேருந்து என்ன தெரியுது?..

    வீட்ல அதிகாலையில் சுடச்சுட காபி கிடைக்காது.. - ன்னு தெரியுது!?..

    பதிலளிநீக்கு
  18. புடலங்காவில் உசிலியா?! ரசம் செய்முறையும் புதுசு

    பதிலளிநீக்கு
  19. ////வீட்ல அதிகாலையில் சுடச்சுட காபி கிடைக்காது.. - ன்னு தெரியுது!?..////
    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) அதிரா குட் கேள்:) எனச் சொல்லுவீங்களென நினைச்சால்ல்ல்ல்ல்:)...

    பதிலளிநீக்கு
  20. //குளிர் பிரதேசத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும். //

    நான் வந்திட்டேன் :)

    எங்க வீட்ல ரசத்துக்கு நல்ல வரவேற்பு தினமும் செஞ்சாலும் ஓக்கேதான் மகளுக்கு :)
    விதவிதமா செஞ்சாலும் ஒவ்வொருவர் முறை மாறுபட்டது .அதேபோல சுவையும் ஒவ்வொருமுறையும் அதிகரிக்குது :)
    நானும் தக்காளி தோல் எடுப்பதில்லை நெல்லைத்தமிழன் ,அதை சேர்க்கும்போதுதான் சுவையே கூடுது .இந்த ரசத்துக்கு ஒரு கூட்டு செய்வேன் அதை விரைவில் இங்கே பகிர்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  21. நெல்லைத்தமிழன் நீங்க பொன்னி பச்சரிசியா ரசத்துக்கு செய்தீங்க ?
    இன்னும் குழைய இருந்தாதான் ரசத்துடன் பிசைஞ்சி சாப்பிட வசதி ..

    பதிலளிநீக்கு
  22. எனக்கு வீட்ல வளர்ந்த மணத்தக்காளி மட்டும் நிறைய இருக்கு :) ரெண்டு நாள் காயவெச்சி பாட்டிலில் போட்டு வச்சிருக்கேன் சில நேரம் ரசத்துக்கு தாளிச்சி கொட்டும்போது அதில் ஒரு 10 பொரிச்சி போடுவேன்..
    அப்புறம் பருப்பு சேர்ப்பதும் குறைவே

    பதிலளிநீக்கு
  23. //அப்பாவி athira said...
    ஆஹா மிளகு ரசமோ? ஆவ்வ்வ்வ்வ் இந்த ரெசிப்பிபற்றித்தான் போனகிழமை தேடினேன், எனக்கொ//


    ஹலோவ்வ் கம்ப பாரத புகழ் மியாவ் :) இது மிளகு ரசமில்லை :) நல்லா தலைப்பை பாருங்க
    ஜீரக ரசம் ..
    தானா வந்து வண்டியில் ஏறறது அப்புறம் குய்யோ முறையோனு சவுண்ட் விட வேண்டியது ஹஆஹாஆ :)

    பதிலளிநீக்கு
  24. சரி விடுங்க அப்பப்போ உங்களுக்கு 61 வயசு என்கிறதை சொல்லாமல் சொல்லிட்டு போறீங்க :)
    வயசான கண்ணுக்கு எல்லாம் ஆப்போசிட்டா தெரியுமாம் எங்க பாட்டி சொல்வாங்க

    பதிலளிநீக்கு
  25. இனிய காலை வணக்கம் துரை அண்ணா :)
    காலை உணவு சாப்பிடீங்களா :) என்னை தவிர வேற யாரும் அதாவது தேம்ஸ் கரையில் இருக்கும் அந்த நாலுகாலார் இப்படி விசாரிக்க மாட்டாய்ங்க :)

    பதிலளிநீக்கு
  26. கடைகளில் இருக்கின்ற ஐட்டங்களை கண்ணால் பார்ப்பதற்காகவே கிடைத்த சந்தர்ப்பங்களில் கடைக்குச் செல்வேன்//
    அங்கே உங்க ஊரிலும் இப்படி மித்தாய் கடைகள் இருக்கா ???
    இங்கே குஜராத்தி பஞ்சாபியர் கடைகள் நிறைய இருக்கு நானும் ஒருமுறை மிக்ஸர் வாங்கி பார்த்தேன் நம்ம ஊர் டெஸ்ட் இல்லை .யாரவது கேரளாக்காரர் கடை போட்டா நல்லா இருக்கும் :) இந்த ஸ்வீட் கடைகளில் மரவள்ளி கிழங்கை வேகவைச்சி அவனில் போட்டு ரோஸ்ட் செஞ்சி மிளகாய்த்தூள் தடவி தருவாங்க :)

    பதிலளிநீக்கு
  27. இதிலேருந்து என்ன தெரியுது?..

    வீட்ல அதிகாலையில் சுடச்சுட காபி கிடைக்காது.. - ன்னு தெரியுது!?..//

    ஹாஹா :) துரை அண்ணன் சரியா கண்டுபிடிச்சிட்டார் :)

    பதிலளிநீக்கு
  28. எங்கள் பிளாக் ஸ்ரீராம் - வெளியிட்டமைக்கு நன்றி. 4 வாரம் கழித்து வெளியிட்டிருந்தீர்களென்றால், இருக்கிற குளிருக்கு நீங்களும் பின்னூட்டம் எழுதியிருப்பீங்களோ?

    பதிலளிநீக்கு
  29. வாங்க துரை செல்வராஜு சார்... இப்போ குளிருக்கு இதமா (உங்க ஊரிலும் எங்க ஊரிலும்), யாராவது ரசம் சாதமும் ஏதேனும் ரோஸ்ட் தந்தால் நல்லாத்தான் இருக்கும் . ஆனால் பாருங்க... விதி வலியது. நாம ரெண்டுபேரும் சமைத்துச் சாப்பிட்டால்தான் உண்டு. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வருகைக்கு நன்றி கீதா சாம்பசிவம் மேடம். இனி எப்போது உளுந்து பூரணம் பண்ணுவேன் என்று தெரியலை. அதுனால ஒரு தடவை பருப்பு உசிலியை நீங்கள் சொல்வதுபோல் புடலைக்குள் வைத்து செய்துபார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  31. 'அவர்கள் உண்மைகள்' மதுரைத் தமிழன்... இப்பவாவது உங்க வீட்டம்மாவும் எல்லாம் சமைக்கறாங்கன்னு ஒத்துக்கிட்டீங்களே. ரசம் செய்வதை விட, அது பயங்கர சூடா இருக்கும்போதே ரசம் சாதம் சாப்பிட்டால் அட்டஹாசமா இருக்கும். அதுக்கு தொட்டுக்க எது இருந்தாலும் ஓகே. வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. தில்லையகத்து கீதா ரங்கன் - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் பூண்டு சேர்ப்பதில்லை (என் ஹஸ்பண்ட் ஸ்டிரிக்ட். புதுப் பழக்கம் எதுவும் உணவுல கூடாதுன்னு சொல்லியிருக்கா. ரெசிப்பியும் மரபு வழி மாறாத ரெசிப்பிதான் செய்யணும்னு சொல்லியிருக்கா). ரசத்துல நிறைவா தக்காளி இருந்தால், தொட்டுக்க எதுவும் வேண்டாம், வெறும் சுட்ட அப்பளாமே போதும்.

    பதிலளிநீக்கு

  33. Angelin said...
    ///ஹலோவ்வ் கம்ப பாரத புகழ் மியாவ் :) இது மிளகு ரசமில்லை :) நல்லா தலைப்பை பாருங்க
    ஜீரக ரசம் ..
    தானா வந்து வண்டியில் ஏறறது அப்புறம் குய்யோ முறையோனு சவுண்ட் விட வேண்டியது ஹஆஹாஆ///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏன் நெ.த சீரகம் போட்டிருக்காக... மொழகு:) போட்டிருக்காக.... து பருப்பு போட்டிருக்காக.. டக்காழி போட்டிருக்காக:).. கறிவேப்பிலை போட்டிருக்கிறாக... ஏன் பெறுங்:)காயம்கூடப் போட்டிருக்கிறாக:)... இவ்வளவும் போட்டும் அவர் இதை ஜீரக ரசம் எனச் சொல்லும்போது..:) நான் ஏன் மிளகு ரசம் எனச் ஜொள்ளக்கூடாதெங்கிறேன்ன்ன்ன்???:).. நேக்கு நீதி வேணும்ம்ம்ம்:) இல்லை எனில் இந்த விதம் விதமான ரசம் பற்றியே ஒரு பாரதம் எழுதிடுவேன்ன்ன்ன்ன்ன்ன்:))..

    துரை அண்ணன் நலம்தானே?:)... போஸ்ட்டை பப்ளிஸ் பட்டினைத்தட்டி வெளியிட்ட ஸ்ரீராம் நலம்தானே? மிளகு ரசம் செஒறி.. ஜீரக ரசம் செய்து தானே சாப்பிட்டுப்போட்டு எங்களுக்குப் படம் போட்டுக் காட்டிய நெ தமிழன் நலம்தானெ?:)... ஐஐஐஐஐ மீ தான் அதிகமா நலம் கேட்டிருக்கிறேன் இங்கின:)..

    பதிலளிநீக்கு
  34. அப்பாவி athira said...
    >>> ஆஹா மிளகு ரசமோ? ஆவ்வ்வ்வ்வ் இந்த ரெசிப்பிபற்றித்தான் போனகிழமை தேடினேன்..<<<

    எப்போ யார் எந்த சமையலறைக் குறிப்பு வெளிட்டாலும்!?..!?..

    வீட்ல வேற வேலை இல்லைன்னு நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  35. மீள் வருகைகளுக்கு நன்றி துரை செல்வராஜு சார்... 'ரசம்' என்ன சாதாரணமாச் சொல்லிட்டீங்க? என் அப்பாவோட ஊட்டி (என் பதின்ம வயதில்) சென்றிருந்தபோது அங்கு மலைப்பாங்கான ஒரு இடத்தில், அப்பாவுக்குத் தெரிந்த வீட்டில் (அது மின்சாரம் எடுக்கும் இடத்துக்கு அருகில் இருந்த குளிரான பகுதி), இரவு, சாதம், ஜீரக ரசம் மட்டும் தந்தார்கள். (அங்கெல்லாம் வாட்டர் ஹீட்டரை தரையில் ஆன் பண்ணிவைத்து, அதற்கு மேல், கொடியில் துணிகளைக் காயப்போடுவார்கள்). அந்தக் குளிருக்கு, வேறு எது தந்தாலும் அவ்வளவு அமிர்தமாக இருந்திருக்காது.

    பதிலளிநீக்கு
  36. @ Angelin said...

    //..இதிலேருந்து என்ன தெரியுது?..
    வீட்ல அதிகாலையில் சுடச்சுட காபி கிடைக்காது.. - ன்னு தெரியுது!?..//

    ஹாஹா :) துரை அண்ணன் சரியா கண்டுபிடிச்சிட்டார் :)

    அங்கே மட்டும் வேற கதையா!?.. இதே கதை.. கொறட்டை தானே!..

    என்ன ஒரு விஷயம்.. அங்கே காபி..ண்டால் இங்கே தேத்தண்ணி!.. அம்புட்டுத் தானேங்..

    பதிலளிநீக்கு
  37. வாங்க அப்பாதுரை சார்... புடலங்காய் பருப்பு உசிலி ரொம்ப நல்லா இருக்கும். 'கேட்டு வாங்கி சாப்பிட்ட உணவா' அது இருக்கட்டும். கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  38. @ ///ஹலோவ்வ் கம்ப பாரத புகழ் மியாவ் :) இது மிளகு ரசமில்லை :) நல்லா தலைப்பை பாருங்க.... ஜீரக ரசம்.. தானா வந்து வண்டியில் ஏறறது அப்புறம் குய்யோ முய்யோனு சவுண்ட் விட வேண்டியது ஹஆஹாஆ///

    ஆகா.. நக்கீரர் வாழ்ந்த இந்த உலகத்துல... தருமிக்கு பொற்கிழி கிடைக்கவே கூடாது..
    (நெ.த.. அவர்களே.. நக்கீரனுக்கு பெண்பால் நக்கீரியா?..)

    பதிலளிநீக்கு
  39. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி காமாட்சியம்மா. உங்கள் செய்முறைகளையும் படித்துக்கொண்டேன். நான் இதுவரை குழம்புக்கோ சாத்துமதுக்கோ வெல்லம் சேர்த்ததில்லை. நெடிய கருத்துக்கு நன்றி.

    "எங்கள் ஊர் கத்தரிக்காய்" - எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது. ஜெனீவாவைச் சொல்றீங்களா, இல்லை தில்லியா இல்லை நேபாளா இல்லை மும்பையா? கடைசியில்தான் நம்ம ஊரைச் சொல்றீங்கன்னு புரிஞ்சது.

    பதிலளிநீக்கு
  40. சுட சுட ரசம் அருந்தினாலும் சரி சூடான சாத்தில் போட்டு சாப்பிட்டாலும் சரி அது எப்பவும் ஒரு திருப்தியை கொடுக்கும் படங்களுடன் அருமை

    பதிலளிநீக்கு
  41. வாங்க அ. அதிரா (ஏஞ்சலின்- அப்பாவி என்பதை ஒவ்வொரு முறையும் டைப் பண்ண வேண்டாம்னுதான் அ. என்று போட்டிருக்கிறேன். நீங்க சும்மா 'அடாவடி அதிரா'ன்னு எழுதி எங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனையை உண்டாக்கிறாதீங்க :) )

    இந்த ரசத்தைச் செய்துபாருங்கள். தக்காளி, ஜீரகம், மிளகு எல்லாம் சரியான அளவில்தான் எனக்கு இருந்தது. ஞாபகம் வச்சுக்குங்க, நான் எனக்கு மட்டும்தான் உணவு தயார் செய்கிறேன். அதனால இந்த அளவில் ஒரு தடவை செய்துபார்த்தீங்கன்னா, உங்களுக்கு எப்படி அதிகம் பேருக்குச் செய்யும்போது மாற்றணும்னு தெரிஞ்சுடும்.

    'பிங்கி'மயமாக்கியது ஸ்ரீராம் அவர்கள். அவங்க கிட்ட ராயல்டிலாம் கேட்டுப் பிரயோசனமில்லை. அவர்கிட்ட இப்போ கொடுக்க ஒரு 4 வருஷப் பழைய போன் வச்சிருக்கார். அதைக் கடாசினாத்தான் புதுசு வாங்குவாராம். அத வேணும்னா கேட்டுப்பாருங்க.

    அன்றைக்கு கடலைப்பருப்பு/அரிசி சேர்த்த பாயசம் செய்தேன். உண்மையில் மீதி பாயசம் இன்னும் அடுப்பில் இருக்கிறது. எனக்கு இனிப்புகள் மிகவும் பிடிக்கும். எனக்கு சாப்பாட்டுல இன்டெரெஸ்ட் வரணும்னா, பாயசம், மாங்காய் ஊறுகாய் போன்ற சில ஐட்டங்களில் ஏதாவது ஒன்று இருந்தாலே போதும்.

    ரசம் தனியாக கப்பில் சூப் மாதிரி குடிப்பது எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாதது. துபாயில் 'ஸ்ரீகிருஷ்ணா ரெஸ்டாரன்டில்' (நம்ம மைசூர்பா கிருஷ்ணா கடைதான்) Bowlல் ரசம் மட்டும் கொடுப்பார்கள், நன்றாக இருக்கும்.

    நான் ஸ்ருதி கோலம் என்ற அரிசியை உபயோகப்படுத்துகிறேன். என் நண்பன் அறிமுகப்படுத்தியது இது. பொட்டாசியம் அது இதுல்லாம் இந்த அரிசில குறைவாம். (நெட்டில் தேடிப்பாருங்கள். sruti kolam) 'நான் பாஸ்மதி அரிசி சாப்பிடுவதை நிறுத்தி கன காலம் ஆகிவிட்டது (10 வருடங்களுக்கு மேல்). இந்த அரிசி கொஞ்சம் விலை ஜாஸ்தி. எனக்கு சாதத்தை பிழிந்து அதன் பிறகு ரசம் விட்டுக்கொள்ள அன்றைக்கு நேரமில்லை. தட்டும் சின்னத் தட்டுதான். (விடுமுறைனால இரண்டாவது தடவையும் அன்று சாப்பிட்டேன் :) )

    உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  42. ///துரை செல்வராஜூ said...
    அப்பாவி athira said...
    >>> ஆஹா மிளகு ரசமோ? ஆவ்வ்வ்வ்வ் இந்த ரெசிப்பிபற்றித்தான் போனகிழமை தேடினேன்..<<<

    எப்போ யார் எந்த சமையலறைக் குறிப்பு வெளிட்டாலும்!?..!?..

    வீட்ல வேற வேலை இல்லைன்னு நினைக்கிறேன்..///

    karrrrrrrrrrrrrrrr:) கடவுளே வைரவா இந்தக் கொமெண்ட் மட்டும்:).. அஞ்சுட கண்ணில பட்டிடக்கூடாதூஊ:).. துரை அண்ணன் பழப்புளி சேர்த்துச் செய்யும் எக் குறிப்பாயினும் நான் தேன்ன்ன்ன் கியூவில முன்னால நிற்பேன்ன்ன்:).. கறிக்குப் போடுவதை விட நான் என் வாய்க்குள் போடும் பழப்புளிதான் அதிகம்:).. அதிலயும் கனடாவில் மட்டும் தமிழ்க் கடையில் ஒரு புளி கிடைக்குது.. சீனிப்புளியம்பழமேதான்ன்ன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  43. ///துரை செல்வராஜூ said...
    ஆகா.. நக்கீரர் வாழ்ந்த இந்த உலகத்துல... தருமிக்கு பொற்கிழி கிடைக்கவே கூடாது..
    (நெ.த.. அவர்களே.. நக்கீரனுக்கு பெண்பால் நக்கீரியா?..)///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) வை திஸ் கொல வெறி:) நான் உங்களை நலம் விசாரிச்சிட்டேனெல்லோ:))..

    இருங்கோ நெ.தமிழன் டிக்‌ஷனறி புரட்டுறார்ர்.. விடையோடு வருவார்ர்:).

    ஊசிக்குறிப்பு:
    இப்போ நான் சமைப்பது “கீரிச்சம்மா” எங்கட தமிழ்க் கடையில கிடைக்குதே... என்னா சூப்பர்ர்.. அதிலயும் பிரியாணி அன்று செய்தேன்ன்.. வீட்டுக்கு வந்த விருந்தினர்.. கதிரையை விட்டு எழும்பி நிண்டு சாப்பிட்டார்ர் அவ்ளோ சுவை.. ஹா ஹா ஹா நிஜமா...

    பதிலளிநீக்கு
  44. நெல்லைத் தமிழன் said...
    //'பிங்கி'மயமாக்கியது ஸ்ரீராம் அவர்கள். அவங்க கிட்ட ராயல்டிலாம் கேட்டுப் பிரயோசனமில்லை. அவர்கிட்ட இப்போ கொடுக்க ஒரு 4 வருஷப் பழைய போன் வச்சிருக்கார். அதைக் கடாசினாத்தான் புதுசு வாங்குவாராம். அத வேணும்னா கேட்டுப்பாருங்க.///

    ஹா ஹா ஹா இல்ல ஸ்ரீராமின் ஃபோன் தொலைச்சிடுச்சூஊஊஊஊ.. அது ஏதோ ஒரு ஊர்ல:).. பெயர் வாயில் வருகுதில்லை:).. இப்போ புதுசு வச்சிருக்கிறார்ர்.. நாம் கேட்கத் தொடங்கியதிலிருந்து கதை கதை யா அவிட்டு விடுறார்:).. அப்போ அவரின் ஸ்கூட்டரை வைத்துப் பந்தயத்தை ஆரம்பிப்பொமா?:) ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  45. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஏஞ்சலின். எனக்கு சாதம் குழைந்து இருந்தால் பிடிப்பதில்லை. (அது ரசமோ, சாம்பாரோ, அதன் சுவையை மாற்றி 'குழை சாதம்' ஆகிவிடும். ஆனால் கொஞ்சமா பிசைந்துகொள்வேன். அன்று அவசரம்-வேறு என்ன-பசி தான்)

    எங்க ஊர்ல நிறைய மித்தாய் கடைகள் உண்டு. என்னை ஒரு கடையில், தயார் செய்யும் இடம்வரை அனுமதிப்பார்கள். ஒரு சமயத்துல 500 ஜாமூன், 500 லட்டுல்லாம் அவங்க தயார் செய்வது ஆச்சர்யமா இருக்கும். குவைத்திலும் இந்த மாதிரி கடைகளும் ராஜஸ்தானி இனிப்பு கடையும் உண்டு. எந்த ஊர் போனாலும் இந்த மாதிரி கடைகளில் ஆஜர் போட்டிடுவேன். (பாரிசிலும் ஒரு கடையில் பக்கோடா பாக்கெட் பார்த்தேன். உள்ளூரில் செய்து விற்கிறார்கள். 3 யூரோன்னு ஞாபகம். ரொம்ப நல்லா இருந்தது)

    ஏஞ்சலின் - இப்போதான் பி.பி.சில சொன்னாங்க. புயல் ஏதோ புறப்பட்டிருக்குன்னு (ஸ்காட்லாந்திலிருந்து). சாதாரணமாக இருக்கும்போதே அதிரடி. இப்போ புயலாவும் ஆயாச்சுன்னா? ஏதோ... ஜாக்கிரதையா இருந்துக்குங்க.

    பதிலளிநீக்கு
  46. ///ஏஞ்சலின் - இப்போதான் பி.பி.சில சொன்னாங்க. புயல் ஏதோ புறப்பட்டிருக்குன்னு (ஸ்காட்லாந்திலிருந்து). சாதாரணமாக இருக்கும்போதே அதிரடி. இப்போ புயலாவும் ஆயாச்சுன்னா? ஏதோ... ஜாக்கிரதையா இருந்துக்குங்க.///

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. என் கவித்திறன் பார்த்து எல்லோருக்கும் பொர்ர்ர்ர்ர்ர்ராமை பொயிங்குது:))

    பதிலளிநீக்கு
  47. நான் கொஞ்சம் லேட் இன்னிக்கு!
    நான் சிறிதளவு மாறுதல்களோடு இப்படித் தான் இந்த ரசம் செய்வேன் - துவரம் பருப்பை ஊற வைத்து விடுவேன். ஜீரகம், மிளகாய் வற்றல் மட்டும் தான் கூட அரைக்க. தக்காளி + புளி ஜலம்+உப்பு கொதித்த பின் இந்த அரைவையை ஊற்றிக் கலக்கணும். பொங்கி வரும் - ஜாக்கிரதையாக கலந்து ஒரு கொதிக்கு பின் இறக்கி, நெய்யில் கடுகு தாளித்துக் கொட்டினால் ரெடி!! கறிவேப்பிலை போடலாம். எங்கள் உறவுமுறை குழந்தை மழலையில் ஜீயாசம் என்றே சொல்வான்!! :-))
    உங்கள் செய்முறைப்படி செய்து பார்க்கிறேன். காம்பினேஷன்கள் அருமை!

    பதிலளிநீக்கு
  48. ஹையோ இதை தட்டி கேக்க யாருமில்லையா :) கவிப்புயலாம்

    பதிலளிநீக்கு
  49. கர்ர்ர்ர்ர் கிவிப்புயல் :) அதிராவ் :)
    புளிசாதம்னு சொன்னா அதில் புளி இருக்கும் அரிசி நிறைய இருக்கும் ஆனாலும் புளிசாதம்னுதானே சொல்றோம் :) அபப்டித்தான் இது ஜீரக ரசம் :)

    பதிலளிநீக்கு
  50. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூவிழி. இப்போ சமீபத்துல படித்தேன், 'சாதம்' என்பது தமிழ்ச்சொல் கிடையாது, 'சோறு' என்பதுதான் தமிழ்ச் சொல்லாம். எங்க வீட்டுலலாம் 'சோறு' என்பதை திட்டும் சொல்லாகத்தான் உபயோகப்படுத்துவார்கள். 'சோத்தைத் தின்னுண்டிருக்கான் படிக்காம'.என்று உபயோகப்படுத்துவார்கள்.

    பதிலளிநீக்கு
  51. ///Angelin said...
    கர்ர்ர்ர்ர் கிவிப்புயல் :) அதிராவ் :)
    புளிசாதம்னு சொன்னா அதில் புளி இருக்கும் அரிசி நிறைய இருக்கும் ஆனாலும் புளிசாதம்னுதானே சொல்றோம் :) அபப்டித்தான் இது ஜீரக ரசம் :)//

    ஹா ஹா ஹா கிவி:) அது இமாட ஊர்ப்பறவை:) இப்போ களமிறங்கி என்னை மிரட்டப்போறாவே:)..

    அப்போ நேக்கு மிளகுரசம் ரெசிப்பி செய்து போடச்சொல்லுங்கோ நெல்லைத்தமிழனிடம்.. அவர்தான் பக்குவமாச் செய்வார்... கீதாக்காவுக்கு தெரியாது இது:)(ஹையோ இண்டைக்கு எனக்கென்னமோ ஆச்ச்ச்ச்ச்ச்சு ஜாமீஈஈஈஈஈ:))..

    பதிலளிநீக்கு
  52. நாங்கள் சாதம் எனச் சொல்வதில்லை நெல்லைத்தமிழன்.. சோறு எனத்தான் சொல்லுவோம்ம்.. ஆனால் கோயிலில் சமைப்பதை கோயில் சாதம் என்போம்.

    பதிலளிநீக்கு
  53. வாங்க மிடில் கிளாஸ் மாதவி. குழந்தைகள் சொல்லும் மழலை கேட்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கும். நான் என் பசங்க சிறுவயதில் (இப்போதும்தான்) அப்போ அப்போ மூவி கிளிப் எடுத்துவைத்துக்கொள்வேன். அதுவும் ஏதாவது புது வார்த்தைகள் சொன்னாங்கன்னா, ரொம்ப ரிக்வஸ்ட் செய்து கேமராவில் மூவி கிளிப்பாக எடுத்துக்கொள்வேன். இதனால் என் பசங்க எப்படி மழலையா சொல்வாங்கன்னு நினைத்துப்பார்க்க முடிகிறது.

    வெண்டைக்காய் புளிவிட்ட கறிக்குப் பிறகு எதுவுமே நீங்க எழுதலை.

    பதிலளிநீக்கு
  54. "என் கவித்திறன் பார்த்து" - அட ராமா... இன்னும் என்ன கதையெல்லாம் எல்லோரும் கேட்கப்போறோமோ. அந்தக் காலத்துல 1500 சென்டிமீட்டர் ஓட்டத்துல ரெண்டாவதாக வந்தேன், ஆஷா போஸ்லே போல் நல்ல குரல் வளம்-பாடி அதனை வெளியிடப்போறேன் என்று பயமுறுத்தல், இப்போ 'கவிதை' எழுதுவேன் கவிப்பேரரசு ரேஞ்சுக்கு சொல்றாங்க. நாங்கதான் 'அப்பாவி' நம்புறோம். இந்த ஏஞ்சலினாவது உண்மையைச் சொல்லக்கூடாதா?

    பதிலளிநீக்கு
  55. நெல்லைத்தமிழன் நமக்கெல்லாம் மேலே ஒருத்தரை வம்புக்கு இழுத்திருக்கு க்கிவிப்புயல் :)
    கீதாக்கா சபைக்கு வாங்க :)


    //நெல்லைத்தமிழனிடம்.. அவர்தான் பக்குவமாச் செய்வார்... கீதாக்காவுக்கு தெரியாது இது:)(ஹையோ இண்டைக்கு எனக்கென்னமோ ஆச்ச்ச்ச்ச்ச்சு ஜாமீஈஈஈஈஈ:))..//

    பதிலளிநீக்கு
  56. @கவிப்புயல், அதிரடி அதிரா இப்போத் தான் கில்லர்ஜியோட போஸ்டிலே உங்களைப் பாராட்டிட்டு வந்தா இங்கே எனக்கே வேட்டா? இருக்கட்டும், இருக்கட்டும்! இப்போக் கொஞ்சம் மூச்சு விடறது கஷ்டமா இருக்கு! அதனால் சும்மா விடறேன். வைச்சுக்கறேன் அப்புறமா! :)))))

    பதிலளிநீக்கு
  57. ஏஞ்சலின், தாங்கீஸ்ஸ்ஸ்ஸ், தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்! :)))) என்னை அழைத்ததுக்கு நன்னி ஹை!

    பதிலளிநீக்கு
  58. @ நெல்லைத்தமிழன்:

    ஜீரா மிளகு ரசம்/சாத்தமுது சாப்பிட, அருந்த குளிர்காலத்துக்காகக் காத்திருக்கவேண்டியதில்லை. All season dish. என்ன,கோடைக்காலத்தில் மேலே ஃபேனை கொஞ்சம் வேகமா சுத்தவிட்டுட்டு சாப்பிடறது நல்லது .

    கூடவே சுட்ட அப்பளம், வடாம் இருந்தால் அதிருசி. வெண்டைக்காய், கத்தரிக்காய் வதக்கல் இருந்தாலும் சரியே.

    பதிலளிநீக்கு
  59. @ ... அதிரா :

    பாயசம் என்பதை பாயாசம் என்று சொன்னாலோ, எழுதினாலோ கேட்பதற்கும் பார்ப்பதற்கும் ஒரே ஆயாசமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  60. ஜீரக ரசம் சாப்பிட்ட யாரோ ஒருவர் ‘..புயல்’ ஆகி வீசிக்கொண்டிருப்பதாக அறிகிறேனே..!

    பதிலளிநீக்கு
  61. தேவையற்ற மறுமொழி உரையாடல்கள்

    பதிலளிநீக்கு
  62. நல்ல ரெசிபி மிளகு ரசம் கேள்வி பட்டிருக்கிறேன். ஜீரக ரசம் நன்றாகத்தான் இருக்கும் போலிருக்குது

    பதிலளிநீக்கு
  63. நான் கொஞ்சம் வரகொத்தமல்லி , பூண்டு இரண்டுபல் சேர்த்துக் கொள்வேன்.
    புடலை, பருப்பு உசிலி, பாயசம் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  64. அனேகமாகக் கடைசிப் பின்னூட்டமாக இருக்கும் என்று நினைக்கிறேன். தாமதமாகிவிட்டது.
    ஜீரா ரசம் மிளகு,கொஞ்சம் ஜீரகம் நிறைய, துவரம்பருப்பு ஊறவைத்து,பச்சையாக
    அரைத்துக் கொதிக்க விட்டு புளி ஜலம் மட்டும் சேர்த்து இன்னோரு கொதி.,
    பெருங்காயம் கிடையாது. கடுகு சீரகம் கருவேப்பிலை தாளிதம் மா.
    ஈயச்சொம்புக்கும் ஜீரா ரசத்துக்கும் நல்ல காம்பினேஷன்.
    மிளகு ரசத்தில் துளி ஜீரகம் உண்டு, வறுத்து அரைத்துச் செய்வதால்
    ஒரு கொதி போதும்.
    தக்காளி சேர்ப்பது இல்லை. அதற்குத்தான் தக்காளி ரசம் இருக்கே.கொத்தமல்லி
    போட்டு செய்ய. பிரமாதமான தளிகை பகவானுக்கு. இவ்வளவு வில்லுவில்லாக எப்படி சாதம் சாப்பிடுகிறீர்கள். எனக்கு தொண்டையில் இறங்குவது கஷ்டம்.
    பசங்க ரெண்டு பேரும் இப்படித்தான் சாப்பிடுகிறார்கள்.
    பெண் வீட்டில் என் மாதிரிதான்.
    நிறைவா சாப்பிட்டு நன்றாக இருக்கணும்.
    புலவர் இராமானுச ஐய்யாவுக்கு வணக்கம்.

    பதிலளிநீக்கு
  65. கொமெண்ட்ஸ் ஐப் படிக்காதீங்க..:) போஸ்ட்டை மட்டும் படிங்கோ எண்டால்ல் ஆருமே கேட்பதில்லை:).. முதல்ல கொமெண்ட்ஸ் படிச்சு.. அதுக்குத்தான் பின்னூட்டமும் விழுது ஹா ஹா ஹா:))..

    நல்லவேளை நான் கும்பிட்ட ஜாமி:) என்னைக் கை விடேல்லை:) கீதாக்கா வந்த நேரம்.. நான் தேம்ஸ்க்குப் போயிருந்தேன்:))..

    //November 20, 2017 at 5:29 PM
    ஏகாந்தன் Aekaanthan ! said...
    @ ... அதிரா :

    பாயசம் என்பதை பாயாசம் என்று சொன்னாலோ, எழுதினாலோ கேட்பதற்கும் பார்ப்பதற்கும் ஒரே ஆயாசமாக இருக்கிறது.///

    ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணன்.. பாயாசம் என்பது தானே கரீட்டூ?:) ஹையோ என்னை எல்லோரும் கொயப்பீனமே:) அதுதான் நான் இப்போ புயலாகிட்டேன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  66. //இருக்கிற குளிருக்கு நீங்களும் பின்னூட்டம் எழுதியிருப்பீங்களோ?//

    குளிரா? புழுங்குகிறது! நான் ஒரு வரி உங்கள் பதிவிலேயே எழுதி இருக்கிறேன். கவனிக்கவில்லை போலும்! மாற்று நிறத்தில், அதுவும் என் ப்ளூ நிறத்தில் எழுதினால் தெரிந்து கொண்டு விடுவார்கள் என்று நினைத்தது என் பிசகு!

    :))

    பதிலளிநீக்கு
  67. மிளகு, சீரகம் எப்போதுமே பொடி செய்து தயாராய் இருக்கும் எங்கள் வீட்டில். சூடான சாதத்தில் நெய் சேர்த்து கூட கலந்து கொள்ளலாம். உப்பு சேர்க்காமல் பொடித்து வைத்திருப்போம். உப்பு சேர்த்தால் நீர் விட்டு விடும். எனவே ரசம் செய்யும்போது பெருங்காயத்துடன், அந்தப் பொடியிலிருந்து இரண்டு சிட்டிகை தூவி இறக்குவோம்.

    பதிலளிநீக்கு
  68. தக்காளியை அரைத்து விடுவது ஒருவகை, பிசைந்து, அல்லது பத்தையாய் போடுவது ஒருவகை. சிறுநீரகக் கல் வந்ததிலிருந்து நாட்டுத் தக்காளி பாவிப்பதில்லை!!!! பெங்களூரு தக்காளிதான். எனவே தாராளமாய் இரண்டு மூன்று கூடப் போடுவோம். பெருங்காயம் கட்டாயம் உண்டு. இறக்கும்போது கொத்துமல்லி பொடியாய் நறுக்கிச் சேர்ப்போம். பச்சை மிளகாய் ரசம் கொதிக்க ஆரம்பிக்கும்போதே ஒன்றிரண்டு சேர்ப்பேன். தனி வாசனை! பருப்பு வேகவைத்து அதைத் தண்ணீரில் நன்குக் கரைத்து நல்ல உயரமாய் வைத்துக் கொண்டு நுரை ததும்ப ஊற்றுவது உண்டு!.

    பதிலளிநீக்கு
  69. புடலையை எப்படிச் செய்தாலும் எனக்குப் பிடிக்காது. போனால் போகிறது என்று எப்போதாவது மிளகுடன் சேர்த்து கூட்டு செய்தால் சாப்பிடுவதுண்டு. என்னைப்பொறுத்தவரை உசிலி என்றால் வாழைப்பூவில் மட்டும்தான். கொத்தவரங்காய், முட்டைகோஸ், இவை எல்லாம் போர்!

    பதிலளிநீக்கு
  70. @ ஸ்ரீராம்:

    //நாட்டுத்தக்காளி பாவிப்பதில்லை//

    நாட்டு தக்காளி, நாட்டுக்கோழி, நாட்டு நாய், நாட்டு மாடு எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு நாடு கெட்டுப்போச்சுன்னா என்ன அர்த்தம்? சினிமால கூட நாட்டு ஹீரோயின் வேண்டாங்கறாங்களே.. எங்கே போய் இதெல்லாம் சொல்றது?

    பதிலளிநீக்கு
  71. //எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு நாடு கெட்டுப்போச்சுன்னா என்ன அர்த்தம்?//

    ஸார்... "நாடு அதை நாடு..." என்கிற பாட்டைக் கேட்டுக் கெட்டுப்போய் விட்டேன்!

    பதிலளிநீக்கு
  72. ஶ்ரீராம்... முட்டைக்கோசில் உசிலியா? இதுவரை நான் சாப்பிட்டதில்லை. இங்க அடுத்த மாச இறுதிலேர்ந்து மூணு மாசத்துக்கு புத்தம் புதிய கோஸ் ரொம்ப குறைந்த விலைக்கு வரும். எனக்கு கோஸைப் பார்த்தால் மிளகூட்டுதான் ஞாபகம் வரும். மற்றவைகளுக்குப் பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  73. குளிருக்கு ஏற்ற ரசம். இன்றைக்கு அதான் செய்யப் போறேன்! :)

    பதிலளிநீக்கு
  74. @நெ.த. ஶ்ரீராம் முட்டைக்கோஸ் பருப்பு உசிலி எப்படிச் செய்வார்னு தெரியலை. நான் சாதாரணமாகச் செய்யும் முறை இது! முட்டைக்கோஸை இலை, இலையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நடுவில் உள்ள நரம்பை நீக்கி விட்டு இலையைச் சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் பொடி தடவி எடுத்துக் கொண்டு அரைத்த பருப்பு உசிலி விழுதை அதில் பரத்த வேண்டும். இன்னொரு முட்டைக்கோஸ் இலையால் மூட வேண்டும். அல்லது ஒரே இலையிலேயே ஒரு பக்கமாக விழுதைப் பரத்திய பின்னர் அதே இலையாலேயே மூடலாம். இப்படி நமக்குத் தேவையான இலைகளில் உசிலி விழுதைப் பரத்தி மூடியபின்னர் அவற்றை இட்லித் தட்டில் வைத்து வேக விடவேண்டும். பின்னர் நீளமாகவோ, சதுரமாகவோ நறுக்கிக் கொண்டு கடுகு, உபருப்பு தாளித்துக் கொண்டு எண்ணெயில் போட்டுப் பிரட்டி எடுக்க வேண்டும். கிட்டத்தட்ட சேம்பு இலையில் செய்வது போலத் தான்!

    பதிலளிநீக்கு
  75. நியூஸ் 7 தொலைக்காட்சியில் முன்னெல்லாம் மாலை நாலரை மணிக்கு உணவே மருந்து என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதில் வீட்டின் அஞ்சறைப்பெட்டிப் பொருட்களைக் கொண்டே சித்த வைத்திய முறையில் சமைப்பது பற்றிச் சொல்வார்கள். ஒரு முறை நாட்டுத் தக்காளி குறித்த பேச்சு வரும்போது அதில் வந்த சித்த வைத்தியர் தாராளமாக நாட்டுத் தக்காளி சேர்க்கலாம் என்று சொன்னார். ஆங்கில மருத்துவர்கள் அதைச் சாப்பிடக் கூடாது எனத் தடுப்பார்கள் ஆனாலும் நீங்கள் தைரியமாகச் சேர்க்கலாம், சிறுநீரகப் பையில் கல் இருப்பவர்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படக் காரணம் இல்லை என்று சொன்னார். என்றாலும் நாங்கள் எப்போவும் நாட்டுத் தக்காளி தான் வாங்குகிறோம். ரசத்துக்குப் பாதி போட்டால் அதிகம். மற்றவற்றிற்கும் நாட்டுத் தக்காளியே பயன்படுத்தி வருகிறோம்.

    பதிலளிநீக்கு
  76. ஏகாந்தன்-வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்கள் எழுதியிருந்ததைப் படிக்கும்போது எங்க அப்பா அவருடைய வெள்ளிக்கிண்ணத்துல சாப்பிட்டது நினைவுக்கு வருது. அன்றும் இந்த ரசம்தான்.

    பதிலளிநீக்கு
  77. வருக புலவர் இராமானுசம் ஐயா. இதெல்லாம் பதிவைப் படித்துவிட்டுச் செய்யும் கலாய்த்தல்கள்தானே. நன்றி.

    பதிலளிநீக்கு
  78. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அசோகன் குப்புசாமி.

    பதிலளிநீக்கு
  79. வாங்க கோமதி அரசு மேடம். பூண்டு அரைத்துவிட்டுச் சேர்த்தால் நன்றாக இருக்குமோ? செய்துபார்க்கிறேன். (ஹஸ்பண்ட் கிட்ட சொல்லாமல்)

    பதிலளிநீக்கு
  80. வாங்க வல்லிசிம்ஹன் அம்மா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனக்கு சாதம் 'விரைவிரையாக' இருக்கணும். (அதே சமயம் சாஃப்டா). குழைந்த அரிசி எனக்குப் பிடிப்பதில்லை. பொதுவா சாத்துமதுக்கு, சாதத்தைக் கொஞ்சம் பிசைந்துகொண்டு பிறகு ரசம் விட்டுப்பேன். அன்றைக்கு அவசரம்.

    பசங்க, பெண் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சாதம் இருக்கணும்னா உங்களுக்கு ஆரம்பத்தில் கஷ்டம்தான். என் அகத்தில், பையனுக்கு இஷ்டமானது பெண்ணுக்கு அவ்வளவு பிடிக்காது. அதேபோல் பெண் விரும்பிச் சாப்பிடுவது பையனுக்குப் பிடிக்காது. நான், அவியல் பண்ணிவிட்டு, உனக்குப் பிடிக்குமே என்றால், எனக்கெங்க பிடிக்கும், அவனுக்குத்தான் பிடிக்கும் என்று சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
  81. ஸ்ரீராம் - ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தத் தளத்தில் உங்களுடைய பல மறுமொழிகளைப் பார்க்கிறேன். கருத்துக்களுக்கு நன்றி.

    அப்போ அப்போ மழை பெய்யுதாம், வானம் மந்தாரமா இருக்காம். ரோடுல தண்ணீர் சில சமயம் வெள்ளம்போல் பாயுதாம்.. இப்படி இருக்கறச்சே, 'புழுங்குது' என்று சொல்றீங்களே. (ஆனா, சென்னை வந்தால் எனக்கு எப்போவும் ரொம்ப சூடாக இருப்பதுபோன்றே இருக்கும். எப்படா யதாஸ்தானம் வந்து சேருவோம் என்று இருக்கும்)

    மிளகு சீரகப்பொடி - அட இது நல்லா இருக்கே. சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட நல்லா இருக்கும்.

    தக்காளில இருக்கிற விதைகள்தான் பிரச்சனை. நாட்டுத் தக்காளில எடுப்பது கஷ்டம். பிடி தக்காளில விதைகளை எடுப்பது சுலபம். ஆனா இந்தமாதிரி மரபணு மாற்றப்பட்ட காய்/கனிகளினால் பிரச்சனை என்று சொல்கிறார்கள். 25 வருடத்துக்கும் மேலாக மரபணு மாற்றப்பட்ட காய்/கனிகளைச் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். (இங்கு, விதையில்லாத ஆரஞ்சு, ஆரஞ்சுப் பழத்தின் கீழ் சிறு ஆரஞ்சுப்பழம் சேர்ந்து ஒரே ஆரஞ்சாக இருக்கும் விதையில்லா ஆரஞ்சு, நிறைய வரும். Naval ஆரஞ்சு என்று சொல்வார்கள். இதெல்லாம் சாப்பிட்டபிறகு, நம்ம ஊர் சாத்துக்குடியைப் பார்த்தாலே பிடிக்காது. இந்த ஆரஞ்சில் தோலெடுப்பது சுலபம், ரொம்ப ஜூஸியாக இருக்கும். நான் கமலா ஆரஞ்சைச் சொல்லலை-அதுனால ஹெல்த்துக்கு அவ்வளவு உபயோகம் கிடையாது)

    ஸ்ரீராம்-புடலை என்று சொன்னவுடன் எனக்கு ஞாபகம் வருகிறது. இப்போ 15 வருடங்களாக 'குட்டைப் புடலை' அங்கு நிறைய கிடைக்கிறது. முன்பெல்லாம் புடலை என்பது நீளமாகத்தான் இருக்கும். குட்டைப் புடலை ரொம்ப நல்லா இருக்குமே. ஏன் பிடிக்கலைனு சொல்றீங்க?

    வாழைப்பூவைக் கொடுத்து உங்களைக் 'கள்ளன்' எடுக்கச் சொன்னால், விரைவில் வாழைப்பூ பருப்புசிலியும் பிடிக்காமல் போய்விடும். அத்தனை வேலை.

    பதிலளிநீக்கு
  82. வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ். (என்ன இப்போ கூட்டணி அமைச்சுட்டீங்க? மூவர் கூட்டணி அமையறதுனால அடிக்கடி இடுகை போட முடியுது). நாம் இருவருக்கும், 'நமக்கு நாமே'தான். செய்துபாருங்கள். அடிக்கடி செய்வீர்கள் (பயங்கரக் குளிர் காலம் அங்கு வரப்போவதால்)

    பதிலளிநீக்கு
  83. நன்றி கீதா சாம்பசிவம் மேடம். நிச்சயம் என் ஹஸ்பண்ட் இங்க வரும்போது (இன்னும் 4 வாரங்களில்) முட்டைகோஸ் பருப்புசிலி உங்க மெதடில் செய்யச்சொல்கிறேன். இதுவரை கோஸ் பருப்புசிலி சாப்பிட்டதேயில்லை. அவள் வரும் நேரம் இங்கு கோஸ் சீசன் ஆரம்பிக்கும். (இருந்தாலும், இங்கு சீசன்னு ஒண்ணுமே கிடையாது. இப்போகூட நான் மாம்பழம்-எகிப்து வாங்கினேன். ஒரு பழம் கிட்டத்தட்ட 1 1/2 கிலோ, வெளியில் பச்சை உள்ளே ஆரஞ்சு-மஞ்சள் வண்ணம்)

    நாட்டுத் தக்காளியைப் பற்றிய உங்கள் கருத்து சரிதான். நம் ஊரில் கிடைக்கும் நம் பாரம்பர்ய உணவுகள் நம் உடல் நலத்தைக் கெடுக்காது. கொஞ்சம் அளவில் மட்டும் கவனம் வைத்துக்கொண்டால் சரி.

    மீள் வருகைகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  84. ஆங்கில அகராதியிலேயே இடம்பிடித்த ரெசிப்பி ஆயிற்றே milakuthanni

    பதிலளிநீக்கு
  85. வாங்க ஜி.எம்.பி. சார்... ரொம்ப நாளைக்கு அப்புறம், 'எனக்குப் பிடிக்காது'ன்னு சொல்லலை. பெங்களூர் குளிருக்கு உகந்ததாயிற்றே. நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!